தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!

Su.tha Arivalagan
Oct 24, 2026,01:30 PM IST

- மாலதி ராஜாராம்


சிவபுராணம் குறித்து மாலதி ராஜாராம் எழுதிய கட்டுரையை வாசித்து வருகிறோம். அதன் தொடர்ச்சியை இப்போது காண்போம்.


விநாயகர் துதி


பிடி அதன் உரு உமை கொளமிகு கரியது

வடி கொடு தனதடி வழிபடும் அவரிடர்

கடி கணபதி வர அருளினன் மிகு கொடை வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே 


{பாடல் வரிகள்}


86. போற்றி, புகழ்ந்திருந்து, பொய் கெட்டு மெய்யானார் 

87. மீட்டு இங்கு வந்து, வினைப்பிறவி, சாராமே,

88. கள்ளப் புலக் குரம்பை கட்டழிக்க வல்லானே!


{பொருள் விளக்கம்}

 

பொய்யான, சொல், செயல், மனம் இவற்றால்புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கின்ற இப்பொய் உடல்அழிந்து, ஒழிந்தால், அதனுள் உண்மையாக இருக்கும் ஆன்மாவானது விடுதலை அடையும், அவ்வாறு விடுதலை அடையும் ஆன்மாவானது, மறுபடியும் இவ்வுலகில் பிறந்துமற்றோரு உடம்பில் புகுந்து வினைப்பயன் என்கின்ற பிறவி அடைய காரணமாக இருக்கின்ற வஞ்ச‌னை செய்கின்ற புலன்களின் வழி செல்லும் ஐம்பொறிகளின் இருப்பிடமாகிய உடலின் பிணிப்பை என்னும் வேரோடு அறுக்க வல்லவனை.


{பாடல் வரி}




89. நள்இருளில் நட்டம்பயின்று ஆடும் நாதனே!


{விளக்கம்}


இங்கு இருள் என்பதுபுற இருளை குறிக்காது, மனதில் உள்ள அவித்தையாகிய அஞ்ஞான இருளை குறிக்கும்,இந்த அறியாமை என்னும் இருளை அகற்ற ஆழ்மனத்தின் உள் நின்று நடனமாடிக் கொண்டிருக்கும் பெருமானே!


90.  தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!


{விளக்கம்}


தில்லையில் நடனமாடும் எம்பெருமானே! அம்பலவாணனே! மதுரையில் அடியார்க்கு அருள் செய்யும் தென்பாண்டி நாட்டின் பழம்பதியான பாண்டிய நாட்டின் தலைவனே!


{பாடல் வரி}


91. அல்லல் பிறவி அறுப்பானே! ஓ! என்று,


{விளக்கம்}


பெரும்பான்மையானவர்கள் இறைவனிடம் ஒரு விண்ணப்பம் வைக்கும் பொழுது ஏதோ ஒரு காரியம் (அ)செயல் நிறைவேற வேண்டும் என்று விண்ணப்பம் வைப்பர், அது இறை சக்தியால் நிறைவேறியதும் மற்றொன்று முன் வந்து  அந்த காலி இடத்தை புதிதாக நிரப்பி விடும். இவ்வாறு ஒவ்வொன்றாக தீர்வதற்கு பதிலாக ஒரு சேர பிரச்சனைகள் தீர வேண்டும் என்பதற்காக ஆன்றோர்கள் அதற்கு காரணம் என்ன என்று ஆராய்வார்கள்.


அதாவது நோயை கண்டவுடன் நோய் தீர்க்க அந்நேரத்தை பயன்படுத்துவதை விட நோய்களுக்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து அதனை தீர்ப்பர். அது போல நம் அல்லல்களுக்கு காரணம் ஆராய்ந்தால் பிறவியே  எல்லா துயரங்களுக்கும் மூலமாக உள்ளது என்பதை கண்டு கொண்டு பிறவியான அல்லல்களை அறுக்க வேண்டும் என்று இறைவனே! உன்னிடம் ஓ! என்று அரற்றி! முறையிடுகிறேன்!


{பாடல் வரிகள்}


92. சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக்,கீழ்,

93. சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்,

94. செல்வர் _ சிவபுரத்தின் உள்ளார், சிவன் அடிக்கீழ்,

95. பல்லோரும் ஏத்த பணிந்து.


{விளக்கம்}


சொல்லில் அடங்காதவன், சொல்லுவதற்கு அரிதானவன், போற்றி புகழ்ந்து பாடி அதன் பொருள் உணர்ந்து {உணர்ந்து என்னும் பொழுது} பாடுபவன்,பாடுதலாகிய செயல், பாடும் பாட்டு, ஆகிய மூன்றையும் குறிக்கும். 


எனவே பாடுகின்றவன் தன்னை மறந்து பாடுவதாகும் அதாவது நான் என்ற உணர்வு இழந்து, பாடல், அது தரும் அனுபவம், அனுபவத்தை உள்வாங்கி அனுபவிக்கும் தன்மை, மூன்று நிலையும் கடந்து பாட்டின் பொருள் உணர்ந்து இறைவனை போற்றி புகழ்ந்து பாடி பணிந்து துதித்தால் அனைவரும் பணிந்து வணங்கக்கூடிய இறைவனின் திருவடி ஆகிய சிவபுரம் செல்வர்.


அதாவது சிவனது பாதத்தில் சரணடைந்தால் மங்கலம் உடைய சிவலோகமாகிய வீட்டு உலகில் வாழ்கின்ற சிவபெருமானது திருவடிக்குச் சென்று இன்புற்று இருப்பர்.


திருச்சிற்றம்பலம்


சிவபுராணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. பிரபஞ்சத்திற்கும் இறைவனுக்கும் நன்றி 


அடுத்து வருவது


திருவாசகம் பதிகம்__2 

கீர்த்தி திரு அகவல்


(மாலதி ராஜாராம், உழவாரப்பணி மற்றும் தேவாரம் திருவாசகம் முற்றோதுதல் செய்தல் தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்தல் பொழுதுபோக்கு ஆகும். இல்லத்தரசி)