- ஸ்வர்ணலட்சுமி
விசுவாவசு வருடம் 20 26 மார்ச் மாதம் 14ஆம் தேதி சனிக்கிழமை மாங்கல்ய பாக்கியம் தரும் 'காரடையான் நோன்பு ' திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்ய பலத்தை பெருக்குவதற்கு இந்த விரதம் கடைப்பிடிக்கிறார்கள். மாசி மாதம் முடிவும் பங்குனி மாதம் பிறக்கும் தருணமும் கூடும் நேரம் 'காரடையான் நோன்பு' எனும் சாவித்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. "காமாட்சி விரதம் "என்றும் அழைக்கப்படுகிறது.
காரடையான் நோன்பு ஏன் கொண்டாடப்படுகிறது என்பதற்கு ஒரு புராண கதை பார்ப்போமா..
துயமத் சேனன் எனும் மன்னன் சாளுவ தேசத்தை ஆட்சி செய்தார்.அவருக்கு சத்தியவான் எனும் மகன் இருந்தான். சிறப்பாக ஆட்சி செய்த மன்னன் வயது முதிர்வு காரணமாக கண் பார்வையை இழந்தார்.இதனால், அவருடைய எதிரிகள் மன்னனிடம் இருந்து நாட்டை கைப்பற்றிய காரணத்தினால், சத்தியவான் தன் பெற்றோருடன் காட்டில் வசிக்கும் நிலை ஏற்பட்டது.
சத்தியவான் சாவித்திரி திருமணம் :

அஸ்வபதி எனும் மன்னனின் மகள் சாவித்திரி ஒரு முறை அவள் காட்டிற்கு சென்றபோது சத்தியவான் தன் பெற்றோருக்கு பணிவிடை செய்து கொண்டிருப்பதை பார்த்து அவனைத் திருமணம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டாள். அவளுடைய ஆசையை தன் தந்தையிடம் கூறினாள். மன்னன் நாரதர் மூலமாக 'சத்தியவான் ஒரு இளவரசன் 'ஆனால் குறைந்த ஆயுள் கொண்டவன் எனும் விஷயத்தை அறிந்தான்.
எனவே தன் மகளை மன்னன், சத்தியவானுக்கு திருமணம் செய்து கொடுக்க தயங்கினான். ஆனாலும் சாவித்திரி சத்தியவானை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்ததால் மன்னனும் வேறு வழியில்லாமல் சாவித்திரியை சத்தியவானுக்கு திருமணம் செய்து கொடுக்க இசைந்தார் . சத்தியவான் சாவித்திரி திருமணம் இனிதே நடைபெற்றது. திருமணம் முடிந்தபின் சத்தியவானும், சாவித்திரியும் காட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.
சத்தியவான் உயிர் பிறந்த தருணம் :
சத்தியவானுக்கு குறைந்த ஆயுள் என்னும் விஷயத்தை அறிந்த சாவித்திரி நாரதரின் அறிவுரைகளைக் கேட்டு பல விரதங்களை மேற்கொண்டு வந்தாள். ஒரு வருடம் முடிந்த நிலையில் ஒருநாள் சாவித்திரியின் மடியில் படுத்திருந்த கணவன் சத்தியவானின் உயிர் பிரிந்தது.அச்சமயம் சத்தியவான் உயிரை எடுத்துச் செல்ல வந்த எமதர்மர் கற்புக்கரசியான சாவித்திரியின் கண்ணுக்கு தென்பட்டார்.
எமதர்மரிடம் சாவித்திரி கேட்ட வரம் :
சத்தியவானின் உயிரை எடுத்துச் சென்ற எமதர்மரை பின் தொடர்ந்து சென்றாள் சாவித்திரி. இதை பார்த்து எமதர்மர் "அம்மா, சாவித்திரி எதற்காக? என்னை பின்தொடர்கிறாய்" என்று கேட்டார்.ஆனால், சாவித்திரி எந்த பதிலும் கூறாமல் எமதர்மரை பின்தொடர்ந்தாள். "உன் கணவன் உயிரை திருப்பிக் கொடுக்கவே பின்தொடர்கிறாய் எனும் விஷயம் நான் அறிவேன். ஆனால்,பிரிந்த உயிரை எப்படி? நான் திரும்பத் தருவேன். எனவே வேறு ஏதாவது வரம் கேள் "என்று எமதர்மர் கூறினார்.
சாவித்திரி சாதுரியமாக எமதர்மரிடம் எனக்கு பிறக்கும் 100 குழந்தைகளை நான் மடியில் வைத்து கொஞ்சுவதை என் மாமனார் கண் குளிர காண வேண்டும் என்று வரம் கேட்டாள். உடனே, சற்றும் யோசிக்காமல் அப்படியே ஆகட்டும் என்று எமதர்மர் வரம் அளித்தார். எமதர்மர் வரம் அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட சாவித்திரி அவரை தடுத்து தாங்கள் கொடுத்த வரத்தின் படி என்னுடைய கணவன் உயிரை திருப்பித் தாருங்கள் என்று கேட்டாள். அதன் பின்பு தான் எப்படிப்பட்ட வரத்தை சாவித்திரிக்கு அளித்தேன் என்பதை எமதர்மர் உணர்ந்தார். கொடுத்த வரத்தை மீற முடியாது என்பதால், சத்தியவானின் உயிரை திருப்பி கொடுத்து விட்டு, அவள் மாமனாரின் கண் பார்வையை திருப்பித் தந்து விட்டு அந்த இடத்தில் இருந்து புறப்பட்டார் எமதர்மர். சாவித்திரியின் வரத்தின் படி சத்யவான் உயிர் பெற்றதோடு, சாவித்திரியின் மாமனாருக்கும் கண் பார்வை கிடைத்தது. பின்னர்,மன்னன்- சத்தியவான் இருவரும் அவர்கள் இழந்த ராஜ்யத்தை மீட்டனர். சத்தியவானும், சாவித்திரியும் பல்லாண்டு காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
சாவித்திரி விரதம்:
சாவித்திரி சத்தியவானின் உயிரை மீட்க உதவியாக இருந்தது அவள் கடைபிடித்த கடுமையான 'காரடையான் நோன்பு' இதனால் தான் இவ் விரதத்தை "சாவித்திரி விரதம்"- "சாவித்திரி நோன்பு 'என்று அழைக்கப்படுகிறது. காமாட்சி அம்மனும் இந்த விரதத்தை கடைபிடித்த காரணத்தால் "காமாட்சி விரதம்" என பெயர் பெற்றது.
காரடையான் நோன்பு
வழிபடும் முறை:
காரடையான் நோன்பு அன்று பெண்கள் அதிகாலையில் எழுந்து, குளித்து,வீட்டை சுத்தம் செய்து,பூஜையறையில் கோலம் இட்டு,அம்மன் படம் வைத்து நெய் விட்டு விளக்கேற்ற வேண்டும். கோலத்தின் மீது கும்பம் (கலசம் :பித்தளை அல்லது வெள்ளி) வைத்து அதற்கு மஞ்சள்,குங்குமம்,இட்டு மலர்களால் அலங்காரம் செய்து, ஒரு நூலில் மஞ்சள் தடவி நோன்பு கயிறு தயார் செய்து,அந்த கும்பத்தின் மீது கட்ட வேண்டும்.
நைவேத்தியம்:
அரிசி மாவு,காராமணி சேர்த்து கார அடை செய்து நைவேத்தியமாக அம்மனுக்கு படையலிடுவது சிறப்பு. அம்மனுக்கு உரிய பாடல்களை பாடி வழிபட வேண்டும்.பின்னர் கணவன் கையால் நோன்பு கயிற்றை கழுத்திலோ, கையிலோ கட்டிக்கொண்டு இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் கணவரின் ஆயுள் பெருகும் என்பது ஐதீகம். திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவன் அமைய வேண்டி இந்த விரதம் கடைப்பிடிக்க திருமண பாக்கியம் கைகூடும். குடும்பத்தில் மனநிம்மதியும், மகிழ்ச்சியும், செழிப்பும் பெருகும்.
மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்
வெப்பம் அதிகரிக்கும் அபாயம் உள்ள டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!
மாங்கல்ய பாக்கியம் தரும் காரடையான் நோன்பு.. சாவித்திரி விரதம் சிறப்புகள்!
1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக
பயணம்!
அன்பு...!
வலியை எரித்து.. பலம் பெறுங்கள்.. Use pain as fuel
ராசாத்தி நீ என்ன சொல்ற.. (கோடாங்கி.. திகில் தொடர்-6)
{{comments.comment}}