“பாடம் புரிஞ்சுடுச்சு”.. மனிதம் மலர்கையில் – பகுதி 4
- தி. மீரா
மாலையின் மங்கல வெளிச்சம் தெருவை மெதுவாக மூடியது.
பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மீனாவின் மனதில் ராமசாமி தாத்தாவின் வார்த்தைகள் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது.
“அடுத்த முறை உதவி தேவைப்படுவது நானில்லை…”
அந்த வார்த்தையின் அர்த்தம் என்ன?
அடுத்த நாள் காலை, வீட்டின் முன் சத்தம் கேட்டது. வெளியே பார்த்த லட்சுமி, அருகிலுள்ள குடிசை வீட்டில் ஒரு குடும்பம் புதிதாக குடியேறியதை கவனித்தாள்.
ஒரு மெலிந்த பெண்.
அவளுடன் இரண்டு சிறிய குழந்தைகள். அவர்களின் கண்களில் பயமும் தயக்கமும் தெரிந்தது. மதியம் பள்ளியில் இருந்து வந்த மீனா அதை பார்த்ததும் அமைதியாக இருந்தாள்.
சில நிமிடங்கள் யோசித்தாள்.
பின்னர் உள்ளே சென்று தன் பழைய ஆனால் சுத்தமாக வைத்திருந்த புத்தகப்பையை எடுத்தாள். அதில் பென்சில், நோட்டு, ரப்பர் எல்லாம் வைத்தாள்.
“எங்கே போறே?” என்றார் லட்சுமி.
“வந்து சொல்லுறேன் அம்மா,” என்றாள் மீனா சிரித்தபடி.
அவள் நேராக அந்த குடிசை வீட்டிற்குச் சென்றாள். கதவின் முன் நின்று மெதுவாக அழைத்தாள். அந்த பெண் வெளியே வந்தாள். முகத்தில் சோர்வு.
“அக்கா… இங்க குழந்தைகள் படிக்கிறாங்களா?” என்று கேட்டாள் மீனா.
அவள் சற்றுத் தயக்கத்துடன்,
“படிக்கணும் தான்… ஆனா இப்போ சூழ்நிலை…” என்றாள்.
மீனா பையை நீட்டினாள்.
“இத உங்க பிள்ளைகளுக்கு. நான் கூட பாடம் சொல்லித் தருவேன்.”
அந்த பெண்ணின் கண்கள் உடனே கலங்கின.
“நீங்க யாரம்மா?” என்று கேட்டாள். மீனா சிரித்தாள்.
“நான் பக்கத்து வீட்டு மீனா.”
அந்த நிமிடத்தில், இரண்டு குழந்தைகளின் முகத்தில் மெதுவாக ஒரு சிரிப்பு மலர்ந்தது. அந்த சிரிப்பு மீனாவுக்கு ஒரு உணர்வை கொடுத்தது மனிதம் என்பது பெரிய செயல்களில் இல்லை; சிறிய மனசில் தான் மலருகிறது.
அந்த மாலை தூரத்தில் நின்று இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தவர் ஒருவரிருந்தார்.
ராமசாமி தாத்தா. அவர் மெதுவாக சிரித்தார்.
“பாடம் புரிஞ்சுடுச்சு…” என்று தன்னிடமே சொல்லிக் கொண்டார். ஆனால் மீனாவுக்குத் தெரியவில்லை
இந்த புதிய குடும்பம் அவள் வாழ்க்கையில் இன்னொரு பெரிய மாற்றத்தை கொண்டு வரப் போகிறது…
(தொடரும்…)
(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)