இரவுக்குப் பின்னால் ஒரு விடியல் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (7)

Su.tha Arivalagan
Oct 23, 2026,04:40 PM IST

- மு. ரம்யா ஆனந்த்


இருள் சூழ்ந்த வாழ்க்கையிலும்,

இதயம் மட்டும் நம்பிக்கை கொள்ளட்டும்!

இன்று கண்ணீர் சிந்தும் விழிகளும்,

நாளை ஆனந்தத்தில் சிரிக்கட்டும்!


தோல்விகள் கதவைத் தட்டினாலும்,

துவண்டு போகாதே மனமே!

தடைகள் பாதையை மறைத்தாலும்,

தன்னம்பிக்கையை இழக்காதே!


நேற்றைய வலிகள் பாடங்களாகும்,

இன்றைய கண்ணீர் அனுபவமாகும்!

நாளைய வெற்றிப் பாதையிலே,

இவையெல்லாம் படிக்கற்களாகும்!




நிலவுக்கும் தேய்பிறை உண்டு,

மலருக்கும் வாடும் காலம் உண்டு!

அதற்காக அவை தம் இயல்பை

என்றேனும் இழந்ததுண்டா?


மேகங்கள் சூரியனை மறைக்கலாம்,

வானம் என்றும் இருளாகுமா?

புயல்கள் வாழ்க்கையைப் புரட்டலாம்,

வசந்தம் வராமல் போகுமா?


காத்திருக்கும் ஒவ்வொரு நொடிக்கும்,

ஒரு காரணம் இருக்கிறது!

தாங்கிக்கொள்ளும் ஒவ்வொரு வலிக்கும்,

ஒரு புதிய பாடம் இருக்கிறது!


இன்று உன் பாதை இருளாக இருக்கலாம்,

உன் கனவுகள் தூரமாக இருக்கலாம்!

ஆனால் நம்பிக்கையோடு நடந்திடு,

நாளை உன் வசமாகலாம்!


இரவு என்பது முடிவல்ல,

விடியலுக்கான முன்னுரை!

கண்ணீர் என்பது தோல்வியல்ல,

புன்னகைக்கான முன்னுரை!


இருள் எவ்வளவு நீண்டாலும்,

விடியல் வந்தே தீரும்!

நம்பிக்கை நெஞ்சில் வாழ்ந்தால்,

நம் வாழ்வும் மலர்ந்தே தீரும்!


இரவுக்குப் பின்னால் ஒரு விடியல்…

அந்த விடியலில் நமக்கான

புதிய வாழ்க்கை காத்திருக்கிறது! 


(கவிஞர் மு. ரம்யா ஆனந்த், D.T.Ed., M.A., M.Ed. கல்வித் தகுதிகளைப் பெற்றவர். கல்வித்துறையில் ஆர்வம் கொண்டவர். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதுடன், பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள், தன்னம்பிக்கை மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தனது எழுத்துகளின் மூலம் வாசகர்களின் மனதில் நல்ல சிந்தனைகளையும் நம்பிக்கையையும் விதைப்பதை விரும்புகிறார்)