மதுரையின் மகாராணியாக பட்டம் சூட்டப்பட்ட மீனாட்சிக்கு.. நாளை திருக்கல்யாணம்!

Swarnalakshmi
Apr 27, 2026,12:32 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மகாராணி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் சித்திரை திருவிழாவின் எட்டாம் நாள் நேற்று 26.04.2026 கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிலையில் நாளை அனைவரும் ஆவலோடு காத்திருக்கும் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெறவுள்ளது.


பட்டாபிஷேக விழாவினை முன்னிட்டு கோயிலில் உள்ள ஆறுகால் பீடத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு  அரசியாக  முடி சுட்டுவதற்காக ராயர் கிரீடம் எனப்படும் ரத்தின ஆபரணங்கள் இழைத்த வைர கிரீடம், விநாயகர் சன்னதியில் இருந்து கொண்டுவரப்பட்டு,புனித நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. 


மாலை 3:00 மணி அளவில் கோயிலுக்கு புறப்பாடு நடைபெற்றது. மாலை 6:00 மணி முதல் அம்மன் சன்னதி  ஆறு கால் பீடத்தில் திருமலை நாயக்கர் வழங்கிய ரத்தின கிரீடத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் இரவு 07:36 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டமும், வெற்றிக்கு அறிகுறியாக வேப்பம்பூ மாலையும் அணிவிக்கப்பட்டு அம்மனிடம் இருந்து செங்கோல் பெற்று,சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் வழங்கப்பட்டது.


இரவு 8 மணிக்கு மேல் அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில்  மாசி வீதிகளில் உலா வந்து அருள் பாலித்தார். இன்று துவங்கும் மீனாட்சி அம்மன் அரசாட்சி ஆவணி மாதம் வரை நடைபெறும்.

 

செங்கோல் சமர்ப்பணம் :




வைர கிரீடம் சூட்டப்பட்டு கையில் செங்கோல் வழங்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் உறுப்பினரான அமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பழனிவேல் ராஜன் உள்ளிட்டோர் இந்த செங்கோலை ஊர்வலமாக கொண்டு வந்து சமர்ப்பித்தனர்.

 

ஆட்சிப் பொறுப்பு :


மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றதை  அடுத்து அருள்மிகு மீனாட்சியம்மன் மதுரையை ஆட்சி செய்யும் அரசியாக  மதுரை நகரின் ஆட்சி பொறுப்பை ஏற்கிறார் என்பது ஐதீகம். திருவிழாவின் எட்டாம் நாளளில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெறும்.


அம்மன் நான்கு மாதங்களும் பின்னர் சுந்தரேஸ்வரர் 8 மாதங்களும் மதுரையை ஆட்சி செய்வதாக ஐதீகம்.


பக்தர்கள் தரிசனம்:




பல்வேறு இடங்களில் இருந்தும் நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் "மீனாட்சி அம்மன் துணை" என்று முழக்கமிட்டு  மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக  நிகழ்வை தரிசித்தனர்.


நாளை திருக்கல்யாண நிகழ்வையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை நகரமே விழாக்கோலமும், கல்யாணக் கோலமும் பூண்டு காணப்படுகிறது. திருக்கல்யாண வைபவத்தைக் காண வரும் பக்தர்களுக்கு விருந்து நிகழ்ச்சிகளும் கோவிலைச் சுற்றிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


மேலும் இது போன்ற  சுவாரஸ்யமான  ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்  தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலக்ஷ்மி  பாலசுப்ரமணி