மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது

Su.tha Arivalagan
Sep 09, 2026,01:17 PM IST

சென்னை : மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளில் அக்டோபர் 06ம் தேதியன்று ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளதால் இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி உறுதியாகி உள்ளது.


மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை துவங்கி உள்ளது. செப்டம்பர் 16ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது. அதிமுக சார்பில் 3 நாட்களுக்கு விருப்பமனு அளிக்கலாம் என்ற அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருந்தார். இந்த விருப்பமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, வேட்பாளர் அறிவிக்கப்படுவார்கள் என சொல்லப்பட்டது. தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளுமே அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள் என்பதால், வலுவான வேட்பாளரை அதிமுக நிறுத்த வாய்ப்புள்ளதால் யாரை வேட்பாளராக அக்கட்சி அறிவிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.


இதற்கிடையில் இடைத்தேர்தல் தொடர்பாக திமுக.,வின் ஆலோசனை கூட்டம் இன்று காலை அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா? அப்படியே போட்டியிட்டாலும் அதிமுக.,விற்கு வழிவிட்டு டம்மியாக யாராவது ஒருவரை வேட்பாளராக நிறுத்துமா? அல்லது இந்த இரண்டு தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவாரா? என்றெல்லாம் பல விதமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை இந்த இரண்டு தொகுதிகளிலும் திமுக சார்பில் போட்டியிட இரண்டு வலுவான வேட்பாளர்களை திமுக முதல் ஆளாக அறிவித்து விட்டது.




ஆளும் கட்சியான தவெக, இரண்டு தொகுதி இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 அமைச்சர்களை பொறுப்பாக நியமித்துள்ளது. சட்டசபையில் தங்களின் எம்எல்ஏ.,க்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பெரும்பான்மையை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், நடக்க போகும் ஒவ்வொரு இடைத்தேர்தலும் தவெக.,விற்கு முக்கியம். அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியான நிலைக்கு தவெக தள்ளப்பட்டுள்ளது. இதனால் அவர்களும் வெற்றி பெற தீவிர முயற்சிகளை மேற்கொள்வார்கள்.


இதற்கிடையில் நாம் தமிழர் கட்சியும் இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இதனால் தவெக, அதிமுக, திமுக, நாம் தமிழர் என்ற நான்கு முனை போட்டிகள் இந்த தேர்தலில் நிலவ உள்ளது உறுதியாகி உள்ளது. திமுக.,வை தொடர்ந்து அதிமுக, தவெக கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை அறிவிப்பாளர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் தவெக சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.