குழந்தைகளின் உரிமைகளை மதிப்போம்!
- ஜி. வினோத்குமார்
1954 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 20ஆம் தேதியை குழந்தைகள் தினமாக அங்கீகரித்து கொண்டாடி வருகிறது. இந்தியாவிலும் ஐநா சபையை பின்பற்றி அதே தினத்தில் 1963 ஆம் ஆண்டு வரை கொண்டாடப்பட்டு வந்தது.
நமது முன்னாள் பிரதமர், ஜவஹர்லால் நேரு அவர்கள் குழந்தைகள் மீது அளவு கடந்த அன்பையும் பாசத்தையும் வைத்திருந்தார். அது மட்டும் அல்லாமல் அவர்கள் நலன் சார்ந்து சிந்தித்தார். இன்றைய குழந்தைகள் தான் நாளைய எதிர்காலத்தை உருவாக்குபவர்கள் என்று கூறினார். அவர் தொழில் சார்ந்து ஐந்தாண்டு தொலைநோக்கு திட்டங்கள் மட்டும் கொண்டுவரவில்லை. அந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி இந்தியாவை வளம்பெற செய்பவர்கள் இப்போதைய குழந்தைகள் என உணர்ந்தவர். அவர் மறைவுக்கு பிறகு 1964 நவம்பர் 14 ஆம் தேதி முதல் அவரின் இந்த சீரிய சிந்தனையை போற்றும்படி அவருடைய பிறந்தநாளை குழந்தைகள் தினமாக அனுசரித்து கொண்டாடி வருகிறோம்.
இந்த வருடம் குழந்தைகள் தின கருப்பொருள் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு உரிமையும் என்பதாகும். குழந்தை உரிமைகளுக்கான முதல் மாநாடு 1989 நவம்பர் 20 ஆம் தேதி நடந்தது. இந்த மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானங்கள் செப்டம்பர் 2, 1990 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த மாநாட்டில் கொண்டு வந்த தீர்மானங்களில் சில:
*ஒவ்வொரு குழந்தைகளின் வாழ்வுரிமையையும், அதன் வளர்ச்சியையும்,பாதுகாப்பையும் அவர்களின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் உறுதி செய்ய வேண்டும்
*குழந்தை பிறந்தவுடன் பதிவு செய்ய வேண்டும்.
*அனைத்து விஷயங்களிலும் குழந்தைகள் தங்கள் சொந்த கருத்துக்களை தெரிவிக்கும் உரிமை உண்டு. குழந்தைகளின் வயது மற்றும் முதிர்ச்சிக்கு ஏற்ப அவர்களின் சொந்த கருத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.
*குழந்தை சுயமாக சிந்தித்து அது சார்ந்து எடுக்கும் முடிவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
*குழந்தைகளுக்கு உடல் மற்றும் மன அளவில் பாதிப்பு ஏற்படாத அளவில் சட்டங்களை இயற்றி பாதுகாக்க வேண்டும்
இதுபோல இன்னும் பல தீர்மானங்கள் இந்த மாநாட்டில் குழந்தைகளின் நலனுக்காக நிறைவேற்றப்பட்டு உள்ளன. அந்தத் தீர்மானங்களை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு குழந்தைகளுக்கான சட்டத்திட்டங்களை இயற்றி தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகின்றன.
குழந்தைகளுக்கான சட்ட பாதுகாப்புகளும் அவர்களின் உரிமைகளுக்கான முழு சுதந்திரமும் இந்த அளவு கடுமையாக இருப்பினும் இன்னமும் குழந்தைகள் மீதான வன்முறை மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் சமூகத்தில் ஆங்காங்கே நடந்து கொண்டிருப்பது வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது.
தற்போதைய காலக்கட்டத்தில் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகளாக வளர்கின்றனர். மூன்று முதல் நான்கு வயதில் இருந்தே அவர்களின் படைப்பாற்றல் திறன் கடந்த காலங்களில் இருந்ததை விட பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கல்வியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு அனைத்து தரப்பு மக்களிடமும் அதிக அளவு சென்று சேர்ந்துள்ளது. காமராஜர் அவர்கள் காலத்தில் கல்விக்காக போடப்பட்ட விதை தற்போது விருட்சமாக வளர்ந்துள்ளது. அதற்குக் காரணம் காமராஜருக்கு பிறகு எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் தற்போதைய ஆட்சியாளர்கள் வரை அதற்கு அடுத்தடுத்த படிநிலைகளில் குழந்தைகளுக்கு சிறப்பான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவது முக்கிய காரணமாகும்.
தற்போது குழந்தைகளிடையே இன்னொரு விதமான சவாலும் உருவாகி வருகிறது. இணையம் என்ற மாபெரும் அறிவியல் வளர்ச்சி மூலமாக குழந்தைகள் ஆசிரியர்களுக்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் அளவு தங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் அதே இணையம் பல வகை கவனச்சிதறல்களை குழந்தைகளுக்கு உருவாக்குவது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. இதனால் குழந்தைகள் உடல் மற்றும் மன ரீதியான சில பாதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டி வருகிறது.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு கணினி சார்ந்து அறிவியல் தொழில்நுட்பங்களை மாணவர்கள் எளிதில் கையாளும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இது இது மகிழ்ச்சியான செய்தியாக இருப்பினும் வாசிப்புத் திறன் என்பது குறைந்து கொண்டே வருகிறது என்று பல்வேறு ஆய்வுகளில் சொல்லப்பட்டுள்ளது. இது அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது. 2023 ஆம் ஆண்டு வந்த ஒரு ஆய்வு அறிக்கையில் இந்தியாவில் 28 மாநிலங்களில் 15 மாநிலங்களில் 2018 ஆம் ஆண்டு ஒப்பிடும் போது 2022 ஆம் ஆண்டில் வாசிப்பு மற்றும் கணிதத் திறன் கணிசமாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கும் செய்தியாக உள்ளது.
இது மட்டும் அல்லாமல் தற்போதைய சூழலில் நிறைய இடங்களில் மது மற்றும் போதை பொருட்களுக்கான பயன்பாடு அதிகரித்து வருகிறது என்ற செய்திகள் பயத்தை உருவாக்குகின்றன. இந்தக் கொடிய பழக்கம் சில இடங்களில் மாணவர்களிடமும் ஊடுருவி உள்ளது என்பதை மறுக்க முடியாது. இந்த செய்தி பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை கதி கலங்கச் செய்து வருகிறது. தொடர்ந்து மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து எடுக்க வேண்டும். இந்தப் பொறுப்புணர்வு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் ஆனது அல்ல. சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இதில் பங்கு உள்ளது. முக்கியமாக தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் வரும் காட்சிகளில் இந்த பழக்கங்களை காட்சிப்படுத்துவதை குறைக்க வேண்டும். இதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் வரும் காட்சிகள் மற்றும் வசனங்கள் தவிர்க்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் மது மற்றும் போதைப் பொருட்களை தடை செய்வதற்கு அரசாங்கமும் இன்னும் கடுமையான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
குழந்தைகள் சந்திக்கும் இது மாதிரியான சவால்களை அவர்கள் தாங்களாக எதிர்கொள்வதற்கும் சரியான விஷயங்களை கண்டறிந்து செயல்படுவதற்கும் இன்னொரு முக்கியமான விஷயத்தை செய்ய வேண்டும். அதாவது மாணவர்களிடையே உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்து அதில் அதிக கவனம் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிப் பாடங்களில் மட்டும் வெற்றி பெற்றால் போதும் என்ற மனநிலை இருக்கக் கூடாது. ஒவ்வொரு மாணவரும் ஏதாவது ஒரு விளையாட்டுத்துறையில் சாதிப்பதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அதே வேளையில் படிப்பைத் தவிர்த்து வெளி உலக செய்திகளை அறிந்து கொள்ளும் வகையிலும், வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையிலும் அறிவு சார்ந்த நூல்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் நூலகமும், தங்கள் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் இதமான அனைத்து வசதிகளும், அதனை வழிகாட்டும் ஆசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட விஷயங்களை செயல்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் இந்த பொறுப்புணர்வு உள்ளதை உணர வேண்டும். சமூகத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளும் தாங்கள் விரும்பிய படிப்பையும் தங்கள் வளர்த்துக் கொள்ள ஆசைப்படும் திறனையும் அடைவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவது ஒவ்வொருவரின் கடமையாகும். இதை செய்யும் போது ஜவஹர்லால் நேரு அவர்கள் கூறியது போல் இன்றைய குழந்தைகள் நாளைய வல்லரசு இந்தியாவை உருவாக்கும் என்பது உறுதி.
(ஜி. வினோத்குமார் திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர். தடம் பதிக்கும் தளிர்கள் மையமும், தென்தமிழ் இணையதளமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி வகுப்பிலும் கலந்து கொண்டிருப்பவர்)