"நான் தான் மீனா".. (மனிதம் மலர்கையில் - 6)

Su.tha Arivalagan
Mar 18, 2026,03:06 PM IST

மீனாவின் மனதில் சிறிய  பதட்டமான மனநிலை.எதற்கு? ஏன் ? என் ஆயிரம் கேள்விகள்.


பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டுக்கு வந்ததே அவளுக்கு ஆச்சரியமாகவும் புதுசாகவும் இருந்தது.


“நான் தான் மீனா…” என்று மெதுவாகச் சொன்னாள். தலைமை ஆசிரியர் புன்னகைத்தார்.


“உன்னைப் பற்றி நல்ல விஷயம் தான் கேள்விப்பட்டோம்.”


லட்சுமி உடனே நாற்காலி வைத்தாள்.


“என்ன விஷயம் சார்?” என்றாள் மரியாதையுடன்.


“நேற்று மருத்துவமனையில் ஒரு நர்ஸ் பேசினார்.


‘ஒரு சிறுமி தன் நண்பருக்காக கவலைப்பட்டு, தைரியமாக உதவி செய்தாள்’ என்று. விசாரித்த போது அது நீங்க தான் என்று தெரிந்தது.” மீனா மகிழ்ச்சியாக அம்மாவை பார்த்தாள்.




நல்ல செய்தி அடுத்த வாரம் பள்ளியில் ‘மனிதநேயம் விருது’ கொடுக்கப் போகிறோம். அதற்காக இந்த ஆண்டின் மாணவர் தேர்வு  மீனா.”


ஒரு நிமிடம் வீடு முழுக்க அமைதி.


லட்சுமியின் கண்கள் பெருமையில் மின்னின.


“சார்… அவ இப்படி பெரியதா எதுவும் செய்யலையே…” என்றாள்.


அதற்கு ஆசிரியர் மெதுவாகச் சொன்னார்:


“பெரிய உதவி என்றேதும் இல்லை அம்மா. சரியான நேரத்தில் செய்த சிறிய உதவி தான் பெரியது.”


விருது நாள். ஒரு வாரம் கழித்து பள்ளி மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் அனைவரும் கூடியிருந்தனர்.


மீனாவின் பெயர் அழைக்கப்பட்டது. அவள் மேடைக்கு சென்றாள். கைகள் நடுங்கின.


விருது கொடுத்தவர் யார் தெரியுமா?


ராமசாமி தாத்தா!


அவர் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். மீனா அவரைப் பார்த்ததும் முகம் மலர்ந்தது.

தாத்தா விருது கொடுத்து மெதுவாகச் சொன்னார்:


“இப்போ நீ தான் என் ஆசிரியை.”


அவளுக்கு அந்த வார்த்தை புரியவில்லை. ஆனால் மனசு நிறைந்தது. எதிர்பாராத அறிவிப்பு


தலைமை ஆசிரியர் மைக்கில் பேச ஆரம்பித்தார்:


“மீனாவின் செயலால் ஊக்கமடைந்து, நம்ம பள்ளியில் ‘உதவும் கரங்கள்’ என்ற மாணவர் குழு தொடங்கப் போகிறோம். யாருக்காவது உதவி தேவைப்பட்டால், இந்த குழு முன் வரும்.”


முழு அரங்கமும் கைத்தட்டல். மீனாவை பார்த்து நண்பர்கள் சிரித்தனர். அவள் வெட்கப்பட்டாள்.


அன்று மாலை வீடு திரும்பும் போது, காவ்யா கேட்டாள்:


“அக்கா, நீ பெரியவளா ஆன பிறகு என்ன ஆகப்போறே?”


மீனா சற்றுத் தூரம் பார்த்தாள். 


“நான் நல்ல மனிதா இருக்கணும். அது போதும்.”


ஆனால்…


அந்த இரவு ராமசாமி தாத்தா மீனாவுக்கு ஒரு அழைப்பு வைத்தார். அவரின் குரலில் சற்று கவலை.


“மீனா… நாளைக்கு என்னைச் சந்திக்க முடியுமா? முக்கியமான விஷயம் இருக்கு.”


என்ன அந்த விஷயம்?


தாத்தாவின் குரலில் ஏன் கவலை?


(தொடரும்…)


(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)