பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்து அருளி - சிவபுராணம் (தொடர்ச்சி)
- சிவ.ப.மாலதி ராஜாராம், ஜெயங்கொண்டம்
விநாயகர் துதி
அல்லல் போம், வல்வினை போம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம், - நல்ல
குணமதிகமாம் அருணைக் கோபுரத்தே மேவும்
கணபதியைக் கைத்தொழுதக் கால்.
---
சிவபுராணம் (தொடர்ச்சி)
[பாடல்]
36. வெய்யாய்! தணியாய்! இயமானனாம் விமலா!
[பொருள்]
வெம்மையுடையவனே! குளிர்ச்சி பொருந்தியவனே! (இயமானன்) வேள்வியின் தலைவனாகவும் விளங்கும் குற்றமில்லாதவனே!
---
[பாடல்]
37. பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்து அருளி
[பொருள்]
பொய்யானவை அனைத்தும் (எண்ணம், சொல், செயல்) என்னை விட்டு அகலும்படி, குருவாக வந்து எழுந்தருளி அருள் செய்தவனே!
---
[பாடல்]
38. மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே!
[பொருள்]
மெய்யுணர்வாகி (உண்மை அறிவாகி) என்னுள் திகழ்கின்ற பேரொளியே!
---
[பாடல்]
39. எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!
[பொருள்]
எந்தவிதமான (ஞானம்) அறிவும் இல்லாத எளியேனுக்கு இன்பம் தரும் பெருமானே!
---
[பாடல்]
40. அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே!
[பொருள்]
அறியாமை என்னும் அக இருளை நீங்கச் செய்து, நன்மை தரும் அருளுருவே!
---
[பாடல்கள்]
41. ஆக்கம் அளவு இறுதி இல்லாய்! அனைத்து உலகும்
42. ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
43. போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்
[பொருள்]
தோற்றம் (ஆக்கம்), நிலைபேறு (அளவு), முடிவு (இறுதி) ஆகிய எல்லைகள் இல்லாதவனே! அனைத்து உலகங்களையும் நீயே படைப்பாய் (ஆக்குவாய்); அவற்றை நீயே காப்பாய்; நீயே அழிப்பாய் (ஒடுக்குவாய்). ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களை அழித்து, இவற்றையெல்லாம் செய்து உன் பேரருளைத் தருவாய்! என்னை இப்பிறவியில் செலுத்தி (மறைத்தலின் மயக்கம் தருவாய்); அதன்பின் உன் (தொழும்பில்) திருத்தொண்டில் புகும்படி செய்வாய்! (இவற்றில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழில்களும் அடங்கியுள்ளன).
---
[பாடல்]
44. நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நனியானே!
[பொருள்]
(நாற்றம் என்றால் நறுமணம் என்பதைக் குறிக்கும்). மலரின் மணம் போல் நுட்பமானவனே! உன்னை வணங்காதவர்களுக்குத் தொலைவிலும் (சேயாய்), வணங்குபவர்களுக்கு மிக அருகிலும் (நனியானே) உள்ளவனே!
---
[பாடல்]
45. மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே!
[பொருள்]
சொல்லிற்கும் (மாற்றம்), மனத்திற்கும் அப்பாற்பட்டு நின்று மறைப்பொருளாய் விளங்குபவனே!
தொடரும்...
திருச்சிற்றம்பலம்
(மாலதி ராஜாராம், உழவாரப்பணி மற்றும் தேவாரம் திருவாசகம் முற்றோதுதல் செய்தல் தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்தல் பொழுதுபோக்கு ஆகும். இல்லத்தரசி)