நவராத்திரி.. சோழர் காலத்தில் அரசு விழா.. நாயக்கர்கள் காலத்தில் 9 நாள் திருவிழா!

Oct 13, 2026,04:13 PM IST

- சுதா திருநாராயணன்


நவராத்திரி காலங்களில் தேவி ஸ்துதி  செய்வதும்  அம்பாள் ஸ்லோகங்களை பாராயணம் செய்வதும் கல்வி செல்வம் வீரம் அனைத்தையும் தரும். அரசாங்க திருவிழாவாக சோழர் காலத்தில் நவராத்திரி கொண்டாடப்பட்டது.


நாயக்கர்களின் காலத்தில் தான் நவராத்திரி விழா தமிழ்நாட்டில் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக மாறியது.  விஜயநகர மன்னர்களால் மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறை நவராத்திரி காலத்தில் ஏற்படுத்தப்பட்டது.


முதன் முதலில் நவராத்திரி  விழாவை கொண்டாடும் அதிகாரம் பெரிய அரசர்களுக்கு மட்டுமே இருந்தது. திருமலை நாயக்கர் ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு நவராத்திரி கொண்டாடும் உரிமையை முதன் முதலாக வழங்கினார். இதனால்தான் தமிழகத்தில் நவராத்திரி விழா பரவ ஆரம்பித்தது.


நவராத்திரி நாட்களில் பெண் குழந்தைகளுக்கு பட்டு பாவாடை சட்டை மற்றும் அணிலன்கள் வாங்கித் தந்து கன்யா பூஜை செய்வதால் அனைத்து செல்வங்களையும் பெறலாம் என்ற நம்பிக்கை நிலவுகிறது. 




புராணங்களில் ராமபிரான் நவராத்திரி பண்டிகையை கொண்டாடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பரமேஸ்வரனும் பரமேஸ்வரியும் ஊஞ்சலில் எழுந்தருளி இருப்பதை  நவராத்திரி ஒன்பது நாளும் தரிசனம்  செய்தால் அமோகமான பலன்கள் கிட்டும்.


நவராத்திரி ஏழாம் நாள் சப்தமி என்று அழைக்கப்படுகிறது. அன்று ஸ்ரீஹயக்ரீவ பெருமாளின் அருளைப் பெறலாம். நவராத்திரி ஒன்பது நாட்களிலும் லலிதா சஹஸ்ரநாமம் படிப்பது மிகுந்த பலன்களை தரும். நவராத்திரி நாட்களில் கொலு வைப்பதற்கு காரணம் அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதே ஆகும்.


அக்னி புராணத்தில் புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப்பல் என்று கூறப்பட்டிருக்கிறது. எமனின் பாதிப்பில் இருந்து தப்புவதற்காகவே புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே நவராத்திரி நாட்களில் சிறப்பாகும்.


நவராத்திரி ஒன்பது நாட்களிலும் தேவியாக பெண் குழந்தைகளை பாவித்து துதிக்க வேண்டும். அப்பொழுது பிறர் வீட்டு குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் குழந்தைகளையோ நம் உறவினர் குழந்தைகளையோ தேர்ந்தெடுப்பது மத்திமம் ஆகும்.


அனுதினமும் நவராத்திரி பூஜையின் நிறைவாக மஞ்சள் குங்குமம் வளையல் ரிப்பன் போன்ற மங்கலப் பொருட்களை  அனைவருக்கும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.


ஊசி முனையில் அம்பாள் வாசம் செய்கிறாள் நவராத்திரி ஒன்பது நாளும் என்று கூறுவர். அதனால் நவராத்திரி ஒன்பது நாட்களிலும் தையல் ஊசியால் தைப்பதோ அல்லது மெஷினில் தைப்பதோ கூடாது. நவராத்திரி நாட்களில் தான தர்மங்கள் செய்வது மிக மிக முக்கியம்.


நவராத்திரிக்கு உரிய மகிஷாசுரமர்த்தினியின் கதை தென்னகத்தில் இருந்து தான் வங்கநாடு சென்றது.


(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில்  பரிசு பெற்றவர்.  தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்