2025ம் ஆண்டை அதிர வைத்த கரூர்.. ஷாக் கொடுத்த சார்.. செங்கோட்டையனால் ஷேக் ஆன அதிமுக!

Su.tha Arivalagan
Dec 22, 2025,05:25 PM IST

சென்னை: 2025-ம் ஆண்டு தமிழ்நாட்டின் அரசியல், சமூகம் மற்றும் இயற்கைச் சூழலில் பல முக்கிய மாற்றங்களையும், அதிர்வுகளையும் ஏற்படுத்திய ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டில் நிகழ்ந்த சில முக்கியமான சம்பவங்களின் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.


2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகத் தொடங்கி விட்டன. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) மாநிலம் தழுவிய அளவில் கவனத்தைப் பெற்றது. இந்த ஆண்டின் மிகப் பெரிய அரசியல் எதிர்பார்ப்பும், ஹைப்பும் எது என்றால் அது சந்தேகமே இல்லாமல் தவெகதான். விஜய்தான் இந்த ஆண்டின் ஹைலைட்டாக இருந்துள்ளார்.


விஜய் நடந்தால் பரபரப்பு, வீட்டை விட்டு வெளியே வந்தால் பரபரப்பு, ஏதாவது அறிக்கை விட்டால் பரபரப்பு என்று மீடியாக்கள் விஜய்யையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டுள்ளன.


அதிமுகவில் அதிரடி: 




செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது மற்றும் சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய சந்திப்புகள் அதிமுக வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பின. இதில் செங்கோட்டையன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் அதிரடியாக தவெகவில் போய்ச் சேர்ந்து விட்டார்.


நீட் தேர்வு, மசோதாக்கள் ஒப்புதல் போன்றவற்றில் ஆளுநர் மற்றும் மாநில அரசுக்கு இடையேயான அதிகாரப் போட்டி இந்த ஆண்டும் நீடித்தது.


சோகமான விபத்துக்கள்


கரூர் கூட்ட நெரிசல் (செப்டம்பர் 2025): செப்டம்பர் 27 அன்று கரூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பேரணியின் போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது.


சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து (ஜூலை 2025): விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இது பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியது.


இயற்கைச் சீற்றங்கள்


'டித்வா' புயல் (Cyclone Ditwah - நவம்பர் 2025): நவம்பர் மாத இறுதியில் வங்கக்கடலில் உருவான 'டித்வா' புயலால் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. பல மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.


ஜூன் மாதம் பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, அவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய 'வாட்டர் பெல்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.


பெண்களிடையே அதிகரித்து வரும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க HPV தடுப்பூசி போடும் திட்டத்தைத் தமிழக அரசு விரிவுபடுத்தியது.


கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று, ராஜேந்திர சோழனின் சிறப்பைப் போற்றும் வகையில் நினைவு நாணயத்தை வெளியிட்டார்.


சார் தேர்தல் பணிகள்


2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், குறிப்பாகப் பெண்களின் பெயர்கள் அதிக அளவில் நீக்கப்பட்டது குறித்த தரவுகள் விவாதத்திற்குள்ளானது. கிட்டத்தட்ட 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்களது பெயர்கள் இவை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடரப்பட்ட அகழ்வாய்வுகளில் 5,300 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டது உலக அளவில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், தமிழ்நாடு அரசின் இந்த கண்டுபிடிப்பை மத்திய அரசு இன்னும் அங்கீகரிக்கவில்லை.