கோகுலத்து கண்ணா.. கோபியரின் மன்னா!

Su.tha Arivalagan
Sep 04, 2026,12:35 PM IST

- கவிதாயினி டாக்டர் எஸ். மணிமேகலை


ஆயர்பாடி கண்ணா, 

அன்புமணி வண்ணா


ஆசை மழலை கண்ணா 

புன்சிரிப்பில் மன்னா


முத்து முகம் மலர்ந்திட 

பூஞ்சிரிப்புக் கண்ணா


முல்லை நகைச் சிரிப்பினில் 

பூத்திட்ட கண்ணா


வெண்ணெய் உண்ணும் வேளை 

கண்ணை உருட்டுகிறாய்




மாயமாய் காணா வேளை 

மண்ணை உண்கிறாய்


யசோதாவின் மடியிலே 

தவழ்ந்தாய் மழலையாய்


யாவருமே போற்றிட 

வளர்ந்தாய் பாலகனாய்


கோகுலத்தின் மொத்த மகிழ்வும் 

நீ தானே


கோமாதா கன்றுகள் சூழ 

கொஞ்சியவனும் நீதானே


நின் புல்லாங்குழல் இசை 

கேளாதவர் யாரோ


உன் குறும்பு சிரிப்பில் 

மயங்காதார் உளரோ


கோபியரோடு களிப்புற்றாய் 

கோகுல கண்ணா


கோலாட்டத்தில் இன்புற்றாய் 

காவியக் கண்ணா


தாவித்தான் அணைத்திட்டேன் 

தவழ்ந்திட்டாய் கண்ணா


தவிப்போடு நிற்கின்றேன் 

மறைந்திட்டாய் கண்ணா


மகிழ்வோடு இசைந்திட்டாய் 

மயங்கி விட்டேன் கண்ணா


துள்ளலோடு வந்திடுவாய் 

அணைத்திடுவேன் கண்ணா