பராசக்திபட வெளியீட்டிற்கு தடை விதக்க மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்துள்ள திரைப்படம் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கியுள்ள 'இத்திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், தனது செம்மொழி என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ள 'பராசக்தி' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என உதவி இயக்குநர் ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பராசக்தி படம் தயாரிப்பு குறித்து 2024 ஆம் ஆண்டு தகவல் தெரிந்தும் 2025 டிசம்பர் மாதம் தான் மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார் என கூறி படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், பராசக்தி படத்தின் கதையையும் செம்மொழி கதையையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் அறிக்கையை இதுவரை தாக்கல் செய்யவில்லை என கூறி படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், கதை திருட்டு தொடர்பான வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஜனவரி 28ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.