Teacher's day 2026.. ஆசிரியர் தினம்.. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்!
- ஸ்வர்ணலட்சுமி
பராபவ வருடம் 2026 செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி சனிக்கிழமை 'ஆசிரியர் தினம்' கொண்டாடப்படுகிறது.
"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்." ஆசிரியர் பணியை அறப்பணி என கருதி வெறும் ஏட்டு கல்வியை மட்டும் போதிப்பது மட்டுமல்லாமல் அவற்றையும் தாண்டி வாழ்க்கையை வாழ கற்றுத் தரும் ஆசிரியர்களை போற்றும் தினமே "ஆசிரியர் தினம்".
மாதா,பிதா,குரு இந்த வரிசையில் மூன்றாவதாக இடம் பெற்றுள்ள, நமக்கு இந்த உலகை கற்பிக்கும் ஆசான்கள் ஆகிய குருவை கொண்டாடும் வகையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்:
ஆசிரியப் பணியை புனித பணியாக கருதி பிற ஆசிரியர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள். நம் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த இவர் மாபெரும் தத்துவ மேதையாக விளங்கினார். இவரை கௌரவப்படுத்தும் வகையில் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக 1962 ஆம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறோம்.
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்தியாவில் இரண்டாவது குடியரசுத் தலைவராகவும், முதல் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். இவர் ஒரு சிறந்த தத்துவ அறிஞரும், புகழ்பெற்ற ஆசிரியரும் ஆவார். அவர் தன் பிறந்தநாள் செப்டம்பர் 5ஆம் தேதியை பிறந்த நாளாக கொண்டாடாமல் நாட்டின் அனைத்து ஆசிரியர்களின் சேவையை போற்றும் நாளாக கொண்டாட வேண்டும் என்று அவரே விரும்பினார். அதன்படி இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஆசிரியரின் பங்கு:
"அறிவை ஊட்டி பண்பை வளர்த்து நம் எதிர்காலத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள்". பெற்றோர் நமக்கு உலகை காட்டுகிறார்கள். ஆனால், அந்த உலகத்தை எப்படி வெல்வது என்று கற்றுக் கொடுப்பவர் ஆசிரியர் ஆவார். மாணவர்களின் வாழ்வில் கல்வி ஒளியை ஏற்றி வைக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தி கௌரவப்படுத்தும் ஒரு சிறப்பு நாளே ஆசிரியர் தினம் ஆகும்.
ஆசிரியர்கள் கல்வி அறிவை வழங்குவதோடு மட்டுமல்லாமல் ஒழுக்கம், நற்பண்பு, மற்றும் சமூகப் பொறுப்புணர்வை கற்பிக்கிறார்கள். அவர்கள் மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களின் வாழ்வில் ஏற்படும் தடைகளை நீக்கி, சரியான பாதையை காட்டும் வழிகாட்டியாக இருப்பவர்கள். ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் உள்ள மாணவர்களின் கைகளில் உள்ளது. அந்த மாணவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்கும் பெருமை ஆசிரியர்களையே சாரும்.
பள்ளிகளில் ஆசிரியர் தின கொண்டாட்டம்:
ஆசிரியர் தினத்தன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெறுவது வழக்கம். மாணவர்கள் ஆசிரியர்களைப் போற்றி கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்துவார்கள். அவர்களுக்கு வாழ்த்து அட்டைகள்,மலர்கள் மற்றும் நன்றிகளை வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள். சில பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்கள் போல வேடமிட்டு, வகுப்பில் உள்ள பிற மாணவர்களுக்கு பாடம் நடத்தி,ஆசிரியர்களின் உழைப்பையும் அவர்களுடைய அர்ப்பணிப்பையும் நாடகமாக நிகழ்த்துவார்கள்.
ஆசிரியரைப் போற்றும் வரிகள் :
ஆசிரியர் என்பவர்,
அனைவருக்கும் கல்வியை கற்பிப்பவர்.
ஆர்வமாய் அறிவை வளர்ப்பவர்.
இனிய அணுகுமுறையில் நற்பண்பை புகட்டுபவர்.
ஈடுபாட்டுடன் பணி செய்து மகிழ் பவர்.
உயர்த்தும் குறிக்கோள்களை எடுத்துரைப்பவர்.
ஊர் உலகத்தை புரிய வைப்பவர்.
எளிமையான தோற்றத்துடன் பாசமாக இருப்பவர்.
ஏணிப்படியாய் நின்று மாணவர்களை உயர்த்துபவர்.
ஐயம் இன்றி மாணவர்களுக்கு தைரியம் அளிப்பவர்.
ஒளிமிகு பாரதத்தை உருவாக்குபவர்.
ஓங்கி வளர ஒழுக்கமான வாழ்வை எடுத்துரைப்பவர்.
ஒளவை வழி நடந்து நல்வழி காட்டுபவர் .
இந்த இனிய ஆசிரியர் தின நன்னாளில் கடமை உணர்வோடும், அர்ப்பணிப்போடும் பணியாற்றும் ஆசிரியர்களை இந்த ஒரு நாள் மட்டும் அல்லாமல் அனுதினமும் போற்றுவோமாக.
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.