முத்தமிழ் வடிவன்.. அகத்தியருக்கு அருளிய ஆண்டவன்.. முருகப்பெருமானை போற்றும் பழமொழிகள்!
- ஸ்வர்ணலட்சுமி
முத்தமிழ் வடிவனான முதல்வன்,அகத்தியருக்கு அருளிய ஆண்டவன், அருணகிரி பாடிய அமலன், ஆறுமுகம் கொண்ட ஆதவன், ஆறுபடை வீடு உடைய அரசன், ஆறு எழுத்து மந்திரம் "ஓம் சரவணபவ" எனும் சடாக்ஷர மந்திரத்திற்கு உகந்தவன் ஆன முருகன். முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையான இன்று முருகனைபற்றிய பழமொழிகளை நாம் இன்று சுவாரசியமான விளக்கத்துடன் அறிந்து கொள்வோம்.
" யாமிருக்க பயமேன்" எனும் வார்த்தையே நமக்கு மனதில் தைரியம், நேர்மறை எண்ணங்கள் தோன்ற வழிவகுக்கும்.
"வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை"
முருகனின் வேல் தீமைகளை அழித்து வெற்றியைத் தரும் என்பதையும், மயில் இருக்க பயம் இல்லை. அன்பான இதயங்களில் முருகன் நீக்கமற வாழ்கிறார் என்பதையும் விளக்கும் பொன்மொழிகள்.
"அழகென்ற சொல்லுக்கு முருகா!உந்தன் அருள் அன்றி உலகிலே பொருள் ஏது முருகா!".
"முருகு" என்றால் அழகு, இளமை, தெய்வீகம் இவற்றை உணர்த்தும் அருபெரும் மகத்தான சொல்.
பழமொழிகள் வடிவில் முருகப்பெருமான் குறித்த முருகனின் சிறப்பை உணர்த்தும் சொற்றொடர்கள் இதோ..
"வேலை வணங்குவதே வேலை"
முருகப்பெருமானின் ஆயுத மான வேலை வணங்கினாலே போதும். நாம் செய்யும் வேலை சரியாக நடக்க முருகனின் வேலை வழிபடுவது அவசியம் என்பதை உணர்த்துகிறது.
"வயலூர் இருக்க அயலூர் தேவையா?:
வயலூர் முருகனை வணங்கினாலே போதும், வேறு தெய்வங்களை தேடி வேறு ஊருக்கு அலைய வேண்டியதில்லை என்பதே இதன் பொருள்.
"அப்பனை பாடிய வாயால் ஆண்டிச் சுப்பனை பாடுவேனா ?:
சிவபெருமானை பாடிய வாய் முருகனைப் பாடுமா? என்ற விவாதம் எழுந்த பொழுது முருகனே சிவனுக்கு குருவாக- சுவாமிநாதனாக இருந்ததால் முருகனைப் பாடுவது பாக்கியம் என பொருள்படுகிறது.
"காசுக்கு கம்பன் கருணைக்கு அருணகிரி "
வள்ளல் தன்மைக்கு கம்பர் பெருமானும் முருகனின் அருள் பெற அருணகிரிநாதர் வழிபாடு அவசியம் என்பதை உணர்த்துகிறது.
"சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் "
முருகனுக்கு உகந்த சஷ்டி திதியில் விரதம் இருந்து வழிபாடுகள் செய்ய அகப்பையில்( கருவில்) முருகனே குழந்தையாக வந்து பிறப்பார் என்பது ஐதீகம். சஷ்டியில் விரதம் இருக்க அகப்பையில் குழந்தை வரும் என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது.
"கந்தன் பாதம் கனவிலும் காக்கும்"
முருகனின் பாதத்தை நாடி வழிபடுவது,எல்லா சூழ்நிலைகளிலும், கனவிலும் காக்கும் என்பதை உணர்த்துகிறது இப் பழமொழி.
"செந்தில் நமக்கு இருக்க சொந்தம் நமக்கு எதற்கு?"
செந்தில் ஆண்டவன் முருகன் துணை இருந்தாலே அனைத்து உறவுகளும் நம்முடன் இருப்பதாகும். பிற உறவுகளை விட முருகனின் துணையை ஆழமாக உணர்த்துகிறது இப்பழமொழி.
"முருகனுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை, மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை "
மருத்துவ குணங்கள் நிறைந்த மிளகு பலவித நோய்களை தீர்க்கும். அதுபோல,முருகன் ஒருவனை நம்பி வழிபட்டாலே போதும் என்பதை உணர்த்துகிறது இந்த பழமொழி.
"சுக்குக்கு மிஞ்சிய வைத்தியம் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை":
சுக்கு எவ்வாறு உடலுக்கு சிறந்த மருந்தாக அமைகிறதோ?அதுபோல முருகப்பெருமான் அனைவருக்கும் சிறந்த காவல் தெய்வமாக உள்ளார் என்பதை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை என்று உணர்த்துகிறது இப் பழமொழி.
வேலாயுதத்தின் சிறப்பையும்,முருகனின் பெருமைகளையும் சில பழமொழிகள் வாயிலாக அறிந்து கொண்டோம். மேலும் இது போன்ற சுவாரசியமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.