கால் வைத்த இடமெல்லாம் வெற்றித் தடம்.. சாதிக்கத் துடிக்கும் மாணவர் மோ.வசீகரன்!
சென்னை: பெயருக்கேற்றார் போல, தான் தொடும் துறைகள் அனைத்திலும் அனைவரையும் தன் திறமையால் வசியம் செய்து வருகிறார் மாணவர் மோ.வசீகரன்.
"எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்" என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப, கல்வி முதல் கலைத்திருவிழா வரை சென்ற இடமெல்லாம் முத்திரை பதித்து வரும் இந்த 'அசத்தல் திலகம்', திருவள்ளூர் மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்து வருகிறார்.
பெயர் - மோ.வசீகரன், வயது:13. தந்தை பெயர் வெ.மோகன் பாபு, தாயின் பெயர் மோ.நீலவேணி. ஒரே ஒரு தங்கை, பெயர் மோ.மோனிகா. ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் வசீகரன் 8வது வகுப்பு படித்து வருகிறார். தந்தை தலைமைச் செயலகத்தில் ரெக்கார்ட் கிளார்க் ஆக பணியாற்றுகிறார். தாயார் இல்லத்தரசி.
மோ.வசீகரன், கல்வியில் ஒரு துருவ நட்சத்திரமாக ஜொலிக்கிறார். எல்கேஜியிலிருந்தே வகுப்பில் டாப்பர்தான். தற்போது 500-க்கு 490-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று வகுப்பில் முதலிடம் பிடித்துள்ள இவர், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் தேர்வில் (NMMS 2023-24) 180-க்கு 108 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட அளவில் இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மோ.வசீகரன் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
NMMS தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற, தலைமையாசிரியர் C.விஜய் விஸ்வநாத் அவர்கள், ஆசிரியர் பயிற்சி மாணவர்களைக் கொண்டு மதியம் மற்றும் மாலை நேரங்களில் சிறப்புப் பயிற்சிகளை வழங்கினார். இதற்காக "NMMS Achievers" என்ற வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி, அதன் மூலம் பாடக்குறிப்புகள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தினார்.
அனைத்து ஆசிரியர்களுக்கும் பிடித்த மாணவன் என்பதுடன் மிக மிக ஒழுக்கமான பையன் என்பதும் கூட மோ. வசீகரனின் அடையாளமாக உள்ளது.
கலை மற்றும் இலக்கியப் போட்டிகளில் அதிரடி
மோ.வசீகரனின் திறமை வகுப்பறையோடு நின்றுவிடவில்லை. மேடைப் பேச்சிலும், கலைகளிலும் அவர் ஒரு பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார் என்பதுதான் சிறப்பே.
ஆங்கில இலக்கிய மன்றம் - பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பிடித்து, மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று அசத்தியுள்ளார்.
தமிழ் பேச்சுப்போட்டி- திருவள்ளூர் மாவட்ட அளவில் நடைபெற்ற பாரதிதாசன் பேச்சுப்போட்டியில் இரண்டாம் பரிசுடன் ரூ. 2,500 ரொக்கப் பரிசையும் வென்றுள்ளார்.
பண்முகத் திறன் - வில்லுப்பாட்டு, நடனம், கட்டுரைப் போட்டி மற்றும் விளையாட்டு என எதிலுமே வசீகரன் பின்வாங்கியதில்லை.
வெற்றிக் கூட்டாளி - ஆசிரியர்களின் வழிகாட்டுதல்
மோ.வசீகரனின் இந்தத் தொடர் வெற்றிகளுக்குப் பின்னால் அவரது பள்ளியின் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்கள் தூண்களாக உள்ளனர்.
"மாணவர்களின் தனித்திறனை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதே ஒரு சிறந்த கல்வி நிறுவனத்தின் அடையாளம்" என்பதற்கிணங்க, பள்ளித் தலைமை ஆசிரியர் சி. விஜய் விஸ்வநாத் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி ஆசிரியர்கள் சிறப்புப் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.
வசீகரனின் வகுப்பு மற்றும் ஆங்கில ஆசிரியர் எஸ். மஞ்சு பார்கவி பெரும் உறுதுணையாக இருந்து வருகிறார். குறிப்பாக, ஆங்கிலப் பேச்சுப்போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற எஸ். மஞ்சு பார்கவி (ஆங்கில இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர்) உறுதுணையாக இருந்துள்ளார்.
தமிழ் பேச்சுப்போட்டியில் பரிசு பெற தமிழ் ஆசிரியர் ஆர். ஷோபா கமிலா ராணி (கலைத்திருவிழா ஒருங்கிணைப்பாளர்) முறையான பயிற்சிகளை அளித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ் கனவு: மக்கள் சேவை
இத்தனை வெற்றிகளையும் குவித்து வரும் வசீகரனின் லட்சியம் மிகவும் உயர்ந்தது. எதிர்காலத்தில் ஒரு I.A.S. அதிகாரியாக உருவெடுத்து, அடித்தட்டு மக்களுக்குச் சிறப்பான சேவை செய்வதையே தனது வாழ்நாள் இலக்காகக் கொண்டுள்ளார்.
1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை தனக்குப் பயிற்றுவித்து, இந்த மாபெரும் வெற்றியை அடையச் செய்த அனைத்து ஆசிரியர்களுக்கும், தனது பெற்றோருக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் வசீகரன் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
விடாமுயற்சியும், முறையான பயிற்சியும் இருந்தால் எட்டாம் வகுப்பிலேயே எட்டாத உயரத்தைத் தொடலாம் என்பதற்கு வசீகரன் ஒரு வாழும் உதாரணம். சாதிக்கத் துடிக்கும் இந்த இளம் சாதனையாளரை நாமும் வாழ்த்துவோம்!