உலகின் முன்னோடி முதலமைச்சர்கள் மூவர்.. சிவ அறஞானிகள்.. யார் என்று தெரியுமா?
திருமுறைகள் என்றால் ஏதோ ஒரு தோத்திரப்பாடல் என்று மட்டும் பலரும் எண்ணி வாழ்ந்து வருகிறார்கள். காரணம் திருமுறைகளை சைவ உலகிற்கு எடுத்துச் செல்லாத சைவப்போலியான பாவிகள், வேடதாரிகள் மத்தியில் நாம் வாழ்ந்து வருவதே காலக்கொடுமை!
ஆகையால் தான் திருமுறைகள் ஓதாய் மனமே உனக்கென்ன வாய்! என்று கேட்டார் தருமை ஆதீன குருமுதல்வர் குருஞானசம்பந்தர். இறைவன் திருவருளைப் பெற திருமுறையே நமக்கு வாய்த்த ஞானப் பெட்டகமாகும். நம் ஆன்மா கடைத்தேற திருமுறைகளை விட்டால் வேறு வழியேதும் இல்லை நமக்கு.
கண்ணிருந்தும் குருடனாய் வாழ்வது எப்படி காலக் கொடுமையோ? அதுபோலவே இப்பிறவி எடுத்த நாம் திருமுறைகளை உணராமல் இருப்பது. நாம் அறத்தின் திருவுருவமாக வாழ்ந்து காட்டிய குருவருளான நாயன்மார்களை மறந்தோம்! திருவருளான சிவத்தை மறந்தோம்! இதெல்லாம் நாம் வாழும் நாட்டிற்கும், மனித குலத்திற்கும் பேராபத்தை விளைவிக்கும் செயலாகும்.
ஆற்றரு நோய்மிக்கு அவனிமிகும் என்று அன்றே சொன்ன திருமூலரின் திருவாக்கை நாம் உணரவில்லை. ஆகையால் கொரோனா போன்ற கொடியநோயை இக்காலத்தில் சந்தித்தோம்! இவ்வுலகம் என்பது மெய்யான சிவனடியார்களின், தவப்பயனால் இயங்கி கொண்டு இருக்கிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் உணரத்தயாராக இல்லை. ஈசன் அடியார் இதயம் கலங்கிட நாடும், தேசமும், சிறப்பும் அழிந்து, நாட்டை ஆளுகின்ற மாமன்னர் பீடமும், அது மட்டுமா! ஏன்? தேவலோகத்தை ஆளுகின்ற இந்திரனின் ஆட்சிபீடமும் நாசமாகும் என்று சிவபெருமானே தன்திருவாக்கால் ஆணையிட்டு சொல்வதாக திருமூலர் நமக்கு எடுத்து உரைக்கின்றார். அதுபோல, சிவாலயங்களில் முறையான அறம் தழுவிய பூசைகள் நடைபெறவில்லை எனில், அந்நாட்டில் இயற்கை வளம் குன்றிப்போய் பஞ்சம், பட்டினி, வறுமை, திருட்டு, வழிப்பறி, கொலை கொள்ளை, மேலும் நாட்டை ஆளும் மன்னருக்கு தீங்கு ஏற்பட்டு, இயற்கை வளம் குன்றி அந்நாடு அழிவை நோக்கிப் பயணிக்கும் என்கிறார் திருமூல நாயனார்.
மேலும் இவ்வுலகில் சிவ அறம் பேணி மக்களைக் காத்த, முதலமைச்சர் கெஜட்டில் பட்டியலில் இடம்பெறாத, மூன்று முதலமைச்சர்களை இந்நாடு யார் என்றே மறந்து வாழ்ந்து வருவதும் காலக்கொடுமை. யார் அந்த உலகின் முன்னோடி முதலமைச்சர்கள் நாம் அறிய வேண்டாமா? அப்படி அறியாமல் நாம் வாழ்வது என்பது இப்பிறவிப் பாழ் என்பதை உணரவேண்டாமா? நம்மில் ஒவ்வொருவரும் இந்த அறத்தின் திருவுருவமான முதலமைச்சர்களை அறியவேண்டாமா? இதோ!
1.தெய்வச் சேக்கிழார் பெருமான்.
(அநபாயச் சோழன் ஆட்சியில் முதலமைச்சராக இருந்தவர்)
2.மாணிக்கவாசகப் பெருமான்.
(அரிமர்த்தன பாண்டிய மன்னன் அவையில் முதலமைச்சராக இருந்தவர்)
3.குலச்சிறையார்.
( மதுரை நின்றநீர் நெடுமாற பாண்டிய மன்னன் அவையில் முதலமைச்சராக இருந்தவர்)
இப்படி வாழ்ந்து காட்டிய முதலமைச்சர்களை சிவ அறஞானிகளை, அறியாமல் வாழ்வது என்பதே நாம் முற்பிறவியில் செய்த கொடிய பாவமாகும்.
அடியாரை மதிக்காத சுந்தரனும் புறகு, அவன் தலைவன் சிவனும் புறகு, என்று சிவனடியாரின் அளவறிய பெருமையை இவ்வுலகத்திற்கு காட்டிய விறன்மிண்ட நாயனாருக்கே, தட அடையாளமோ? அவருக்கென்று ஒரு கோயிலோ? இல்லாத போலி சைவ உலகத்தில் நாமெல்லாம் வாழ்ந்து வருகிறோம். மெய்யான சிவனடியாரை மதிக்காத, போற்றாத நாடு மெல்ல, மெல்ல அழிவை நோக்கிப் பயணிக்கும்.
சிந்தியுங்கள்! சிந்திக்க, சிந்திக்கவே நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒருதெளிவு பிறக்கும்.
இந்நிலை நீடிக்க, நீடிக்க, நிச்சயம் இயற்கை நம்மை சும்மா விடாது. மக்களையும், இந்நாட்டையும் காத்தவர்களான மேற்கண்ட மூன்று முன்னோடி முதலமைச்சர்களை மறந்து விட்டோம்.
எல்லாவற்றையும் கண்காணியாகிய பரம்பொருள் சிவபெருமான் பார்த்துக்கொண்டும், கண்காணித்தும் வருகிறார். இதைதான் எழுதுங் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே என்கிறார் நாவரசர் பெருமான். எதிர்காலம் என்பது மனித குலத்திற்கே இயற்கையினால் பேராபத்துகள் நிறைந்ததாக இருக்கிறது என்பதை அனைவருக்கும் காலம் உணர்த்தும் என்பதில் ஐயமில்லை.
அறம் காக்கவே! அறம் நம்மைக் காக்கும்!! இல்லை எனில் இயற்கையின் கோரப்பிடியிலும், இறைவனின் நீதிமன்றத்திலும், எவரும் தப்பமுடியாது என்பதை உணருங்கள்.
கட்டுரை:
"திருமுறைக் கலைக்களஞ்சியம்" "தெய்வத்தமிழிசை அறிஞர்" "சைவத்தமிழ்ச் சுடர்மணி" "சைவசமயப் புரட்சியாளர்" "திருமுறைப் புரட்சி வேந்தர்" "முனைவர்" திருவிடைமருதூர் சிவ.ச.நடராஜதேசிகர் (கைபேசி எண்கள் - 9788065610, 9488055610)