திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்!
- சிவ.ப.மாலதி ராஜாராம், ஜெயங்கொண்டம்
விநாயகர் துதி
பிடியதன் உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடி கணபதிவர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே!
திருச்சிற்றம்பலம்
இன்று முதல் திருவாசகம் பாடல்கள் பற்றிய பொருள் விளக்கம் நாம் பார்க்கப் போகிறோம்.
திருவாசகம்
திருவாசகம் என்னும் நூலானது சைவ சமய குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகரால் எழுதப்பட்டது அதாவது மாணிக்கவாசகர் சொல்ல திருச்சிற்றம்பல நாதன் தன் கை படஎழுதி கையொப்பம் இட்டுஅருளப்பட்ட மிக சிறந்த பொக்கிஷம் ஆகும்
திருவாசகம் ஒரு சிறு குறிப்பு
பதிகங்கள் -51
பாடல்கள் - 658
வரிகள் - 5842
வார்த்தைகள் - 18, 864,
திரு_ திரு அருள் வாசகம்_ வாக்கு திரு அருள் உள்நின்று உணர்த்தும்,,பசு கரணம் பதிகரணம் ஆகி தன் செயலற்று நிற்றல் ஆகும்,அதாவது வினையின் கட்டறுத்து பசுவாகிய உயிர் பிரிந்து பதி என்னும் இறைவனைப் பற்றிக் கொள்ள நாம் எவ்வாறெல்லாம் நம்மை தயார்படுத்த வேண்டும் என்பதை இப்பாடல்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்
திருவாசகப் பாடல்கள் முழுமுதற் கடவுளான எங்கும் வியாபித்திருக்கும் சிவபெருமானிடம் நம்மை அழைத்துச் செல்லும் பேரன்பு மிக்க பாடல்கள் ஆகும், "கல்லை பிசைந்து கனியாக்கி தன் கருணை வெள்ளத்து அழுத்தி "'என்றும் "பலமா முனிவர் நனி வாட பாவி யேனைப் பணிக் கொண்டாய்"" என்றும் பொற்தவிசு நாய்க்கு இடுமாறு அன்றே நின் பொன்னருளே"
"இறைவன் தமக்கு செய்த கருணையை நினைத்து கசிந்து உருகும் பாடல்களும் இறைவன் தன்னை எளிமையாக ஆண்டாலும் இப்பொழுது கைவிட்டு போயினனே? என்றும் என்னும் கலக்கத்தால் "புன்மையேனை ஆண்டு புறமே போக விடுவாயோ?"" என்னை விட்டு விட்டுப் போனால் என்னை யார் நோக்குவார் யாரோ? " "வார்க்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்?"" வருக" என்று அருள் புரியாயே? என்று அவரிடம் கேள்வி வைப்பதாகவும் ""நன்றே செய்வாய்.
பிழையே செய்வாய் நானோ இதற்கு நாயகமே "ஆயக்கடவேன் நானோ தான் என்னதோ? இங்கு அதிகாரம்" காயத்திடுவாய் உன்னுடைய கழல் கீழ் வைப்பாய் கண்ணுதலே" என்று தன்னுடைய நினைவை அகற்றி அருள் வழி நிற்றலை பலப்படுத்தும் விதமான பாடல்களைக் கொண்டுள்ள நூலாகும்.
தாயார் - சிவஞானவதி
தந்தை -சம்புபாத சிருதர்
இயற்பெயர் - வாதவூரர்
பிறந்த ஊர் - திருவாதவூர் (மதுரை அருகே)
குரு உபதேசம் பெற்ற ஊர் - திருப்பெருந்துறை
குரு உபதேசம் பெற்ற நாள் - மார்கழி திருவாதிரை
குலம் - ஆமாத்யா என்ற அந்தணர் குலம் (அமைச்சர் குலம் )
மணிவாசகர் முக்தி அடைந்தது தில்லையில் ஆனி மாதம் மகம் நட்சத்திரம் அன்று..
மணிவாசகர் இறைவனிடம் 1 வாக்கு தீட்சை - குருவின் வாயினால் மந்திர உபதேசம் பெறுதல்
2 நயனத் தீட்சை .. கண்கள் மூலம் தீட்சை அளித்தல்
3 திருவடி தீட்சை (ஸ்பரிசம்).. _ இறைவனது பாதம் வைத்தல் அதாவது குருவின் கை அல்லது கால்களால் ஆசி பெறுதல்.
இவ்வாறு மூன்று தீட்சைகள் பெற்று இறுதியில் தில்லையில் சாயுச்சியம் என்ற நிலை அதாவது ஈசனோடு இரண்டற கலந்த அத்வைத நிலை மீண்டும் பிறவா நிலை பெற்று முக்தி அடைந்தார்..
திருவாசகத்தை படிப்பவர்களின் உயிரில் கலந்து அனைத்து உறுப்புகளிலும் ஒன்றி மெய் சிலிர்த்து விதிர்விதிர்த்து தன்னை மறந்து சிவனையே எண்ணி நிற்கும் ஒரு அற்புத அனுபவத்தை கொடுக்கும் சிறப்பான நூலாகும் இதனையே "'சி யு போப் அவர்கள் போன் மெல்டிங் சாங்ஸ் அதாவது எலும்பை உருக்கும் வல்லமை கொண்டது திருவாசகம் என்று பொருள்படும்படி கூறியுள்ளார்,,
இவ்வாறு பல சான்றோர்களும் ஆன்றோர்களும் சிவ அடியார்களும், ஆதினங்களும், எழுத்தாளர்களும் திருவாசகத்தின் சிறப்பை அழகாகவும் மிகத்தெளிவாகவும் கூறியுள்ளனர்.
"திருவாசகத்திற்க்கு உருகார், ஒருவாசகத்திற்க்கும் உருகார்" என்னும் இத் திருவாசகம் என்னும் தேனை நாமும் தினசரி அள்ளிப் பருகி சிந்தை மகிழ்வோம்
(மாலதி ராஜாராம், உழவாரப்பணி மற்றும் தேவாரம் திருவாசகம் முற்றோதுதல் செய்தல் தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்தல் பொழுதுபோக்கு ஆகும். இல்லத்தரசி)