எம்பெருமான் உருவாக்கிய தாமரைத் தடாகம்.. திருநாவுக்கரசர் வரலாறு.. 10!
- கலைவாணி கோபால்
திருப்புகலூரில் இருந்த அப்பர் சுவாமிகளுக்கு , கைலாயத்து பெருமானை தரிசிக்க ஆவல் கொண்டார். கடைசியாக, திருப்புகலூரில் "எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ எம்பெருமான் திருவடியே எண்ணினல்லாற்" என்னும் பதிகம் பாடி கைலாயத்தை நோக்கி புறப்பட்டார்.
தள்ளாத வயதில் கைலைநாதனை காண தன் உடலின் சோர்வையும், பொருட்படுத்தாமல் , எலும்புகள் தேய, தசைகள் சிதைவுர, உடலால் உருண்டு கைலாயம் நோக்கி சென்றார். ஆனால் , தன் உடல் சக்தியை இழந்த அப்பர் பெருமான் மயக்கமுற்று கீழே சரிந்தார்.
இவ்வளவு , சிரமம் கொண்டு தன் அன்பான அடியார். தன்னைக் காண வருவதை கண்டு அவர் சரிந்த இடத்தில் ஒரு தாமரை தடாகத்தை எம்பெருமான் உருவாக்கினார். அது இன்று உள்ள மானசரோவர் ஏரி ஆகும் . பெருமான் அந்த இடத்தில் அந்தணர் கோலத்தில் , அப்பர் முன் வந்தார்.
அந்தணராக வந்த எம்பெருமான் அப்பரிடம், எதற்காக இவ்வளவு சிரமப்பட்டு இந்த மலையை நோக்கி செல்கிறாய் என்று கேட்க தான் எம்பெருமானை காண வேண்டும் . அவரை காணாது திரும்ப மாட்டேன் என அப்பர் பெருமான் கூறினார்
அந்தணராக வந்த எம்பெருமான் இந்த மானிட உடலோடு, நீ அவரை காண முடியாது. திருவையாற்றில் நீ இந்த கைலாய காட்சியினை காணலாம். என சொல்லி இந்த குளத்தில் மூழ்கி எழுகையில், திருவையாற்றில் உனக்கு கைலாய காட்சி கிடைக்கும். என சொல்லி மறைந்தார்.
அப்பருக்கு அந்த அந்தணர் மறைந்தது மிகவும் அதிசயமாக இருந்தது. அவர் சொல்லியபடி அந்த குளத்தில் கண்களை மூடி மூழ்கி எழுகையில் அவரது உடலில் இருந்த காயங்கள் மறைந்து, தசைகள் சேர்ந்து அவரின் உடல் புதுப்பொலிவுடன் காட்சியளித்தது. அது மட்டுமல்லாமல், அந்த குளத்தில் மூழ்கிய அவரோ! திருவையாறு குளத்தில் எழுந்தார். எம்பெருமானும் இடப வாகனத்தில் அம்மையப்பர் திருக்கோலத்தில் அவருக்கு திருவையாறு குளத்தின் அருகே அவருக்கு காட்சியளித்தார்.
அப்போது, அவர் மாதர் பிறை கண்ணியானை என்னும் பதிகம் பாடினார். ஏனென்றால், அவருக்கு அப்போது பார்க்கும் எல்லாமே, அதாவது பறவைகள், யானைகள்,என அவர் காணும் அனைத்தும். பெருமான் பெருமாட்டியாக அவருக்கு தோன்றியது. இவர் ,கைலாய பேறு பெற்ற அந்நாள் ஆடி அமாவாசை. அந்நாளில் இவருக்கு கைலாயம் ஏகும் நாள் கிடைத்தது. அப்போது, இவருக்கு வயது 81.
ஆனால், இவரின் அவதாரம் முடியும் முன்பே! திருஞானசம்பந்தரின் அவதாரம் முடிந்து, கயிலாயம் ஏகி ஒரு வருடம் ஆகியிருந்தது.
சித்திரை மாதம் சதய நட்சத்திரம் அன்று இவரின் குருபூஜை எல்லா சிவாலயங்களிலும் குறிப்பாக, திருவதிகை ஆலயம், திருப்புகலூர், மற்றும் வேதாரண்யம் போன்ற ஆலயங்களில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்புகலூர் ஆலயமே இவரின் முக்தி தலமாக கருதப்படுகிறது.
இவர் சைவத்திற்கு ஆற்றிய தொண்டுகள் கொஞ்சம் அல்ல!.... இன்று ,சைவம் மலர்ந்து உள்ளது.என்றால்? , அதன் பெரும் ஆணிவேராக இருந்தவர் அப்பர் பெருமான். அதுமட்டுமல்லாமல், தான் எங்கு சென்றாலும் தன்னாலான உழவாரப் பணியை எல்லா தலங்களிலும் செய்து வந்தார். இன்றும் ,எல்லா ஆலயங்களிலும் நடக்கும் உழவாரப்பணி என்பது முதன் முதலில் தொடக்கி வைத்தவர் நமது, அப்பர் பெருமான்.
அது மட்டுமல்லாமல் ஊர் ஊராக, சென்று சிவன் கோயில்களை சமணர்கள் பிடியிலிருந்து மீட்டு சைவத்திற்கு மாற்றியதில் பெரும் பங்கு நாம் அப்பர் பெருமானுக்கு உண்டு. தன் மேல் அன்பு கொண்ட அடியவர்களுக்கு பெருமான் எத்தகைய செயலையும் செய்யத் துணிவார் . என்பதற்கு உதாரணம். அப்பர் திருப்பைஞ்ஞீலி பெருமானை பார்க்க நடந்து சென்ற போது வயதான அப்பருக்கு பசியும் ,சோர்வும் ஏற்பட்டது. அப்போது ஒரு மரத்தடியில் இளைப்பாறி கொண்டிருந்தார் அப்பர் பெருமான்.
தன்னைக் காண வரும் அடியார் .பசியோடு இருக்கக் கூடாது. என்று பெருமானே! அப்பருக்காக பொதிசோறு கொண்டு வந்து ,அவரிடம் கொடுத்தார் .அது மட்டுமல்லாமல் ,அவர் சோர்வு இல்லாமல் இருக்க நீரும் ஏற்பாடு செய்து கொடுத்தார். அவர் உண்டு களைபாறியவுடன் அடியவர் வேடத்தில் வந்த பெருமான் மறைந்து விட்டார்.
மாணிக்கவாசகருக்காக மண் சுமந்ததைப் போல, நம் அப்பருக்கும் அவர் பொதிச் சோறு சுமந்து வந்தார்.. என்பது பெரும் சிறப்பு. இன்று, நமக்கு கிடைத்த தேவாரம் என்பது "சைவத்தின் கீதம்". தேவாரத்தின் நான்கு, ஐந்து, மற்றும் ஆறாம், திருமுறைகளை வழங்கியவர் திருநாவுக்கரசர். சுமார் 4900 பாடல்கள் பாடினாலும் ,நமக்கு கிடைத்தது 3066. அவை ..312 பதிகங்களாக நமக்கு திருமுறைகளாக தரப்பட்டுள்ளன.
இன்று நமக்கு கிடைத்த உழவார பணி என்பது ,அன்று அப்பர் பெருமானால் தொடங்கப்பட்டது இன்றும், நடைமுறையில் உள்ளது. இது, போன்ற ஒரு நாவுக்கரசர் இனி வரவும் முடியாது. இவரை போல் சைவத்திற்கு சேவை செய்யவும் முடியாது.
அதனால் தான் இவர் மேல் அன்பு கொண்ட பெருமானே! அடியாரின் பசி பொறுக்காது அவரின் தேவைகளை அன்னையைப் போல பார்த்து ,பார்த்து அவரின் பசிக்காக பொதிச் சோறு சுமக்கும் அளவுக்கு தன்னிலையில் இருந்து இறங்கி அடியாரை ஆட்கொண்டு இருக்கிறார்.
அன்பு மட்டுமே, ஆண்டவனின் இருப்பிடம். என நிரூபித்தவர்கள் நமது 63 நாயன்மார்கள். அதிலும், அப்பர் பெருமான் தலைசிறந்தவராகம் உயர்ந்தவராகவும் கருதப்படுகிறார்.
நாமும் பெருமானிடத்தில் அன்பு வைத்து அவர்களைப் போல் கைலாயம் பேறினை பெறுவோம்.
எம்பிரான் திருநாவுக்கரச பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி