திருப்பரங்குன்றத்தில் 144 தடை ரத்து.. இன்றே தீபம் ஏற்ற வேண்டும்.. மதுரை ஹைகோர்ட் தனி நீதிபதி உத்தரவு
மதுரை : திருப்பரங்குன்றத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த 144 தடை உத்தவு ரத்து செய்யப்படுவதாகவும், இன்றே திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை உயர்நீமன்ற பெஞ்ச் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கார்த்திகை தீபத் திருநாளன்று திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை வசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியதுடன். 10 சிஆர்பிஎஃப் காவலர்கள் பாதுகாப்புடன் சென்று மலை மீதுள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என மனுதாரருக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். ஆனால் இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதுடன், திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இதனால் கோர்ட் உத்தரவுப்படி நேற்று திருப்பரங்குன்றம் மலை மீது மனுதாரர் தீபம் ஏற்ற சென்ற போது போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து பதற்றம் ஏற்பட்ட நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் இரு நீதிபதிகள் பெஞ்ச்சில், தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததால், இந்த வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது. இதை விசாரித்த இரண்டு நீதிபதிகள் பெஞ்ச், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை தடை செய்ய முடியாது என கூறியதுடன், தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடியும் செய்தனர்.
இதற்கிடையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை அமல்படுத்ததத் தவறியதாக கூறி மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த ஜி.ஆர்.சுவாமிநாதன், மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் ஆகியோர் வீடியோ கான்பிரன்சிங்கில் உடனடியாக ஆஜராக உத்தரவிட்டார். அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், திருப்பரங்குன்றத்தில் அமலில் உள்ள 144 தடை ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் இன்றே தீபம் ஏற்ற வேண்டும். தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கு மனுதாரருக்கு மதுரை போலீஸ் கமிஷனர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக நாளை காலை 10.30 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.