மனிதம் மலர்கையில் .. (பகுதி 1)

Su.tha Arivalagan
Feb 11, 2026,11:43 AM IST

- தி. மீரா


திருச்சியின் ஓரத்தில் ஒரு சிறிய தெரு. அங்கே இருந்த பழைய வீடுகளில் ஒன்றில் மீனா தனது அம்மாவுடன் வாழ்ந்து வருகிறாள். அவர்களுடைய வாழ்க்கை சாதாரணம் ஆனால் அன்பு நிறைந்தது.


மீனாவின் அம்மா லட்சுமி, அருகிலுள்ள வீட்டுகளில் வேலை செய்து குடும்பத்தை நடத்தினாள். “படிச்சா தான் வாழ்க்கை மாறும்,” என்று தினமும் மகளிடம் சொல்லுவாள். அம்மா சொல்வதை உன்னித்துக் கேட்டுக் கொள்வாள் மீனா. அவளுக்கு அது எந்த அளவுக்குப் புரிந்தது என்று தெரியாது. ஆனால் படிப்புன்னா மீனாவுக்கு ரொம்பப் பிடிக்கும்.


மீனா எப்பொழுதும் நல்லா வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வருவாள். பள்ளியிலிருந்து வரும் பொழுது. ஏதாவது சிறிய உதவிகள் அவளால் முடிந்ததும் செய்வாள். ஒவ்வொன்றையும் பார்த்து உணர்ந்து ரசித்து அதை அப்படியே அம்மாவிடம் வந்து சொல்வாள். 




அப்படி ஒருநாள் பள்ளியில் இருந்து வரும்போது, மீனா சாலையோரத்தில் அமர்ந்திருந்த ஒரு வயதான தாத்தாவைக் கவனித்தாள். அவர் மிகவும் சோர்வாகவும் பசியோடும் இருந்தார்.


அவரைப் பார்த்த மீனாவுக்கு என்ன தோன்றியதோ.. உடனே தன் பையில் இருந்த மதிய உணவின் மீதியை எடுத்துக் கொண்டு அவரிடம் கொடுத்தாள்.


“தாத்தா, சாப்பிடுங்க,” என்றாள் தயக்கமின்றி.


அந்த தாத்தாவின் கண்களில் நீர் வந்தது.


“குட்டி, நீ நல்ல மனசு,” என்றார்.


அந்த ஒரு நிமிடம், மீனாவின் மனதில் ஏதோ மாறியது. அது இனம் புரியாத சந்தோஷம், திருப்தி, மகிழ்ச்சி.. எல்லாம் கலந்த கலவையான உணர்வு அது.


ஒருவருக்கு உதவுவது எவ்வளவு பெரிய மகிழ்ச்சி தருகிறது என்று உணர்ந்தாள் மீனா. திருப்தியுடன் அந்த இடத்தை விட்டு அகர்ந்தாள் மீனா.


ஆனால் அவள் அறியாமல் உதவி செய்த அந்த தாத்தா யார் தெரியுமா? அவரின் வருகை மீனாவின் வாழ்க்கையையே மாற்றப் போகிறது… என்று நிச்சயம் அப்போது மீனாவுக்குத் தெரியாது.


(தொடரும்)


(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)