கணவன் உயிர் காக்க.. சாவித்திரி தேவி நோற்ற விரதம்.. காரடையான் நோன்பு!

Su.tha Arivalagan
Mar 13, 2026,02:19 PM IST

- சொ. மங்களேஸ்வரி


காரடையான் நோன்பு, சாவித்திரி நோன்பு, கௌரி விரதம் என்றெல்லாம் சொல்லப்படும் இந்த நோன்பைப் பற்றி அறிவோமா? 


சத்தியவான் சாவித்திரி வரலாறு அறியாதவர் எவரும் இல்லை. மன்னனாக வாழ்ந்த சத்தியவான் வாழ்க்கையில் வந்த சோதனை காலம் தான் இதற்கு மூலம். எல்லோருடைய வாழ்விலும் சோதனைகள் தருவது இறைவனின் திருவிளையாடல். அதுபோல் மன்னன் சத்தியவானுக்கு ஏற்பட்டபோது கணவன் மனைவி இருவரும் கானகத்தில் அமைதியாக வாழ வேண்டிய காலம் என வாழ்ந்து வருகிறார்கள். அப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அன்றைய நாளில் சத்தியவானின் ஆயுள் முடியும் நேரம் சாவித்திரி தேவியின் விரதம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 


சத்தியவானுக்கு மனம் சரியில்லாமல் ஏதோ நினைவுப் போராட்டங்கள் இருந்து கொண்டே இருக்கின்றது. சர்வ மங்கள ரூபிணியான அம்பிகையைக் காட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு அவள் பூஜை செய்து கொண்டிருக்கின்றாள். அம்பிகை தான் நித்திய சுமங்கலி அவளை பூஜித்துக் கொண்டிருந்த வேளையில் காலன் சத்தியவானின் உயிரைப் பறித்துச் செல்கிறான். காலம் தவறாதவன் அவன் ஆதலாலே அவனுக்கு காலன் என்ற பெயர். அவன் உயிர்களைச் சரியான நேரத்தில் பறித்துச் சென்று விடுவான். அப்போதுதான் இந்த அதிசயம் நிகழ்கிறது. அவள் செய்த பூஜையின் பலனாக யாருக்கும் தெரியாத எமதர்மராஜா சாவித்திரியின் கண்களுக்கு மட்டும் தெரிந்து விட்டார்.


தன் கணவனின் உயிரைத் தன் கண் முன்னால் பறித்துக் கொண்டு போவதைக்  கண்ட சாவித்திரி, எமனைப் பின்தொடர்ந்து பலவாறு வார்த்தைகளால் போராடுகிறாள். மன்றாடுகிறாள். இப்படி பேசிப் பேசியே அவளும் உலகைக் கடந்து எமலோக வாசல் வரை வந்து விட்டாள். உள்ளே சென்றால் வெளியே வர முடியாது. சாவித்திரியை அழைத்துச் செல்லவும் அனுமதி கிடையாது. ஆகவே நின்றுவிட்டார் எமதர்மன்.




அடடா இந்தப் பெண்ணுக்கு எவ்வளவு ஆற்றல் இருந்தால் இவள் கற்பின் கருணையால் இந்த உலகம் வரை வந்து இருப்பாள். இவளை நாம் சாதாரணமாக நினைத்து விட்டோமே என்று, " அம்மா, எமலோகம் வரைக்கும் என்னுடன் வாதிட்டு வந்தவர்கள் இதுவரை எவரும் இல்லை. இவ்வளவு தூரம் வந்த உன்னை நான் மதிக்கின்றேன். கணவனைத் தந்து விடு, கணவனைத் தந்துவிடு என்று திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கின்றாய். அதற்கு எனக்கு உரிமை கிடையாது. எடுப்பதற்கு தான் உரிமை இருக்கிறதே தவிர கொடுப்பதற்கு எனக்கு உரிமை இல்லை. ஆதலால் கணவனைத் தவிர எது வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்று மூன்று வரம் தருவதாக வாக்களித்தார். பெண்ணறிவு பின்னறிவா? நுண்ணறிவா? எனத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு ஒரு வரம் கேட்கின்றாள் சாவித்திரி.


முதல் வரமாக அவளுடைய மாமனார், மாமியார் இருவரும் கண் தெரியாமல் ராஜ குடும்பமாக இருந்தும் விதியின் வசத்தால் அனைத்தையும் இழந்து காட்டிலே வசிக்கிறார்கள். அவர்களுக்கு கண் பார்வை வேண்டும் என்றாள்.  ததாஸ்து என்றார். அப்படி என்றால் "அப்படியே தந்தேன்" என்று பொருள். எங்களுடைய நாடு, சேனை எல்லாவற்றையும் திருப்பித் தந்து பழையபடி நாடாள வேண்டும் என்று இரண்டாவது வரமாக கேட்கின்றாள். அப்போதும் ததாஸ்து என்றார் எமன். மூன்றாவதாக "சுவாமி நான் மகா மகா பதிவிரதை. ஆதலால் "உத்தமமான குழந்தை பிறக்க வேண்டும் என்று கேட்டாள்.


"காலம் தவறாத எமதர்மனுக்கு எமலோகத்தினுள் செல்ல அவசரம். ஆதலால் விரைந்து அப்படியே தந்தேன் ததாஸ்து என்று கூறிவிட்டுத் திரும்பிக் கொண்டதும், " சுவாமி" என்று மீண்டும் அழைக்கின்றாள். மூன்று வரம் தந்து விட்டேனே மீண்டும் அழைக்கிறாயே என்ற பொழுது மூன்று வரம் கேட்டேன். இரண்டு மட்டுமே தந்து விட்டுச் செல்கின்றீர்களே, நியாயமா? என்றாள். அவர் நான் வாக்கு மாறுபவன் அல்ல.  நீ கேட்ட வரம் அனைத்தையும் நான் தந்து விட்டேன், நேரம் ஆகிறது, உள்ளே செல்ல வேண்டும் என்றார் . எங்கே சுவாமி தந்தீர்கள். மூன்றாவது வரமாக கேட்ட குழந்தை. என் கணவனின் உயிரை எடுத்துச் சென்று விட்டால் எப்படி கிடைக்கும் என்றார். எமதர்மனோ என்ன செய்வதென்று தெரியாமல் சத்தியவானை விடுவிக்க வேண்டியதாயிற்று. 


சாவித்திரியோ கணவன் உயிரை மீட்டதோடு, அந்த ராஜ்ஜியத்தில் ராஜாவாக அமரச் செய்து, சுமங்கலியாக இருந்து பெண்களுக்கு அற்புத உதாரணமாகத் திகழ்ந்தவள். அந்த தேவி நோற்ற விரதம் தான் காரடையான் நோன்பு. மிக எளிமையான நோன்பு. அவள் காட்டில் கிடைத்த "காரரிசி என்று சொல்லக்கூடிய அரிசியை மாவாக்கி, காராமணிப் பயிறு மற்றும் உருகாத வெண்ணையை வைத்து வழிபட்டாள்.  இந்த காரடையான் நோன்பு மாசி மாத முடிவும் பங்குனி மாத பிறப்பும் சேரும் நேரத்தில் வருகின்றது.

 

நோன்பு நேரம்:


இது மார்ச் 14ஆம் தேதி பௌர்ணமியோடு வருகின்றது. இந்த பௌர்ணமியோடு கொண்டாட நினைப்பவர்கள் 14ஆம் தேதி காலை 6.00 மணி முதல்  7.50 க்குள்ளும், சிறிது கால தாமதமாக செய்ய நினைப்பவர்கள் 9.30 மணி முதல் 10 20 மணி குள்ளும் தாலிச் சரடு மாற்றிக் கொள்வதற்கு நல்ல நேரமாக கூறப்படுகின்றது.


கூற வேண்டிய மந்திரம்: 


காரடையான் நோன்பு இருக்கும் போது கூற பல மந்திரங்கள் இருக்கின்ற போதிலும் தமிழில் இருக்கக்கூடிய "உருகாத வெண்ணையும் ஓர் அடையும் நான் நூற்றேன் ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும் " என்ற மந்திரத்தைச் சொல்வது சிறப்பாகும்.


13ஆம் தேதியே வீட்டைச் சுத்தம் செய்து வாழை இலை போட்டு படையல் வைப்பவர்கள் நான்கு வாழை இலைகள் போட வேண்டும். அல்லது தாம்பூலத்தில் உருகாத வெண்ணை, அடை மற்றும் சரடு வைத்து , தூப, தீப ஆராதனை செய்து சர்வ லோக மாதாவான அம்பிகையை வழிபடலாம். காமாட்சி அம்மனாக இருந்தால் மிகவும் நல்லது. வீட்டிற்கு சுமங்கலிப் பெண்களை அழைத்துத் தாலிச்சரடு கொடுக்கலாம். தாலிச் சரடு அடிக்கடி மாற்றிக்கொள்ள வேண்டாம் என நினைப்பவர்கள் நூலில் மஞ்சள் தடவி , பூ ஒன்றைக் கோர்த்து கையில் கட்டிக் கொள்ளலாம். 


காரடையான் நோன்பின் பலன்கள்: தம்பதியர் ஒற்றுமை பெருகும். கணவரின் ஆயுள் நீளும். குடும்பம் சுபிட்சம் பெறும். திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் இந்த நோன்பை நோற்றால் நல்ல கணவர் கிடைப்பார். ஆகவே காரடையான் நோன்பை நோற்று இறையருள் பெறுவோம்.


(சொ.மங்களேஸ்வரி, பட்டதாரி ஆசிரியை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி மாவட்டம்),