மீட்டிங்!
- மடிப்பாக்கம் பிரபாவதி
அமுதன் தனக்குக் கிடைத்தப் பொன்னான நேரத்தை வீண் செய்ய விரும்பவில்லை.
"நீங்க என்ன விஷயமா பாக்க வந்தீங்க?" அமுதன்.
"நேத்தே மெசேஜ் பண்ணியிருந்தேன். நீங்க பாக்கலியா?" ஜனனி.
"எனக்கு அதுக்கெல்லாம் டைம் இல்ல. சீக்கிரம் சொல்லுங்க. அப்பாய்ண்ட்மென்ட் எப்டி கிடைச்சுது?"
"சார் பைவ் மினிட்ஸ் ப்ளீஸ். ஐ வான்ட் டு டெல் சம்திங் அபௌட்.. " ஜனனியை முடிக்க விடவில்லை.
"நோ நத்திங், ஐ ஹேவ் நோ டைம். ப்ரீத்தி கிவ் மி தி பைல்"
"இந்தாங்க சார். ஷார்ப்பா த்ரீயோ க்ளாக் ப்ரஷாந்த் அரோரா வந்துடுவார்" ப்ரீத்தி.
"அரேஞ்ச்மென்ட்ஸ்?" அமுதன்.
"எவ்ரிதிங் பக்கா சார்" ப்ரீத்தி.
மூன்று மணிக்கு இரண்டு நிமிடங்கள் முன்னரே கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு வந்து விட்டான் அமுதன். மணி மூன்றரை, நான்கு என்று போய்க் கொண்டிருந்தது.
எல்லாவற்றையும் விளக்குவதற்காக ஒரு வாரமாக கஷ்டப்பட்டு தயார் செய்து கம்ப்யூட்டருடன் அமர்ந்திருந்தான் மனோஜ், அசிஸ்டென்ட் மானேஜர். ப்ரமோஷன் உறுதி என்று நம்பினான்.
"ஹலோ"
"நான் ஜனனி"
"எந்த ஜனனி?"
"கொஞ்சநேரம் முன்னாடி ஆபீஸ் வந்திருந்தேன்"
"ஷிட்" போனை கட் செய்தான். யாரிவள்? எதற்கு என்னை சந்திக்க வேண்டும்? குழம்பினான்.
எல்லாம் கேன்சலானது. அரோரா போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. பல கோடி ரூபாய் பிசினெஸ். அமுதன் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தான். அப்போது ப்ரீத்தி ஒரு மெயில் அனுப்பினாள்.
அதில் ப்ரஷாந்த் அரோரா உடல் நிலை சரியில்லாததால் சென்னை அலுவலகத்திலிருந்து ஜனனியை போகச் சொல்லியிருந்தார். ஜனனி அன்று மாலை தனக்கு வீட்டில் பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வருவதால் மீட்டிங்கை முன்னதாக அரேஞ்ச் செய்யக் கேட்டிருந்தாள். அமுதன் அவள் அனுப்பிய மெசேஜையும் பார்க்கவில்லை. அவளையும் பேசவிடவில்லை. நொந்து போனான். ஜனனிக்கு போன் செய்தான். பிஸி என்று கூறியது. ஆத்திரத்துடன் கட் செய்தான்.
அம்மா போன் செய்தாள். "அமுதா மணி ஆச்சு. நாம பொண்ணு வீட்டில் ஆறு மணிக்கு இருக்கணும். நீ வீட்டுக்கு வந்துடு". போனை வைத்து விட்டாள். இவள் வேறு, சூழ்நிலை தெரியாமல் என்று நொந்து கொண்டான். தன் திருமண விஷயத்தை அம்மாவின் விருப்பத்திற்கே விட்டிருந்தான்.
பரஸ்பரம் எல்லாம் பேசினார்கள். ஸ்வீட் காரம் வந்தது. பெண்ணை அவள் அக்கா அழைத்துக் கொண்டு வந்தாள். "வாம்மா ஜனனி, இப்பிடி வந்து உட்கார்ந்துக்கோ " அம்மா சொன்னதும் சட்டென நிமிர்ந்தான்.
அவளேதான், அதே ஜனனி தான். அவளும் பார்த்தாள். அசடு வழிந்தான்.
"எங்க பையனோட எதுவும் பேசணும்னா நீங்க ரெண்டு பேரும் பேசிக்கோங்க" அம்மா சொன்னாள்.
"இல்ல இல்ல நாளைக்கு திரும்பவும் மீட்டிங் வச்சுக்கலாம்" என்றான் அவசரமாக. நாளைக்கா, மீட்டிங்கா? எல்லோரும் யோசிப்பதற்குள், "திரும்பவுமா" ஜனனி சிரித்தாள். பிறகுதான் எல்லோருக்கும் விஷயம் தெரிய வந்தது. அமுதன் தன் தவறை உணர்ந்தான். இப்போது ஜனனியை எல்லா விதத்திலும் மிகவும் பிடித்திருந்தது.
"ஹலோ, மிஸ்டர் அரோரா, அடுத்தவாரம் டெஸ்பேட்ச் பண்ணிடுவோம்" அமுதன் சொன்னதும் அரோரா மகிழ்ந்தார்.
அமுதன் இண்டஸ்ட்ரீஸ் மீட்டிங்ஸ் எல்லாமே திருமதி ஜனனி அமுதன் பார்த்துக் கொண்டாள்.
(எழுத்தாளர் பிரபாவதி, சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். பேக்கிடெர்ம் டேல்ஸ் (publishers) மூலம் ஏனையோருடன் சேர்ந்து 42 புத்தகங்களில் எழுதியிருக்கிறார். ராணி, விகடகவி, மலர்வனம், லேடீஸ் ஸ்பெஷல், விருட்சம், இறகுகள், தமிழ்நாடு இ பேப்பர், மின் கைத்தடி உள்ளிட்டவற்றில் இருபத்தி ஐந்துக்கும் மேல் சிறுகதைகள் எழுதியுள்ளார். தனது மகளுடன் இணைந்து ஒரே கதையை ஆளுக்கொரு அத்தியாயமாக எழுதி 2 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். சின்னஞ்சிறு கதைகள் என்ற சிறுகதை தொகுப்பும், Boomer to GenZ அலப்பறைகள் என்ற 35 பகுதிகள் அடங்கிய நாவலும் எழுதியுள்ளார்.)