சோம்பேறி

Meenakshi
Dec 29, 2025,04:36 PM IST

-லீலாவதி


ஒரு ஊரில் ஒரு சோம்பேறி வாழ்ந்து வந்தான். வயதாகி கொண்டே இருந்த போதும் அவன் சோம்பேறி தனத்தை விடுவதாக இல்லை. இது அவனுடைய தந்தைக்கு மிகுந்த கவலையைத் தந்தது. அவர் தன் மகனை நினைத்து கவலையாக தன் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தார். அந்த நேரத்தில் அவருடைய பழைய சிநேகிதர் இவரை நோக்கி வந்தார். ஏன் எதையோ சிந்தித்து கொண்டு இருக்கின்றீர்கள் என்று கேட்டார். ஒன்றும் இல்லை எல்லாம் என் மகனைப் பற்றித்தான் என்றார்.


அதற்கு அவர் உங்கள் மகனுக்கு என்ன என்று கேட்டார். இவரும் தன் மகனின் சோம்பேறி தனத்தை பற்றி கூறினார். இதுதான் உன் கவலையா, கவலைபடாதே பக்கத்து ஊரில் எனக்கு தெரிந்த ஒரு சாமியார் இருக்கிறார். அவரைப் போய் பார் என்று முகவரியை கொடுத்து சென்றார். உடனே மறுநாள் காலையில் சாமியாரை சந்திக்க சென்றார் சோம்பேறியின் அப்பா. அங்கு சாமியாரை சந்திக்க நிறைய பேர் வந்திருந்தனர்.




ஆனால், சாமியார் அழைத்தது முதலில் இவரைத் தான். உன் குறை எனக்கு தெரியும். நான் சொல்வதை கேளுங்கள் உங்கள் தோட்டத்தில் புதிதாக ஒர் செடி நடவேண்டும். அதற்கு முன் அந்த செடியின் அடியில் சில நாணயங்கள் மற்றும் ஏதாவது ஒரு ஆபரணமும் அதில் போடவேண்டும். நீங்கள் நாளை உங்கள் மகனை அழைத்து வாருங்கள் என்று கூறினார்.


இவரும் தன் மகனின் சோம்பேறித்தனம் போனால் போதும் என்று சாமியாரிடம் விடை பெற்று வந்தார். முதல் வேளையாக சாமியார் சொன்னதை அப்படியே செய்தார். மறுநாள் காலை மகனை அழைத்து சாமியாரிடம் வந்தார். சோம்பேறி அமர்ந்து இருந்தான் அவனை பார்த்து சாமியார் உங்கள் தோட்டத்தில் வளரும் புதிய செடியின் அடியில் புதையல் இருக்கிறது. அந்த புதையல் உன்னோட கண்களுக்கு மட்டுமே தெரியும். இதேபோல் நீ தொடர்ந்து அந்த தோட்டத்தில் வேலை செய்தால் நிறைய புதையலை பார்க்கலாம் என்றார்.

 

அவனும் சந்தோசம் தாங்காமல் அவர்சொன்னதை செய்தான். புதையல் கிடைத்த ஆர்வம் அவனை நிலத்தில் பாடு பட வைத்தது. இவனும் புதையலை (உழப்புக்கேற்ற ஊதியத்தை) எடுத்து கொண்டே இருந்தான். முயன்றால் முடியாது எதுவும் உண்டோ?


(லீலாவதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)