அடடே... நீ அந்த குட்டி பையனா?!" .. மெஸ்ஸிக்கு காத்திருந்த செம சர்ப்ரைஸ்!
அலபாமா, அமெரிக்கா: நம்ம ஊர்ல ரொம்ப நாள் கழிச்சு சொந்தக்கார பையனைப் பார்த்தா, "அடேங்கப்பா... நான் உன்னை சின்னப் பிள்ளையா இருக்கும்போது பார்த்தது, அதுக்குள்ள இவ்வளவு உயரமா வளர்ந்துட்டியே!" அப்படின்னு பெருசுக ஆச்சரியப்படுவாங்களே, அதே ஃபீலிங் இப்போ நம்ம ஃபுட்பால் லெஜண்ட் லியோனல் மெஸ்ஸிக்கும் வந்திருக்கு!
விஷயம் என்னன்னா, 2026 உலகக் கோப்பைத் தொடருக்கான வார்ம்-அப் மேட்ச்ல அர்ஜென்டினாவும் ஐஸ்லாந்தும் நேத்து மோதினாங்க. வழக்கம் போல அர்ஜென்டினா அசத்தலா ஆடி தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. ஆட்ட நேர முடிவில், 3-0 என்ற கோல் கணக்கில் அசத்தலா ஜெயிச்சது.
காயம் காரணமா கொஞ்ச நாள் ஓய்வுல இருந்த மெஸ்ஸி, இந்த மேட்ச்ல 70-வது நிமிடத்துல சப்ஸ்டிடியூட்டா உள்ள வந்து, வந்த வேகத்துல ஒரு பெனால்டி கோலையும் அடிச்சு மாஸ் காட்டினாரு.
மேட்ச் முடிஞ்சதும் வழக்கம்போல ரெண்டு அணி வீரர்களும் கைகுலுக்கிக்கிட்டு இருந்தாங்க. அப்போ ஐஸ்லாந்து அணியைச் சேர்ந்த 20 வயசு இளம் வீரர் டேனியல் குட்ஜான்சென், மெஸ்ஸி பக்கத்துல வந்து, "தல, என்னைத் தெரியுதா?" என்கிற ரேஞ்சுக்குப் பேச ஆரம்பிச்சிருக்காரு.
முதல்ல முழிச்சாரு நம்ம மெஸ்ஸி. அதுக்கப்புறம் அந்தத் தம்பியே காது கிட்ட வந்து விளக்கமா சொல்ல ஆரம்பிச்சதும் அப்படியே ஸ்வீட் ஷாக் ஆகிட்டாரு மெஸ்ஸி!
மேட்டர் என்னன்னா ஒரு காலத்துல மெஸ்ஸி கூட ஏகப்பட்ட போட்டிகளில் விளையாடிய முன்னாள் வீரரின் மகன்தான் அந்த குட்ஜான்சென்!.. இதைக் கேட்டா யாருக்குதான் ஆச்சரியமா இருக்காது.
பார்சிலோனா கிளப் அணிக்காக மெஸ்ஸி கூட சேர்ந்து 67 போட்டிகள் விளையாடியவர்தான் ஈடூர் குட்ஜான்சென். அவரோட பையன்தான் இந்த டேனியல்! 2008-09 சீசன்ல பார்சிலோனா டீம் 'ட்ரெபிள்' அதாவது மூன்று முக்கியமான கோப்பைகளை, ஜெயிச்சப்போ மெஸ்ஸியும், ஈடூரும் ஒண்ணா சேர்ந்து கலக்கியிருக்காங்க. மொத்தமா 67 போட்டிகளில் இருவரும் இணைந்து விளையாடியுள்ளனர்.
"நான் யாருன்னு தெரியுதா?" அப்படின்னு டேனியல் கேட்டதும் மெஸ்ஸிக்கு ஒரே ஷாக்! அப்புறம்தான் டேனியல், தான் ஈடூர் குட்ஜான்சென்னோட பையன்னு அறிமுகப்படுத்திக்கிட்டாராம். அதன் பிறகு ரொம்ப சந்தோஷமாக டேனியலிடம் பேசிக் கொண்டிருந்தார் மெஸ்ஸி. அந்த உரையாடலே நெகிழ்ச்சிகரமாக இருந்ததாம்.
போட்டி முடிஞ்சு செய்தியாளர்களிடம் பேசிய மெஸ்ஸி, சிரிச்சுக்கிட்டே, "நிஜமாவே எனக்கு அடையாளம் தெரியலப்பா. நான் அவனை கடைசியா பார்த்தப்போ ரொம்ப ரொம்ப சின்னப் பையன்!" அப்படின்னு அந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்துக்கிட்டாரு.
ஒரு காலத்துல கூட விளையாடின நண்பனோட பையன், இப்போ வளர்ந்து தனக்கு எதிராவே மேட்ச் விளையாட வந்து நிக்கிறான் அப்படின்னா, மெஸ்ஸி எவ்வளவு காலமா இந்த ஃபுட்பால் உலகத்தை ஆண்டுட்டு இருக்காருன்னு பாருங்களேன்! 39 வயதை நெருங்கும் மெஸ்ஸி, தன்னுடைய 6-வது உலகக் கோப்பைத் தொடரில் விளையாடத் தயாராகி வர்றார்.
அர்ஜென்டினா தன்னுடைய முதல் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஜூன் 16 அன்னைக்கு அல்ஜீரியாவை எதிர்கொள்ளப் போகுது. 'பழசையெல்லாம் மறக்காம' மெஸ்ஸி அண்ட் கோ இந்த முறையும் கப்பைத் தூக்குவாங்களான்னு பொறுத்திருந்து பார்ப்போம்!