ஆனாய நாயனார் .. அலைமலிந்த புனல் மங்கை ஆனாயர்க்கு அடியேன்!

Su.tha Arivalagan
May 14, 2026,03:41 PM IST

- கலைவாணி கோபால்


"அலைமலிந்த புனல் மங்கை ஆனாயர்க்கு அடியேன்" -   சுந்தரமூர்த்தி நாயனார். 


சோழ நாட்டில் இருக்கும் 'திரு த்தவத்துறை.' அதாவது ,இன்றைய பெயர் லால்குடி. அதன் அருகில் இருக்கும்' திரு விருத்தமங்கலம்' (திருமங்கலம்) அதாவது லட்சுமி தேவி வந்து சிவனை வணங்கிய ஊர் என்பது வரலாறு. 


மாடுகள் நிறைந்திருக்கும் ஊரில் "நான் தங்குவேன் " என திருமகள் சொல்லி அந்த ஊரில் தங்கியதால் இப்பெயர் பெற்றது என்று கூறப்படுகிறது. 


இன்னொரு கூற்றும் சொல்லப்படுகிறது. பரசுராமர் தன் தாயினை கொன்ற பாவம் தீர, இங்கு வந்து வணங்கி விமோசனம் பெற்றதாகவும் வரலாறு சொல்லப்படுகிறது. 


இப்படிப்பட்ட சிறப்புகள் பெற்ற இந்த ஊரில் இடையர் குலத்தில் பிறந்தவர் . நம் ஆனாயர், இவர் இயற்பெயர் தெரியவில்லை. 


"ஆ "என்றால் 'பசுக்கூட்டம்' என்றும் 'நாயகன்' என்றால் "காவல்காரன்" எனவும் பொருள். பசு கூட்டத்திற்கு முக்கிய காவலர் என்பதால், ஆனாயர் என அவர் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால் ,மாடு மேய்ப்பது அவரின் முக்கிய தொழிலாக இருந்துள்ளது.




உலகிலேயே ஒரு நிமிடம் கூட ஓய்வில்லாத ஒரு தொழிலாக மாடு  மேய்க்கும் தொழில் சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஆண்டின் மொத்த நாட்களுமே வேலை இருக்கும். கிழமையும் அவர்களுக்கு இல்லை. நல்ல நாள் தீய நாள் என்பதும் இல்லை. காலையிலிருந்து அவைகளை கொண்டு போய் மேய்ச்சலுக்கு விட்டு வீடு கொண்டு திரும்புதல்,...முதல் இரவு அதற்கு காவல் இருப்பது என்று முழு நாளுமே..... அத்தோழிலில் மாடுகளின் மீது கவனம் செலுத்த வேண்டி இருக்கும்.


இருந்தாலுமே, காலையில் எழுந்து குளித்து முடித்து திருநீறு அணிந்து சிவனை தொழுது விட்டு தான் மேய்ச்சலுக்கு மாட்டு மந்தையினை கொண்டு செல்வார் ஆனாயர். காணும் பொருள்களில் எல்லாம் சிவனையே காண்பார். அதுமட்டுமல்லாமல், மந்தைகளில் மாடுகள் வேலி தாண்டாமல் இருக்க அக்காலகட்டங்களில் மாடு மேய்ப்பவர்கள் புல்லாங்குழலை பயன்படுத்தி மாடுகளுக்கு தங்கள் புரிதலை உணர்த்தி வந்தனர்.


அதாவது அந்த புல்லாங்குழல் இசையை கேட்டால் அவைகள் எங்கு சென்றாலும் தானாக தங்களின் இடத்திற்கு வந்து விடும். அதுபோல ,நம் ஆனாயர் இடமும் ஒரு புல்லாங்குழல் இருந்தது . ஆனால் ஆனாயர் அந்த புல்லாங்குழலை சிவபெருமானின் பஞ்சாட்சர நாமத்தை மட்டுமே நினைத்து இசைத்து வந்தார். ஆனாயர். தன் பலம் தெரியாத யானை மரத்தை சர்வசாதாரணமாக தூக்குவது போல....


ராகங்களை தன்னை அறியாமல் மிக அழகாக  ஆனாயர் இசைத்து வந்தார். அவருக்குத் தெரிந்த "சிவ மந்திரம்" மட்டுமே அடி மனதில் ஆன்மாவுடன் கலந்து இசைத்து வந்தார். அவர் எப்போதும், சிந்தையில் சிவனை நினைத்து அன்புடன் மாடு மேய்த்து ஓய்விருக்கும் நேரங்களில் பஞ்சாட்சர மந்திரத்தை புல்லாங்குழலில் எழுப்பி வந்தார். அனுதினமும் பஞ்சாட்சரம் இசைத்து வரும்  ஆனாயர்.அழகிய காட்சியை கண்டால், தன்னை மறந்து வேறு காணும் இசைப்பாரா..?  என ஒரு சோதனை நடத்தினார் சிவபெருமான் .


ஒரு கார்த்திகை மாதம் அஸ்தம் நட்சத்திரம் அன்று .. அவர் வழக்கம் போல மேய்ச்சலுக்கு கிளம்பினார். சிவபெருமான் தன் ஆட்டத்தை தொடங்கினார். என்னவென்றால், ஆனாயர் முன்பு பெய்திருந்த மழையில் பச்சை பசேல் என்று இருந்த பூமி. பசும்புல்லும் துளிர்விட்டு   , மரங்களிலும் மனம் வீசும் பூக்கள் பூத்துக் குலுங்கின. இந்த சூழல் புதுப்பொலிவினை கொடுத்தன. கண்கவர் காட்சிகள் மனதை மயக்கின. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆனாயர் தன் "பஞ்சாட்சர" மந்திரத்தை இசைப்பாரா ?அல்லது இயற்கையின் மீது மோகம் கொண்டு வேறு ராகம் ஏதாவது இசைப்பாரா? என்ற சோதனையை சிவபெருமான் ஆனாருக்கு வைத்தார்.


ஆனால், எந்த சூழ்நிலையிலும் மயங்காத ஆனாயர். அந்நிலையிலும், அந்த சூழலை சிவபெருமானாக ,... மனதில் காட்சிப்படுத்தி நினைத்து பஞ்சாட்சர மந்திரத்தை புல்லாங்குழியில் இசைக்கத் தொடங்கினார்.  அன்று அவர் இசைத்த இசை! விலங்குகளின் இயல்புகள் மாறி தன்னை மறந்தன. ஆநிரைக் கூட்டம் மண்டியிட்டு படுத்தது. அதுமட்டுமல்லாமல் , குயில்களும் காணம் இசைப்பதை நிறுத்தி ஆனாயரின் இசையை ரசித்தது. மயில்களும் தங்கள் நடனத்தை நிறுத்தி அவரின் இசைகளில் மயங்கி நின்றது. 


என் நிலைக்கும் மனதை சிதறவிடாமல் அந்த அழகான காட்சியில் "பஞ்சாட்சர மந்திரத்தை" இசைத்து பாடியதால்,...  சிவபெருமான் பார்வதி தேவியுடன் ரிஷப வாகனத்தில் தோன்றி "என் பஞ்சாட்சர மந்திரத்தை மட்டுமே இசைத்து பாடியதால்... இந்த உலகையே தெய்வீக ராகத்தால் கட்டி போட்டதால், கைலாயத்தில் என் அருகே இருந்து வாசிக்கும், பேரினை " நீ பெறுவாய்" என அழைத்துசென்றார். சிவபெருமான்.


ஆனாயர் ஆன்மாவிலிருந்து இசைத்து இறைவனை அடைந்தார். சிவபெருமான் இசைக்கு... மயங்குவது  முதல் முறை அல்ல !சாம வேதத்தினை ராவணன் வீணையில் இசைக்கும் போதும் அதற்கு கட்டுப்பட்டு சிவபெருமான் அவருக்கும் வரம் அளித்தார். என்றும் சொல்லப்படுகிறது. ஒரு சாமானிய மனிதன் கூட அன்பு என்ற ஆயுதத்தால் நம் சிவ  பெருமானை அடைய முடியும்.


 ஒவ்வொரு நாயன்மாரும், வெவ்வேறு செயல்களின் மூலம் சிவபெருமானை அடையும் வழிகளை நமக்கு உணர்த்தி வருகின்றனர்.  திருமங்கலத்தில் உள்ள "சாம வேதி ஈஸ்வரர்"  ஆலயத்தில் இன்றளவும் கார்த்திகை மாதம் அஸ்தம் நட்சத்திரம் அன்று அதிசய ராகம் ஒலிக்கச் செய்து " ஆனாயர் நாயனார்" குருபூஜை அந்நாளில் அவருக்கு தவறாமல் நடைபெற்ற வருகிறது.