கருணையே உருவான சென்னை ஸ்ரீ காளிகாம்பாள்!

Su.tha Arivalagan
Oct 15, 2026,03:39 PM IST

- முனைவர் என்.பத்ரி


சுமார் 3000 ஆண்டுகள் பழமையான சென்னை காளிகாம்பாள் 1677 ம் ஆண்டு சத்ரபதி சிவாஜி வணங்கி வழிபட்டு சென்ற தெய்வம் ஆவார். இக்கோவிலின் வாசலில் இருக்கும் கிழக்கு ராஜகோபுரம் 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது. 


தற்போதுள்ள ஆலயம் 1639-ம் ஆண்டு விஸ்வகர்மா குலத்தவரால் கட்டப்பட்டது. இத்தலம் தோன்றி சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர்.


அன்னை காளிகாம்பாளிடம் பாரதியார்  உரிமையோடு பேசி வந்தவர். ஆதிபராசக்தியின் அபூர்வ சக்திகளில் ஒருவளே அன்னை காளிகாம்பாள் ஆவார். இத்தலத்தில் அமாவாசை தோறும் ஸ்ரீகாயத்ரி தேவிக்கும், விஸ்வ பிரம்மத்துக்கும் விஸ்வகர்ம வழிபாட்டுக் குழு சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.


இத்தலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 5 மணிக்கும், ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கும் சிறுவர்களுக்கான ஆன்மீக வகுப்பு இலவசமாக நடைபெற்று வருவது ஒரு கூடுதல் சிறப்புத் தகவலாகும்.


குணவாயில்  - குடவாயில்




இத்தலத்தில் தம்புச் செட்டித் தெருவில் உள்ள கிழக்கு கோபுர வாசல், “குண வாயில்” என்றும், அரண்மனைக்காரன் தெருவில் உள்ள மேற்கு கோபுர வாசல் “குட வாயில்” என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் நடைபெறும் சுவாசினி பூஜை சுமங்கலிகளுக்கு விசேஷ அருள் தருவதாகும். இதற்காகவே சென்னையில் வேறு எங்கும் இல்லாதபடி இத்தலத்தில் “சுவாசினி சங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.


இத்தலத்தில் மேற்கு நோக்கிய நிலையில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயரை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்தில் அம்மனை வழிபட்டால் காஞ்சீபுரம் காமாட்சி அம்மனையும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரையும் வழிபட்ட பலன் கிடைக்கும். இத்தலத்தில் வெள்ளிக்கிழமை தோறும் கன்னி பூஜை, கோ பூஜை, திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது. 


இத்தலத்தின் உற்சவர் பெயர் பெரிய நாயகி. இத்தலத்தின் தல விருட்சம் மாமரம் ஆகும். இத்தலத்தின் வடமேற்கு பகுதியில் அகோர வீரபத்திர சுவாமிக்கு  பவுர்ணமி தினத்தன்று வெற்றிலை மாலை சார்த்தி வழிபட்டால் பில்லி, சூனியம், ஏவல் போன்றவை நம்மை  விட்டு விலகி விடும்.


இத்தலத்தில் உள்பிரகாரத்தில் அருணாசலேஸ்வரர், நவக்கிரகங்கள், வள்ளி-தெய்வானை சமேத முருகர், ஸ்ரீ வீரபகாமங்கர், அவர் சீடர் சித்தையா, ஸ்ரீ கமடேஸ்வரர், ஸ்ரீதுர்கா, ஸ்ரீ சண்டிமகேஸ்வரர், பைரவர், பிரம்மா, சூரிய-சந்திரர்கள் ஆகியோரின் சன்னதிகளும், வெளிப்பிரகாரத்தில் சித்தி விநாயகர், கொடி மரம், வடகதிர்காம முருகன், ஸ்ரீசித்தி புத்தி விநாயகர், ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீதுர்கா, யாகசாலை, ஸ்ரீநடராசர், ஸ்ரீமகாமேரு, ஸ்ரீவீரபத்திர மகா காளியம்மன், ஸ்ரீ நாகேந்திரர், ஸ்ரீவிஸ்வ பிரம்மா ஆகியோரின் சன்னதிகளும் அமைந்துள்ளன.


இந்தக் கோவில் கடற்கரையில் இருந்த போது காளிகாம்பாள் மிகவும் உக்கிரமாணவளாக இருந்ததாகவும், தம்பு செட்டி தெருவுக்கு மாறிய பிறகு சாந்தம் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்திரன், குபேரன், வருணன், வியாசர், பராசரர், அகத்தியர், ஆங்கீரேசர், புலஸ்தியர், விராட புருஷன் விஸ்வகர்மா ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர்.


உள்ளம் உருகுதய்யா


“உள்ளம் உருகுதய்யா… முருகா…” என்று டி.எம்.சவுந்தராஜன் பாடிய இனிமையான கந்தன் பாடலை இயற்றியவர் ஸ்ரீ ஆண்டவன் பிச்சி என்பவர் 1952-ம் ஆண்டு  காளிகாம்பாள் கோவிலில் உள்ள வடசுதிர்காம முருகப்பெருமான் சன்னதி முன்பு அமர்ந்து இந்த பாடலை பாடினாராம்.


காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பன்றிமலை சுவாமிகள், காயத்ரி சுவாமிகள், தவத்திரு ராமதாசர் உள்பட பல மகான்கள், ஆன்மீகப் பெரியோர்கள் காளிகாம்பாளை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம், தும்பட்டம், வீண் பெருமை, தன்நிலை உணராமை போன்றவற்றை காளிகாம்பாளை வழிபட, வழிபட நம் மனதில் இருந்து நீங்கச் செய்யலாம். காளிகாம்பாளுக்கு “நெய்தல் நில காமாட்சி” என்றும் ஒரு பெயர் உண்டு.


காளிகாம்பாளின் அவதாரம் நீலியாய், சூலியாய், காளியாய் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.காளிகாம்பாளை முறைப்படி தியானித்து வழிபடுபவர்கள் நிச்சயம் செல்வந்தர்கள் ஆகி விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.காளிகாம்பாள் அருள்புரியும் இத்தலத்தினை இந்திரன், குபேரன், விராட் புருஷனான ஸ்ரீ விஸ்வகர்மா ஆகியோர் போற்றி துதித்துள்ளனர்.


காளிகாம்பாள் அவதரித்த இந்த இடத்தை நம் முன்னோர்கள் “சொர்ணபுரி” என்றும் பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர். காளிகாம்பாள் ஆலயத்தின் பரிவார தேவதை கடல் கன்னியாகும்.கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தில் அம்பாள் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறாள். இக்கோவிலில் ராஜகோபுரம், நடராஜ மண்டபம், காயத்ரி மண்டபம் ஆகியனவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. 


எலுமிச்சம் பழ தீபம்


சிவனுக்கும், பார்வதிக்கும் ஏற்பட்ட ஊடலை பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசனம் முடிந்து சிவன்-பார்வதி திரும்பி வரும்போது, ஊடல் உற்சவம் இக் கோ விலில் நடத்தப்படுகிறது.செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழம் தீபம் ஏற்றி வழிபடுவது பக்தர்களுக்கு கூடுதல் நன்மையைத்  தரும்.


சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம், காணபத்யம், சவுரம் ஆகிய 6 சமயங்களுக்கும் பொதுவானவளாக காளிகாம்பாள் இயங்குகிறாள். தமிழ்நாட்டில் இருந்து மட்டுமின்றி வெளி நாடுகளில்  இருந்தும் பலர் இத்தலத்துக்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள். திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் ஸ்ரீ காளிகாம்பாள் கருவறையில் உள்ள மூலவருக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து, அந்த மஞ்சளை பயன்படுத்தி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.


புராணங்களில் இத்தலம் சொர்ணபுரி, பரதபுரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மச்ச புராணம், வாமன புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம், பவிஷ்ய புராணம் ஆகிய புராணங்களில் இந்த கோவிலைப் பற்றி குறிப்புகள் உள்ளன. காளி பிறந்த தினமான கார்த்திகை அமாவாசை தினத்தன்று காளி ஜெயந்தி விழா மிக சிறப்பாக இங்கு நடைபெறுகிறது. வசந்த நவராத்திரியை முன்னிட்டு குங்கும லட்சார்ச்சனை கடந்த 50 ஆண்டுகளாக இங்கு  தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


விராட புருஷ விஸ்வகர்மா சன்னதியில் வழிபடும் போது “ஓம் தேவ தேவ மகா தேவ விஸ்வப்பிரம ஜகத் குருவே நம” என்று சொல்லி வழிபாடு செய்யலாம்.  இத்தலத்தில் பூந்தேர், கிண்ணித்தேர், வெள்ளித் தேர் என்று மூன்று வகையான தேர்கள் உள்ளன.


காஞ்சிபுரத்து காமாட்சி அம்மன்




தினமும்  மூன்று கால பூஜைகள் நடத்தப்படும் இக்கோவிலில்  இரவு நடக்கும் அர்த்த ஜாம பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. நாகலோக கன்னிகளும், தேவலோக கன்னிகளும் அன்னை காளிகாம்பாளை வழிபட்டு பூர்வ ஜென்ம புண்ணியங்களை அடைந்தனர்.பவுர்ணமி தோறும் இரவு 7 மணிக்கு அம்பாளுக்கும், ஸ்ரீ காயத்ரி தேவிக்கும் கூட்டு வழிபாடும், பூஜையும் நடைபெறுகிறது.


இவ்வாலயத்தில் தரிசனத்துக்காக யாராக இருந்தாலும் வரிசையில் வந்துதான் அம்பாளை வழிபட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலத்தில் பக்தர்கள் யாரும் இரவில் தங்க அனுமதிக்கப்படுவதில்லை. இக்கோயிலில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் இத்தலத்தில் நம் வேண்டுதல்கள் எல்லாம் குறைவின்றி வெற்றி பெறும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.வாழ்வில் ஒரு முறை நாம் சென்று தரிசிக்க வேண்டிய தெய்வமாவார் சென்னை காளிகாம்பாள் அம்பாள்.


இந்தக்  காளிகாம்பாள் சன்னதி முன்பு உள்ள 12 கால்  மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தால் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.காளிகாம்பாள் தலத்தில் உள்ள ஒவ்வொரு சன்னதியும், பகுதியும் வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது.காளிகாம்பாள் மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


காளிகாம்பாளின் மொத்தம் 12 அம்சங்களில் ஒன்று காஞ்சிபுரத்து காமாட்சி அம்மனாகும். பாரிமுனை காளிகாம்பாள் தலத்தில் குங்குமம் பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வும், மோட்சமும் கிடைக்கும்.


(டாக்டர். என். பத்ரி சுமார் 50 ஆண்டுகள் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியராகத் தொடங்கி, பள்ளித் தலைமை ஆசிரியர், கல்வியியல் கல்லூரி முதல்வர் மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் எனப் பல தளங்களில் பணியாற்றி, தற்போது பொறியியல் கல்லூரியின் கௌரவ ஆங்கிலப் பேராசிரியராக விளங்குபவர். கல்வியியல் மற்றும் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம், 4 முதுகலை பட்டங்கள் பெற்ற இவர், 1997-98-இல் தேசிய NCERT விருதைப் பெற்றவர். அகில இந்திய வானொலிக் கல்வி ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பணியாற்றி, கிராமப்புற மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் வழியாக வழிகாட்டியுள்ளார். 'மை இங்கிலீஷ் கற்றல் அகாடமி' (MELA) நிறுவனச் செயலாளரான இவர், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க உறுப்பினராகவும், புதுவை அரசின் சிறந்த கவிஞர் விருதைப் பெற்றவராகவும் திகழ்கிறார். 800-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 100 சிறுகதைகள் எழுதியுள்ளார். முதியோர் மற்றும் இளைஞர் நலனை மையமாகக் கொண்டு 'முதுமை ஒரு வரம்', 'வாய்ப்புகள் வெற்றிகள் ஆகட்டும்' உட்பட பல நூல்களைப் படைத்துள்ளார்)