அத்துணை அழகா புன்னகை.... ?
- அ.வென்சி ராஜ்
புத்தம் புதிதாய் பூத்த அழகு பூவே புன்னகை...!
அத்துணை அழகா புன்னகை.... ?
சொல்லவா?
தித்திக்கும் இளமைதனை தேன் சிந்த தருவது புன்னகை....
எத்திக்கும் இருக்கும் கோபம் தனை
எட்டாத தூரம் ஓடச் செய்வது புன்னகை.... !
பட்டி தொட்டி எங்கும் இருக்கும் பகைவரைக் கூட
பதற்றமில்லாமல் பக்கத்தில் வரச் செய்வது புன்னகை. ...
எட்டி நின்று ஏளனம் செய்பவரையும்
இலகுவாய் மாற்றி இனிய நல் உறவாக்குவது புன்னகை. ... !
ஆம்!
புன்னகை....
அழகிய புன்னகை. ....
பொன் நகையில் இல்லாத ஒரு கவர்ச்சி புன்னகைக்கு உண்டு...
யாருக்கு..?
யாரிடம்.?
கட்டிளம் காளையையும் சட்டென பணியச் செய்வது காதலியின் புன்னகை. ...
தப்பேதும் செய்துவிட்டால் திட்ட வரும் தாயை
பட்டென சிரிக்கச் செய்வது குழந்தையின் புன்னகை...
தாமதமாய் வரும் கணவன் தன் மனைவியின் கோபம் தணிக்க
எப்பொழுதும் வீசும் ஆயுதம் காதல் புன்னகை. ...
குழம்பில் உப்பில்லை என்று கோபம் தலைக்கேறும் கணவனை
அப்படியே குளிர்விப்பது மனைவியின் மந்திரப் புன்னகை....
தவறு செய்து தடுமாறி தலை குனிந்து பயந்திருக்கும் மாணவனை
திருத்துவது நல்ல ஆசிரியரின் புன்னகை. ...
நட்பென்னும் நல்ல பந்தத்தில் இருவருக்கும் எப்பொழுதும் பரிமாறும் மௌனப் புன்னகை. ....
உலகத்தனையும் மொத்தமாய் மறக்கச் செய்யும் ஒரு மழலையின் புன்னகை...
பழமை நினைத்து குழந்தையாய் சிரிக்க வைக்கும் முதுமையில் புன்னகை. ...
எட்டா கனியை கூட எட்டி விடும் என்று மனதை நம்பச் செய்வது அழகிய புன்னகை.....
புன்னகை எனும் சாவி கொண்டு
வாழ்வின் எல்லா கதவுகளையும் திறப்போம்....
புன்னகைப்போம்...
புது உலகு படைப்போம்....!
(அ. வென்சி ராஜ்... இவர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)