தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்: தவெக.,க்கு கோர்ட் உத்தரவு
சென்னை: தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகளைப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களின் போது, தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, "பெற்றோர்கள் தவெக கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று குழந்தைகள் தங்களது பெற்றோர்களை வற்புறுத்த வேண்டும்" என்று விஜய் பேசி இருந்தார்.
தேர்தல் பிரச்சாரங்களில் குழந்தைகளை இது போன்ற அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது மற்றும் தூண்டுவது இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கும், குழந்தைகள் உரிமைப் பாதுகாப்புச் சட்டங்களுக்கும் எதிரானது எனக் குறிப்பிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து தமிழக வெற்றிக் கழகம் தனது விளக்கத்தை அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல, தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையமும் தங்களது பதிலை மனுவாகத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டனர்.இரு தரப்பினரின் விளக்கங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 1-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்து வரும் தவெக மற்றும் அதன் தலைவர் விஜய் மீது தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் தவெக தரப்பில் ஜூலை 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பதில் மனுக்களைப் பொறுத்தே இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் என்பதால், இந்த விவகாரம் தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது.