Tamil Short Story: கொலுசு!

Su.tha Arivalagan
Jul 07, 2026,04:30 PM IST

- சசிகலா விஸ்வநாதன்

                    

பூஞ்சிட்டாய்  ஓடி வந்து காந்திமதியின் மடியில் வந்து "தொம்"என படுத்து,"அத்தே!"எனக் குழைந்தாள்; மானஸா."என்ன காரியம் ஆகணும், என் அழகுக் செல்லத்துக்கு; அத்தையிடம் ", என்று பதிலுக்குக் கேட்டாள்; காந்திமதி.


என்  சேக்காளி குமரிக்கு இன்னைக்கு  ஹேப்பி பர்த்டே. பட்டுப் பாவாடை பூ போட்ட வெல்வெட் சட்டை மல்லீப்பூ வைச்சு  "சொலுக்கெல்லாம்' போட்டுண்டு  வந்து சாக்கலேட் கொடுத்தா. எனக்கும் "சொலுக்கு" போட்டு விடு அத்தை", என்றாள் மானஸா.


காந்திக்கு ஒன்றும் புரியவில்லை! " "சொலுக்கா", அப்படின்னா, என்னம்மா? அத்தைக்கு அது புரியலையே" என்றாள்.


"என்ன அத்தை? இது கூட தெரியாதா? டான்ஸ் ஆடறவங்க போடுவாங்களே! " "சல் சல்"ன்னு சத்தம்  வருமே; அதான் அத்தை , சொலுக்கு! பக்கத்து வீட்டு பாப்பா அஞ்சுகத்துக்கு  காது குத்து அன்னைக்கு அவங்க மாமி  வந்து போட்டு விட்டாங்களே;  அதான் அத்தை சொலுக்கு, என்றதும், காந்திமதிக்கு ஒருவாறாக புரிந்தது.




"அம்மாடி! அதுக்குப் பேர் "சொலுக்கு" இல்லே; கொலுசு. எங்கே சொல்லு பார்க்கலாம். கொ .. லு.. சு.. கொலுசு", என்று சொல்லிக்  கொடுத்தாள் காந்திமதி.


"கொ.. லு.. சு.. "லொசுக்கு"  என்று " பட்" என சொன்னாள் மானஸா.  காந்திமதிக்கு சிரிப்பு வந்துவிட்டது. 


"லொசுக்கு"இல்லேம்மா! அதுக்குப் பேரு "கொலுசு" கொ... லு.. சு.. கொலுசு என்று மீண்டும் திருத்த... இது தொடர... மானஸா, எனக்கு " "லொசுக்கே" வேண்டாம் போ! அத்தை", என்று அழ ஆரம்பித்தாள். 


அத்தை தன்னை போக்கு காட்டி கேலி செய்வதாக நினைப்பில், அழுது கொண்டே தூங்கி விட்டாள்; அத்தையும் அவளுடன். 


சிறிது நேரம் கழித்து ஏதோ பேச்சுக் குரல் கேட்டு, கண்விழித்த அத்தை; தூக்கத்தில் மானஸா, கொ... லு... சு... லொசுக்கு; என்றும் கொ.. லு.. சு... " சொலுக்கு என்றும் வார்த்தையோடு போராட்டம் நடத்திக்கொண்டிருப்பதை கேட்டு புன்னகைத்தாள்.


இரண்டு  மூன்று  நாட்கள் கழிந்து,  மானஸாவுக்கு தான் சிறு வயதில் அணிந்திருந்த கொலுசைப் போட்டு முத்தமிட்டாள். 


மானஸாவுக்கு கொலுசு என்ற வார்த்தை சரியாக வாயில் வர இன்னமும்  இரண்டு மூன்று வருடங்கள் ஆயிற்று. வீட்டில் யாவருமே அதை கொலுசை, "லொசுக்கு" என்றோ, "சொலுக்கு" என்றோ சொல்லப் பழகி விட்டோம்; அவ்வப்போது மானஸா உட்பட.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)