பரிகார பூசைக்கு எல்லாம் திருமுறைகளை பாடுபவர்கள் ஓதுவார்களே அல்ல - சிவ.ச.நடராஜதேசிகர்
-சிவ.ச.நடராஜதேசிகர்
ஓதுவாமூர்த்திகளில் பெண்கள்தான் முதலிடம் பெறவேண்டும் என்பதை திருமுறை அறத்தின்படி நாம் சிந்தைதெளிய திருமுறைகளை நன்கு படித்து தெளிந்து உணர்தல் வேண்டும்.
மூத்தத் திருப்பதிகத்தை வழங்கியவர் அருட்பேய் காரைக்கால் அம்மையார். அம்மையாரின் மரபுகளை ஒட்டியே வழிவந்தவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பிகள் என மூவரும்.
ஆக இதை எதையுமே சிறிதளவும் உணராதவர்கள் முதலில் ஓதுவாமூர்த்திகளே அல்ல! என்பதில் சைவசமய உலகம் முதலில் தெளிவுபெற வேண்டும். அதுபோல திருமுறைகளில் இயல்ஞானம் இல்லாது ஒரு ஓதுவார் பாடினாலும், அவர் எந்த குருகுலம் வாசம் வழியாக முறையாக திருமுறைக் கற்றாலும் எந்தவிதப் பயனும் இல்லை. அவரெல்லாம் கமர்ஷியல் பொருள் ஈட்டல் ஓதுவார் ஆவார். சிவப்பரம்பொருளைத் தவிர, கண்ணில் கண்ட சிறுதெய்வங்களுக்கு எல்லாம் திருமுறைகளை பாடுபவர் எவராயினும் அவரெல்லாம் ஓதுவாரல்ல! கமர்ஷியல் பொருள் ஈட்டலுக்காக கூவுபவர்.
தன்னுடைய வாழ்வாதாரம் ஒன்றே குறிக்கோள் எனக்கருதி எதற்கு வேண்டுமானாலும் திருமுறைகளை பாடலாம் எனவந்துவிட்டு, குருகுலவாசத்தில் முறையாக பயின்ற ஓதுவார்கள் நாங்கள் என பேசுவது அநாகரிகம்.
இன்றைய குருகுல வாசத்தில் படித்த ஓதுவார்கள் நால்வர் துதிக்கு பிறகு பிடியதன் உருவுமை என்றபாடலை விநாயகருக்கு என நினைத்து அதற்குரிய வியாழக்குறிஞ்சிப் பண்ணினையும், நட்டபாடை பண்ணாக மாற்றி, கம்பீரநாட்டையில் பாடி வருகிறார்கள் என்றால்? திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் வந்த மதங்கசூளாமணி அம்மையாரின் வழியில் வந்து திருமுறைகளுக்கு பண்ணினை வகுத்த வள்ளியம்மை தாயை புறம்தள்ளி விட்டார்களே? அந்தப் புள்ளியில் மறைந்தது இன்றைய குருகுலவாசத்தை பற்றிப்பேசும் ஓதுவார்களின் தரம்.
குருகுல வாசத்தைப் பற்றி பேசும் இவர் திருமுறை ஆசிரியர் என்றால்? இவர்வழி வரும் மாணவர்களின் நிலையும் எதிர்காலம் அப்படித்தான் இருக்கும். அதாவது பண்களை மாற்றிப்பாடும் மரபுகளின் அவலம் இது.
ஆக "கல்லாமே கலைஞானம் கற்பித்தானை" "வாயாரத் தன்னடியே பாடும் தொண்டர் இனத்தகத்தான்" "பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக" பண்ணும் பதம் ஏழும், பலவோசைத் தமிழவையும், "பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி" "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவாரே ஓதுவார் என்ற அடையாளமே தவிர, பண்மரபினை மாற்றிப் பாடுவது, தெலுங்கு கீர்த்தனை போல, திருமுறைகளைப் பாடி பொருளை சிதைப்பது, அடையாள அட்டை வைத்திருப்பது, இவர்கள் எல்லாம் ஓதுவாமூர்த்திகள் என்ற அடையாளத்தை இழந்தவர்கள் என்பதை சைவவுலகம் நன்கு தெளிந்த சிந்தையால் ஆழ உணரவேண்டும்.
சிந்தை தெளிந்த முருக பக்தரான அருணகிரிநாதர் முருகனைப் பார்த்து, வாதினை அடர்ந்த திருப்புகழில் இடையில் உள்ள ஒருவரியை ஆழ சிந்திப்போம் நாம். "சோதி உணர்கின்ற வாழ்வு சிவம் என்ற சோகம் அதுதந்து எனையாள்வாய்" என்று பாடுகிறார். இதன் பொருள்தான் என்ன? ஒரு மனிதன் ஆன்மபக்குவ ஞானத்தைப் பெறவேண்டுமாயின் சிவத்தைத் தவிர அப்பக்குவத்தை எவராலும் பெறமுடியாது. இக்கருத்தைதான் அருணகிரிநாதர் சோதி உணர்கின்ற சிவம் என்ற பக்குவ வாழ்வை எனக்களித்து, அதன்பிறகு எனையாள்வாய் எனச்சொல்லும் போதே முருகனிடம் அப்பக்குவத்தை பெறமுடியாது என்பதை அவர் வாக்கால் நாம் சிந்தைதெளிய உணரவேண்டும்.
பிருகத்ஜபாலம் என்ற வடமொழி உபநிடதம் நான்கு அறங்களை கூறுகிறது என்னவென்று நாம் சிந்திப்போமா?
1.சிவபெருமானை அர்ச்சிக்காத உடம்பிலே தீவை.
2.சிவபெருமானை கூறாத சாத்திரத்திலே தீவை.
3.சிவாலயம் இல்லாத ஊரிலே தீவை.
4.திருநீறு அணியாதவன் நெற்றியிலே தீவை.
இப்படி சிவ அறத்தத்துவத்தை நமக்கு ஆழ உணர்த்துகின்றது.
அதுபோல திருமுறைகளில் ஐவர் என்ற ஆய்வில், அதாவது காரைக்கால் அம்மையார், மற்றும் நமது இறைநால்வர் பெருமக்கள் இவர்களுயைய திருமுறைகளான திருவாக்கில் சிவப்பரம்பொருளைத் தவிர, ஏனைய உமையம்மைக்கோ, விநாயகருக்கோ, முருகனுக்கோ, தனித்து பாடல்கள் என்பதே இல்லை இதை உணராதவர்கள் முதலில் ஓதுவார்களே இல்லை.
இப்படி இருக்கையில் இன்றைய குருகுல வாசம் வழியே முறையாக திருமுறைகளைக் கற்ற ஓதுவார்கள் நமது நால்வர் பெருமக்கள் துதியினை அடுத்து திருஞானசம்பந்தரின் திருவலிவலத் தல திருக்கடைக்காப்பான இறைவனுக்கு பாடிய பாடலை விநாயகருக்கு என நினைத்துக்கொண்டு அதற்குரிய பண்ணினையும் மாற்றி இரண்டாவதாக பாடுவது என்பது முறையாக கற்ற ஓதுவார்களா? என்றால் கண்டிப்பாக இல்லை என்பதை சைவ சமய உலகம் நன்கு அறிய வேண்டும். மேலும் திருமுறை பாடசாலைகளில் திருமுறைகளை பயில்வதற்கு முதலில் பெண்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதுவரை பெண்களுக்கு குருகுல வாசத்தில் திருமுறைகள் பயிற்று விக்கப்படுகிறதா? என்பது தெரியவில்லை. முதலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து திருமுறைகளைப் பயிற்று வித்தலே குருகுல வாசத்தின் முறைகளாகும்.
பெண்களுக்கு முறையாக திருமுறைகளை சொல்லிக் கொடுக்க வில்லை என்றால் அவர் ஓதுவாரும் இல்லை! ஆசிரியரும் இல்லை. என்பதையும் சைவவுலகம் தெளிவுபெறவேண்டும்.
இனியாவது கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாக என்ற ஞானத்தின் திருவுருவான திருஞானசம்பந்தரின் திருவாக்கில் உதிர்த்த திருமுறைகளை இயல்ஞானத்தின் முறையாக படித்து இக்கால ஓதுவார்கள் தெளிவுபெறவேண்டும். எந்தை வலஞ்சுழி நாடி ஞானசம்பந்தன செந்தமிழ் கொண்டு இசைபாடும் ஞானம் வல்லவர்களே ஓதுவாருக்கான இலக்கணம். அதைவிடுத்து கண்ணில் கண்ட சிறுதெய்வ நெறிகளுக்கு, கிரகங்களுக்கு, பரிகார பூசைக்கு எல்லாம் திருமுறைகளை பாடுபவர்கள் ஓதுவார்களே அல்ல! என்பதையும் இவர்கள் எல்லாம் வாழ்வாதாரம் ஒன்றே குறிக்கோள் என வாழும் ஓதுவார் என்ற அடையாள அட்டைப் பெற்றவர்களே தவிர, திருமுறைகளின் சிவ அறநெறிமுறைகளை பின்பற்றுவர்கள் அல்ல என்றும் மேன்மைகொள் சைவவுலகம் அறியவேண்டியே இப்பதிவாகும்.
(கட்டுரையாசிரியர்: திருமுறைக் கலைக்களஞ்சியம், தெய்வத்தமிழிசை அறிஞர், சைவசமயப் புரட்சியாளர், திருமுறைப் புரட்சி வேந்தர், சைவத்தமிழ்ச் சுடர்மணி, சைவத்தமிழ் இயலிசை அறிஞர், முனைவர் திருவிடைமருதூர் சிவ.ச.நடராஜதேசிகர், நிரந்தர நிறுவனத் தலைவர், செந்தமிழ் சிவ அறநெறி சைவசமய புரட்சிப் பேரியக்கம், எட்டயபுரம் வட்டம், தூத்துக்குடி மாவட்டம்.)