மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: வாக்குப்பதிவு நிறுத்தம்...போலீசுடன் திமுக வாக்குவாதம்!
மதுராந்தகம் : மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (06.10.2026) விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு வாக்குச்சாவடிகளில் சர்ச்சை மற்றும் முறைகேடு புகார்கள் எழுந்ததால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் மை வைக்கப்பட்டதாக புகார்:
மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட தண்டரை புதுச்சேரி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு திடீரென நிறுத்தப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) குறிப்பிட்ட ஒரு கட்சியின் சின்னத்திற்கு நேரே உள்ள பட்டனில் மை (Ink) வைக்கப்பட்டிருப்பதாக முறைகேடு புகார் எழுப்பப்பட்டது. இந்த விவகாரம் வாக்குச்சாவடி மையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அதிகாரிகளால் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
திமுகவினர் - காவல்துறை இடையே வாக்குவாதம்:
இதனிடையே, மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட வில்வராயநல்லூர் வாக்குச்சாவடி மையத்திலும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி மையத்திற்கு அருகே தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகளை மட்டும் காவல்துறையினர் அனுமதிப்பதாகக் கூறி, திமுகவினர் காவல் துறையினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தங்களையும் வாக்குச்சாவடி மையத்தின் அருகே அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுகவினர் காவல்துறையினரிடம் முறையிட்டனர்.
இந்த வாக்குவாதம் தீவிரமடைந்ததை தொடர்ந்து, பாதுகாப்பு பணிக்காக அங்கிருந்த காவல்துறையினர் தலையிட்டு, இரு தரப்பினரையும் வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்கு அப்பால் செல்லுமாறு உத்தரவிட்டு அனுப்பி வைத்தனர். மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் அடுத்தடுத்து நடைபெறும் இத்தகைய சம்பவங்களால் பெரும் பதற்றத்துடன் காணப்படுகிறது.
தாராபுரத்திலும் வாக்குப்பதிவு நிறுத்தம் :
மதுராந்தகத்தை போன்று தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு கட்சியின் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தேர்தல் அலுவலர் கூறியதாக புகார் எழுந்ததை அடுத்து, மாற்றுக் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கும் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.