மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ் சாறன் நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு!
- கலைவாணி கோபால்
"மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ் சாறன் அடியார்க்கும் அடியேன்" -சுந்தரமூர்த்தி நாயனார்.
இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள "கஞ்சாறு" எனும் ஊரில் பிறந்தவர் மானக்கஞ்சாற நாயனார்.
'தஞ்சை' எப்படி நெல் குவியலுக்கு பேர் போன ஊரோ !அது போல, நமது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 'கஞ்சாறு' கரும்பு விளைச்சலுக்கு பேர் போன ஊர் .எங்கும் கரும்புச்சாறு நிரம்பி இருந்ததனால், கருஞ்சாறு என்ற பெயர் பெற்றது. இப்பெயர், இப்போது 'கஞ்சாறு' என மருவியது தாக ஒரு கூற்று நிலவுகிறது.
இவ் ஊரில் பிறந்தவர் தான், நமது நாயனார். இவர் இந்த ஊரில் சேனாதிபதியாக பணியாற்றி வந்தார்.
("காந்தன்" என்றால் தலைவன் என்று பொருள். அவர் சேனாதிபதி உட்பட பெரும் பதவியில் இருந்ததால் காந்தம் எனக் குறிப்பிடப்பட்டார் எனவும், இவர் மானமிக்க மனிதராய் வாழ்ந்ததால், மானக்கஞ்சாறர் என்று சேர்த்து சொல்லப்படுகிறார் என்றும், அவரின் ஊர் பெயரோடு சேர்த்து "மான "என்பது ஒரு மரியாதை நிமித்தமான சொல் என்றும் கஞ்சாறு சேர்த்து மானக் கஞ்சாறர் என்று அழைக்கப்படுகிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இவர் இயற்பெயர் எவரும் அறியவில்லை.)
இவர் மிகப்பெரும் சிவ பக்தனாய் விளங்கினார். "தன்னுடைய எல்லாமும் சிவனுக்கே" எனும் மிகப்பெரும் கொள்கையை கொண்டு வாழ்ந்து வந்தார். அவருக்கு எல்லா ஐஸ்வரியமும் இருந்தது. ஆனால், குழந்தை மட்டும் இல்லாமல் இருந்தது. ஒரு குடும்பத்திற்கு எல்லா ஐஸ்வர்யங்களும் இருந்தாலும், மிகப் பெரிய சொத்தான குழந்தை செல்வம் இல்லை? எனில், அது சமூகத்திற்கும் சரி வீட்டுக்கும் சரி மிகப்பெரும் தாழ்ந்த மனநிலைய உருவாக்கும். அந்நிலையிலேயே மானக் கஞ்சாறரும் அவர் மனைவி இருந்து வந்தனர்.
ஆனாலும், தன் பக்தரை எந்நாளிலும் கைவிடமாட்டார் நம் சிவபெருமான். காலம் தாழ்ந்த நிலையில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையினை கண்ணிணும் பெரிதாக காத்து வளர்த்து வந்தனர். அதுமட்டுமல்லாமல், இவர் எப்படி சிவன் பக்தரோ அது போலவே அப்பெண்ணையும், சிவபக்தி கொண்ட பெண்ணாகவும், சிவனடியார்களுக்கு சேவை செய்யும் பாங்கையும், சிவ அடியார்களின் கதையை சொல்வதும்,சிவன் புகழ் சொல்வதுமாக அப்பெண்ணை தீவிர சிவன் பக்தையாக வளர்த்து வந்தனர். அப்பெண்ணும் அதில், நன்கு தேர்ச்சி பெற்று வளர்ந்தாள்.
அப்பெண்ணும் நன்முறையில் வளர்ந்து திருமண வயதை அடைந்தாள். ஒரே ஒரு பெண் அதுவும் தவமிருந்து கிடைத்த பெண். அவளுக்கு உரிய மணமகனை பணம் காசு பாராமல் , அந்தஸ்து பாராமல், சிவன் பக்தனாகவே மணமகன் வர வேண்டும் என மானக்கஞ்சாறனார் விரும்பினார். அவர் எண்ணம் போலவே, அவருக்கு மணமகனும் அமைந்தது.
(அவர்தான் நாம் பின்னாலில் நாயன்மார் வரிசையில் போற்றப்படும் ஏயர் கோன் கலிக்காமர் நாயனார்)
தன்னைப் போலவே மணமகன் கிடைத்த மகிழ்வில் நாயனாரும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக செய்தார். சேனாதிபதி அல்லவா! ஊரே மெச்சும் வகையில் திருமண ஏற்பாடுகளை செய்தார்.
அதிலும் குறிப்பாக, சிவனடியார்களுக்கு புதுக்கோவணம், புது புத்தாடை ஒரு துறவிக்கு என்னெல்லாம் தேவையோ! அனைத்தையும் வாங்கி வீட்டில் அடுக்கி வைத்து சிவனடியார் இடம் கொடுத்து முதலில் அவர்களிடம் ஆசி வாங்கி கௌரவித்து அனுப்பினார்.
அரசனுக்கும் முறைப்படி காணிக்கையுடன் சென்று வணங்கி அழைப்பு விடுத்தார் மானக்கஞ்சாறர்.
சுற்றியுள்ள எல்லா சிவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிவனடியார்கள் பலர் கஞ்சாறர் வீட்டை நோக்கி வரத் தொடங்கினர். அவர்கள் அனைவரும் நாயனாரையும் அவர் குடும்பத்தையும் ஆசீர்வதித்து விட்டு சென்றனர். கஞ்சாறரும் ஒவ்வொரு சிவனடியாருக்கும் என்ன? வேண்டுமோ? அதை கொடுத்து மகிழ்வுடன் அனுப்பிக் கொண்டே இருந்தார்.
திருமணத்திற்கான குறிப்பிட்ட நாளும் வந்தது . மாபெரும் விருந்து ஒரு பக்கம் தயாரானது. உறவினர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து மகிழுடன் பேசி களிப்பில் நிரம்பி இருந்தனர்.
அங்கு கொட்டி வைத்த மலர்கள் நறுமணம் அளித்தன பெண்கள் தங்கள் அங்கங்களின் மேல் நகைகளை அலங்கரித்துக் கொண்டு தேவதைகள் போல் சுற்றி திரிந்தனர்.
பந்தலில் நின்றிருந்த யானைகள் துதிக்கையை நீட்டி எல்லோரையும் வரவேற்றது. மங்கள வாத்தியங்கள் எங்கும் முயங்கி கொண்டு இருந்தது. கட்டப்பட்ட வாழை மரத்தின் அருகே முன்னின்று கொண்டு வருபவர்களை வரவேற்றார் நாயனார்.
மணப்பெண்ணும் தன்னை அலங்கரித்துக் கொண்டு மண மேடைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு யாரும் எதிர்பாராத நிலைமையில் ஒரு சிவனடியார் வந்தார்.
சிவனடியாரை கண்ட நாயனார் அவரை நன்முறையில் வரவேற்று மகளை அவரிடம் ஆசி பெறுமாறு கூறினார்.
அந்த சிவனடியாரோ! ஒரு மா விரதியார் (அதாவது சைவத்தில் ஆறு பிரிவுகள் உள்ளன. பாசுபதம், மா விரதம், காபாலம், வாமம், பைரவம், மகேஸ்வரம் அல்லது வீர சைவம்) மா விரதம் உடையவர்கள் உக்கிர தெய்வத்தை வழிபடுபவர்கள். இவர்கள் சுடுகாட்டு சாம்பலை பூசி எலும்பு மலையினை அடைந்து கோவணமும் அதன் மேல் சணலால் ஆன துண்டும் அணிந்திருப்பார்கள்.
இது பயமுறுத்தும் தோற்றம் என்றோ காட்டுமிராண்டித்தனம் என்று கூற முடியாது. மாறாக வாழ்வில் எல்லோரும் சாம்பலும், எழும்பும், ஆக சுடுகாட்டில் அடங்கிப் போகின்றனர். எனும் தத்துவத்தை அறிந்து அதன் வழியில் நடந்தவர்கள் இவர்கள். இவர்களைக் காணும் போது நமக்குள் ஒரு ஞானம் பிறக்கும். இந்நாளில் இவர்களை அகோரிகள் என்று நாம் குறிப்பிடுகின்றோம்.
இவரும் ,நாயனாரின் கோரிக்கைக்கு இணங்கி மணமகளை ஆசீர்வாத செய்ய மணமேடைக்கு வந்தார். இடுப்பு பையில் இருந்தால் திருநீறு வழங்கிவிட்டு ஒன்றும் அறியாதவர் போல் கேட்டார் அடியார், இங்கு என்ன நடக்கின்றது? மான கஞ்சாறர் சொன்னார்.
அடியாரே !என் மகளுக்கு இன்று திருமணம் இங்கு நடக்க இருக்கின்றது. உங்களுக்கு, ஏதேனும் உதவி வேண்டின் சொல்லுங்கள்; நான் செய்கிறேன். என்று அடியார் இடம் விண்ணப்பித்தார் நாயனார்.
மாவிரத அடியார் பெரிதாக எந்த உணர்வையும் காட்டாது "பெரியோரை வணங்கும்போது முடி அவர்கள் காலில் படக்கூடாது. என்பது மரபு இதனால் ,தன் அலங்காரம் இட்ட அந்த நீண்ட சடையினை ஒதுக்கி தன் நெற்றியால் அடியாரின் காலைத் தொட்டு ஆசி வாங்கினாள் அந்த மணமகள்.
" சிவனடியாரும் எல்லாம் நலமாகுக" என்று தொடர்ந்து மணப்பெண்ணை ஆசிர்வதித்தார்
மாவிரத முனிகளின் ஆசி ,என்பது சிவனின் நேரடி ஆசி என்பது நம்பிக்கை. என்பதால் ,தன் மகளுக்கு இந்த அடியார் இடம் ஆசி பெற்றதை கண்டு நாயனார் கண்களில் ஆனந்த கண்ணீர் சிந்தி கொண்டிருந்தார்.
சற்றும் எதிர்பாராத நிலையில் அந்த அடியார். சட்டென இப்பெண்ணுக்கு இவ்வளவு நீண்ட முடியா?. இது எனக்கு வேண்டுமே !நாம் நெஞ்சில் அணியும் மயிர்வடம் செய்ய உதவும் எனக் கேட்டார்.
இதைக் கேட்டதும், திருமண மண்டபத்தில் உள்ள அனைவரும் திகைத்து நின்றனர்!. திருமணம் ஆகும் நேரத்தில் மணப்பெண்ணின் கூந்தலை இவர் கேட்பது என்ன முறை? என்று அங்கு அனைவரும் சலசலித்துக் கொண்டிருந்தனர்.
மான கஞ்சாறரும் அவரது மனைவி கல்யாண சுந்தரியும் திகைத்து நின்றாலும் வந்தது , கேட்டது சிவனடியார். அதனால் ,மறுக்க முடியாது. மறுத்தால் அது தனது சிவத்தொண்டிற்கு செய்யும் துரோகம் என்று அவர்களுக்கு தெரியும். மணப்பெண்ணும் எந்த உணர்வும் காட்டாது? தன் தகப்பனையை உற்று நோக்கிக் கொண்டிருந்தார்.
சபையோர்கள் என்ன செய்வாரோ! நாயனார்? .என்று அவரை உற்றுநோக்கி கொண்டிருந்த நிலையில், சற்றும் யோசிக்காமல் மணப்பெண்ணின் கூந்தலை அறுத்து சிவனடியாரிடம் நாயனார் கொடுத்தார்.
உறவினர்களும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மணப் பெண்ணோ! தனது தந்தை செய்யும் சிவத்தொண்டிற்கு தன்னைப் பற்றி யோசிக்காமல், தந்தையின் சிவப்பணியை தனது பணி என நினைத்து அதற்கு உடன்பட்டாள்.
அக்காலத்தில் பெண்களின் முடி என்பது அந்தக் குளத்தின் கௌரவம். அது மட்டுமல்லாமல், பெண்கள் மொட்டை அடித்தால் கணவன் இறந்து விட்டான். என்றும், ஒரு பெண் முடி வெட்டப்பட்டால் அவள் குடும்பம் இழிவுபடுத்தப்பட்டு உள்ளது. குடும்பம் மானம் போயிற்று என்பது பொருள்.
ஆனால், இதைப் பற்றி யோசிக்காமல் முனிவர் கேட்டு கொடுக்காவிட்டால் பெரும் சாபம் ஏற்படும் என்று நாயனார் எந்தவித சலனமும் இன்றி சிவனடியாரின் கோரிக்கைக்கு உடன்பட்டு முடியை காணிக்கையாக சிவனடியாருக்கு கொடுத்தார்.
மகளின் வாழ்வில் மாங்கல்யம் ஏறப்போகும் நேரம் முடியினை வெட்டுவது என்றால் ஒரு அமங்கலமான விஷயம். இது சிவன் கொடுத்த பெண் எனவே "பஞ்சாக்ஷரம்" சொல்லியபடி அக் கூந்தலை முனிவர் கையில் கொடுத்தார் நாயனார்.
பெண்ணின் வாழ்வு என்னாகும்? என்பது நாயனாரின் மனைவிக்கு மனக்கவலை. மாங்கல்யம் ஏறும் நேரம் இப்படி நடந்து விட்டது என்று எண்ணி மன கவலை கொண்டள்.
சற்று நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஒரு புகை கிளம்பியது. அங்கு மங்கள வாத்தியங்கள் முழங்க! ரிஷப வாகனத்தில் தன் துணைவியோடு சிவன் அமர்ந்திருந்தார். ஆலயமணி ஓசை கேட்டது நறுமணம் கமழ்ந்தது. பூதகணங்கள் வாழ்த்து ஒலி கேட்க சிவன் அங்கு வீற்றிருந்தார்.
ஐயனே"! எந் நிலையிலும் என் மேல் மாறாத பக்தியினை வைத்திருக்கும் உன்னை சோதிக்கவே வந்தோம், நீ வென்று விட்டாய் எக்காலமும் உன் பெயர் நிலைக்கும் .பூலோக கடமை முடிந்த பின் எம்மை வந்து கைலாயம் அடைவாழ்யாக ;என வாழ்த்தி விட்டு மறைந்தார்.
சற்று நேரத்தில் மணமகன் ஆன ஏயற்கோன் கலிக்காமர் அவ்விடம் வந்து சேர்ந்தார். மணமகளை நோக்கினார்" அங்கு ஒரு வித்தியாசமான சூழ்நிலை உருவானதை உற்று நோக்கி! அங்கிருந்தவர்களிடம் என்ன ?நடந்து என்பதை கேட்டு அறிந்து கொண்டார்.
அவருக்கோ! ஆச்சரியம்! முன்பு பார்த்ததை விட கூந்தல் இப்போது இரண்டு மடங்காக மணப் பெண்ணுக்கு வளர்ந்து இருந்தது.
அவரும் சிவனடியார் அல்லவா? அவர் மிகவும் வருந்தினார் அந்த அருமையான காட்சியினை தவறவிட்டதற்க்காக சிவனை எல்லோரும் வணங்கியபின் திருமணம் இனிதே நடந்தேறியற்று. ஒரு நாயனாரின் மகளாக பிறந்தவள். இன்னொரு நாயன்மாருக்கு தாரமானாள். அப்பெண் எவ்வளவு பாக்கியசாலி!
மானக் கஞ்சாறநாயனார் குருபூஜை மார்கழி மாதம் சுவாதி நட்சத்திரம் அன்று நடைபெறும். எல்லா சிவாலயங்களிலும் நடைபெறும் என்றாலும், அடியார் வாழ்ந்த கஞ்சாறு (ஆனந்த தாண்டவபுரம்) ஊரின் ஆனந்த தாண்டேஸ்வரர் கோயிலில் மிகச் சிறப்பாக நடைபெறும்.
அதுமட்டுமல்லாமல், அந்த ஆலயத்தில் மான கஞ்சாற நாயனருக்கும் அவர் மகளுக்கும் சிலையுடன் கூடிய சந்நிதி உண்டு. அன்று சிறப்பு வழிபாடுகள் அங்கு நடைபெறும்.