அதிமுக மயமாகும் தவெக.. கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்.. இன்று இணைகின்றனர்!

Su.tha Arivalagan
Jun 06, 2026,10:54 AM IST

சென்னை: தவெகவில் ஏகப்பட்ட அதிமுகவினர் இன்று இணைகிறார்கள். இதனால் வேகம் வேகமாக அதிமுக மயமாக ஆரம்பித்துள்ளது தவெக.


தவெக ஆரம்பித்தபோது அதில் வேறு கட்சிகளைச் சேர்ந்த யாரையும் இணைத்துக் கொள்ளவில்லை. ஆனால் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக பிற கட்சியாக அதிமுகவிலிருந்து கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்து சேர்ந்தனர்.


தேர்தலுக்குப் பிறகு இப்போது நிலைமை டோட்டலாக மாறி வருகிறது. அதிக அளவில் அதிமுகவினர் சரமாரியாக தவெகவில் இணைந்து வருகின்றனர். அதிமுகவிலிருந்து நான்கு எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு இணைந்தனர். 


இந்த நிலையில் அதிரடியாக 3 அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பல்வேறு அதிமுக மாஜி எம்எல்ஏக்கள் தவெகவில் இணையவுள்ளனர்.




முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், திருப்பூர் எம்எஸ்எம் ஆனந்தன்,  கடலூர் முசி சம்பத், முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் பாப்பிரெட்டிபட்டி கோவிந்தசாமி, சங்ககிரி சுந்தரராஜ், சேலம் வீரபாண்டி ராஜமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மான்ராஜ், சாத்தூர் ராஜவர்மன், கலசப்பாக்கம் பன்னீர்செல்வம் ஆகியோரும் இன்று தவெகவில் இணைகின்றனர்.


எல்லோரும் பதவியை எதிர்பார்த்து வருகிறார்களா அல்லது எதையும் எதிர்பாராமல் வருகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் அடுத்த சட்டசபைத் தேர்தலின்போது நிச்சயம் சீட் கேட்டு மிகப் பெரிய நெருக்கடியை தவெக தலைமை சந்திக்கும் என்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது.


அதிமுகவை தவெக கரைக்க ஆரம்பித்துள்ளது என்ற பேச்சு எழுந்த நிலையில் தவெகவே தற்போது அதிமுகமயமாகி வருவது தவெகவினருக்கும் கூட ஒரு வகையில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடையாளம் மாறி விடுமோ என்ற அச்சமும் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.


மறுபக்கம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக வேகமாக கரைய ஆரம்பித்திருப்பது அந்தக் கட்சியினரையும் அயர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கட்சியினர் பிரிந்து செல்லாமல் தடுக்க எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் கட்சியினர் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.