குருவிக்கூடு!

Su.tha Arivalagan
Oct 22, 2025,12:59 PM IST

- க.யாஸ்மின் சிராஜூதீன்


மரத்தில் மட்டுமா இருக்கும் கூடு!


எங்கள் வீட்டு பால்கனி மூலையிலும் இருக்குது கூடு. தேவையில்லை என சுற்றி  வைக்கப்பட்ட ஒயர் ஆனதே அதற்கு கிளை. என்ன இது என வியந்தேன்.


முதன்முதலில் என்னருகே என் கை தொடும் உயரத்திற்கு கீழே குனிந்து பார்க்கும் அளவில். வாயில் எங்கே என திருப்பிப் பார்த்தேன்  ராக்கெட் போல சர்ரென பறந்து  மறைந்தது . என்ன இது என வியப்பில் பறந்த திசையைப் பார்த்தேன். அங்கே பறந்தது,  சின்னஞ்சிறிய சிட்டுக்குருவி. என்ன அழகான கூடு!




நேர்த்தியான வடிவமைப்பு. வட்டவடிவ வாயில்.  மழமழவென பூசப்பட்ட தரை. வைக்கோலும் கரும்பின் வெள்ளை வெளேர் பூவும் வைத்து கட்டிய கூடு பார்க்க அழகோ அழகு!  இதற்கு இக்கலையை கற்றுத் தந்தது யார்? எனக்குள்ளே எழுந்தது கேள்வி. 

சின்ன அலகிலே  எத்தனை முறை தளவாடப் பொருட்களை கொண்டு வந்திருக்கும், அழகிய கூட்டை உருவாக்கி இருக்கும்?

அதன் சின்ன சின்ன முயற்சிதான் அழகான வீடானது


இளைப்பாற ஊஞ்சலானது. கூட்டை ரசித்தேன். ஆனாலும் சிறிது வருத்தம், குருவி பறந்து விட்டதே என்று. நான் தூரம் சென்றால் வந்துவிடும் என நினைத்தேன். சற்று தள்ளி நின்று பார்த்தேன்.அதோ வந்து விட்டது, சின்னச்சிறிய சிட்டுக்குருவி. 

என் மனம் மகிழ்ந்தது பறக்கும் பட்டாம்பூச்சியாய்.


முயற்சிக்கு அளவு முக்கியமில்லை உழைப்புதான் முக்கியம்!


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)