மகா கந்த சஷ்டி விரதம் 2026: முருகனே செந்தில் முதல்வனே.. மாயோன் மருகனே!

Swarnalakshmi
Sep 30, 2026,12:22 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


" முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே- ஒரு கை முகன்

தம்பியே நின்னுடைய  தண்டைக்கால் எப்பொழுதும்

நம்பியே கை தொழுவேன் நான்."


மகா கந்த சஷ்டி விழா  பராபவ வருடம் 20 26 நவம்பர் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை துவங்க உள்ளது. தொடர்ந்து சூரசம்ஹாரம் விழா நவம்பர் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.


கந்த சஷ்டி விழாவிற்காக விரதம் இருக்கும்  பக்தர்கள் முருகப்பெருமானுக்கு 48 நாட்கள், 21 நாட்கள்,11 நாட்கள், 6 நாட்கள் விரதம் என்றிலிருந்து துவங்க வேண்டும்? என்னென்ன பலன்கள் கிடைக்கும்  என்பதை பற்றிய சிறு தகவல்களை இப்பதிவில் பார்ப்போம்.




கந்தா! கடம்பா! கதிர்வேலா! என்று அனுதினமும் முருகனை நினைத்து வாழும் முருக பக்தர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் முருகனுக்குரிய விரதங்களில் மிக அற்புதமான விரதம்" மகா கந்த சஷ்டி விரதம்" ஆகும்.


கந்த சஷ்டி விரதம் இருந்து கந்த கடவுள் முருகனை மனதார நினைத்து வழிபாடு செய்பவர்கள் தீராத வினைகள் தீரும், மற்றும் அவர்கள் வேண்டிய வரங்கள் கிட்டும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.


யாரெல்லாம்?கந்த சஷ்டி விரதம் இருப்பது சிறப்பு :


கந்த சஷ்டி விரதம் இருந்து கந்த கடவுளை வழிபடுவதனால் தீராத வினைகள் தீரும். வேண்டிய வரங்கள் யாவும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அசுரர்களை அழித்து தேவர்களை காத்தது போல நம் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து துன்பங்களையும் போக்கி  முருகப்பெருமான் அனைவரையும் காத்தருள்வார் என்று முருக பக்தர்கள் நம்பி கந்த சஷ்டி விரதம் இருப்பது வழக்கம்.


திருமணமான தம்பதியர் வெகு நாட்களாக குழந்தை வரம் இன்றி வேண்டுதல்கள் வைத்து, கந்த சஷ்டி விரதம் இருந்து நிறைய பேர் குழந்தை வரம் பெற்றுள்ளார்கள் என்பதனால் குழந்தை பாக்கியம் பெறுவதற்காக காத்திருக்கும் பலரும் இந்த விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள். இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு முருகனே குழந்தையாக வந்து பிறப்பான் என்பது ஐதீகம்.


மேலும் குடும்பத்தில் அடுத்தடுத்து பிரச்சினை வருபவர்களும், தீராத கடன் தொல்லை, ஆரோக்கியம் இன்மை, திருமண தடை உள்ளவர்கள், மன நிம்மதி வேண்டுவோர், என பலரும் கந்த சஷ்டி விரதம் இருந்து சகல சௌபாக்கியங்களை பெறுகின்றனர்.


எந்த நாளில் இருந்து மகா கந்த சஷ்டி விழா(2026) விரதம் துவங்க வேண்டும்?


"ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே 

 ஈசருடன்  ஞான மொழி பேசும் முகம் ஒன்றே 

கூறு மடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே 

குன்றருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே 

மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே 

வள்ளியை  மணம் புணர வந்த முகம் ஒன்றே 

ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்

ஆதி அருணாச்சலம் அமர்ந்த பெருமாளே".


விரத நாட்கள் பற்றிய விபரம் :


மகாகந்தசஷ்டி விழா நவம்பர் 10, 2026 செவ்வாய்க்கிழமை அன்று துவங்கி நவம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை 'சூரசம்ஹாரம் விழா' நடைபெற உள்ளது.


1. கந்த சஷ்டி விரதம் 48 நாட்கள் விரதம் இருப்பவர்கள் செப்டம்பர் 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று துவங்கலாம்.

2. 21 நாட்கள் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அக்டோபர் 26 ஆம் தேதி திங்கட்கிழமை துவங்கலாம்.

3. 11 நாட்கள் விரதம் இருப்பவர்கள் நவம்பர் 5 வியாழக்கிழமை துவங்கலாம்.

4. ஆறு நாட்கள் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் நவம்பர் 10 செவ்வாய்க்கிழமை துவங்கலாம்.

5. ஒரு நாள் மட்டும் விரதம் இருப்பவர்கள் நவம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை மட்டும் விரதம் இருப்பது சிறப்பு.


"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்". 

"கந்தனை நம்பினோர் கைவிடப்படார் "


மேலும் இது போன்ற  சுவாரஸ்யமான  ஆன்மீகத் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.