கோகுலாஷ்டமி .. பகவான் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் அற்புத பண்டிகை!
- ஸ்வர்ணலட்சுமி
பராபவ வருடம் 20 26 செப்டம்பர் மாதம் நான்காம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகவும், சிறப்பாகவும் கொண்டாடப்பட உள்ளது. "கிருஷ்ண ஜெயந்தி" என்பது பகவான் கிருஷ்ணரின் பிறப்பை போற்றிக் கொண்டாடும் ஒரு அற்புதமான பண்டிகையாகும். மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணர் அவதரித்த தினத்தை ஆண்டுதோறும் நாம் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடி வருகிறோம்.
கிருஷ்ணர் அவதரித்த நாள் :
புராணங்களின்படி கிருஷ்ண பகவான் ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியும், ரோகினி நட்சத்திரமும் இணைந்த நன்னாளில் நள்ளிரவு நேரத்தில் மதுராவில் உள்ள சிறையில் அவதாரம் செய்ததாக கூறப்படுகிறது.அதனால் ஆவணி மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி நாளில் மாலை நேரத்தில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
நேரம்:
கிருஷ்ண ஜெயந்தி தேதி -செப்டம்பர் 4, வெள்ளிக்கிழமை.
நிஷிதா பூஜை நேரம் (நள்ளிரவு பூஜை ): இரவு 11:57 மணி முதல் மறுநாள் நள்ளிரவு 12: 43 மணி வரை. இந்த நேரத்தில் கிருஷ்ணரை வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்.
கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருக்கும் நாள் செப்டம்பர் 4. வெள்ளிக்கிழமை.
பாரணை (விரதம் முடிக்கும் நேரம்) செப்டம்பர் 5, 20 26 சனிக்கிழமை காலை.
கிருஷ்ண ஜெயந்தி வழிபாடுகள் :
கிருஷ்ண ஜெயந்திக்கு முந்தைய நாள் செப்டம்பர் 3 வியாழக்கிழமை அன்று தங்கள் வீடுகளை சுத்தம் செய்வது சிறப்பு. கிருஷ்ணர் படமோ அல்லது உருவச் சிலையையோ இருந்தால் சுத்தம் செய்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு அலங்காரம் செய்வது சிறப்பு. மஞ்சள் நிற மலர்கள், வாசனை மலர்கள் துளசிக்கொண்டு கிருஷ்ணரை அலங்காரம் செய்வது சிறப்பு. நெய் விளக்கு ஏற்றி வழிபடுவது நல்லது.
கிருஷ்ண ஜெயந்தி அன்று மாலை பச்சரிசி மாவு கரைசல் செய்து, தங்கள் வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை சின்னஞ்சிறு குழந்தையின் பாதம் போன்று கிருஷ்ணர் பாதம் கோலம் இடவேண்டும். இவ்வாறு சின்னஞ்சிறு பாதங்கள் வரைவதனால் கிருஷ்ண பகவானே நமது வீட்டிற்குள் அடியெடுத்து வைப்பதாக ஐதீகம். அவ்வாறு வரைந்த பாதங்களை பார்ப்பதே மிகவும் அழகாக இருக்கும்.
நைவேத்தியம்:
கிருஷ்ணருக்கு பிடித்தமான அவல் பாயாசம்,வெண்ணெய், பால் சோறு, முறுக்கு, கார சீடை,வெல்லம் கலந்த சீடை போன்ற பலகாரங்கள் செய்து நைவேத்தியமாக படைக்கலாம். வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிவித்து அழகு பார்ப்பதும் குடும்பத்தில் கிருஷ்ண பகவானே இருப்பதாக மனம் மிகவும் மகிழ்ச்சி பெருகும். நைவேத்தியமாக படைத்தவற்றை சிறு குழந்தைகளுக்கு பிரசாதமாக கொடுத்து மகிழ்வது கிருஷ்ணரே நேரில் வந்து உண்பதாக ஐதீகம்.
கிருஷ்ண பகவானுக்கு விருப்பமான ஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்திரம், ஸ்ரீ கிருஷ்ண சஹஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், கிருஷ்ண பகவான் குறித்த பாடல்கள், கிருஷ்ண பகவானின் வாழ்க்கை,கிருஷ்ண லீலைகள் குறித்த கதைகளை கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் கேட்பதும்,படிப்பதும் நல்ல சிறந்த பலன்களைத் தரும். மனநிறைவு பெருகும்.
வெகு நாட்களாக குழந்தை வரமின்றி தவிக்கும் தம்பதியினர் கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருந்து மனதார வேண்டி வழிபடுவது கிருஷ்ண பகவானே குழந்தையாக பிறப்பார் என்பது நம்பிக்கை.
வாழ்க்கையில் நாம் நினைப்பதும் மனதில் வேண்டுவதும் நடக்க வேண்டும் என்று நம்பிக்கையுடன் தானே ஒவ்வொரு நாளும் கடந்து வருகிறோம். மனம் உருகி கிருஷ்ண பகவானை கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் வேண்டி,அனைவரும் அவரின் நல்லாசி பெறுவோமாக.
"ஹரே ராம ஹரே ராம ஹரே ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே ஹரே "
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.