மார்கழி 1.. கோதை நாச்சியார் அருளிய திருப்பாவை.. பாசுரம் 1.. மார்கழித் திங்கள்!

Swarnalakshmi
Dec 16, 2025,09:54 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை: மார்கழி மாதம், தமிழ் மாதங்களில் ஒன்பதாவது மாதமாகும். இது பொதுவாக டிசம்பர் நடுப்பகுதி முதல் ஜனவரி நடுப்பகுதி வரை வரும். இந்து சமயத்தில், குறிப்பாக தமிழகத்தில், இந்த மாதத்திற்கு மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் உண்டு.


மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்று கருதப்படுகிறது. அதன்படி, மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலமான பிரம்ம முகூர்த்தம் ஆகும். இந்த நேரம் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.


இம்மாதம் முழுவதும் மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, வீட்டின் முன் கோலமிட்டு, கோயில்களுக்குச் சென்று இறைவனை வழிபடுவது வழக்கம். 




வைணவர்கள் ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவையையும், சைவர்கள் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவையையும் பாடி இறைவனை வழிபடுவது இந்த மாதத்தின் தனிச்சிறப்பு.


ஆண்டாள் அருளிய திருப்பாவையை நாம் தொடர்ந்து படித்து கடவுள் அருளைப் பெறுவோம்


திருப்பாவை பாடல் 1:


மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்

நீராடப் பஙாதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல்கொடுந் தொழிலன் நந்தகோபன் குமாரன்

ஏரார்ந்த கன்னியசோதை இளஞ்சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் பத்ந்தேலோ ரெம்பாவாய்


பொருள் :


அழகிய ஆபரணங்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிகுந்த கோகுலத்தில் வாழும் செல்வச் சிறுமிகளே!, இனிமையான மார்கழி மாதம் தொடங்கிவிட்டது! முழு நிலவு பிரகாசிக்கும் நல்ல நாள் இது. நோம்பு நோற்று நீராடச் செல்ல விரும்புபவர்களே, வாருங்கள்!.கூர்மையான வேலுடன் அரிய தொழில் செய்து நம்மைப் பாதுகாக்கும் நந்தகோபரின் மகனும், அழகு நிறைந்த கண்களையுடைய அன்னை யசோதையின் சிங்கம் போன்ற பாலகனும், மேகம் போன்ற கருநிறத் திருமேனியையும், சிவந்த கண்களையும், சூரியன் மற்றும் சந்திரன் போலப் பிரகாசமான முகத்தையும் உடைய நாராயணனே நமக்குத் தேவையான விரும்பிய பலனை / அருளை தருவான். உலகத்தார் அனைவரும் போற்றும் விதமாக அந்தப் பரந்தாமனைப் பாடிப் புகழ்ந்து நாம் நீராடுவோம்!


இந்த முதல் பாடலில், ஆண்டாள் தன் தோழியரை மார்கழி நோன்புக்கு அழைக்கிறாள். மார்கழி மாதத்தின் சிறப்பையும், நோன்பு நோற்பதற்கு உகந்த நல்ல நாளையும் கூறி, அனைவரும் புறப்பட்டு வரச் சொல்கிறாள். மேலும், அவர்கள் வணங்கவிருக்கும் கண்ணபிரானை, நந்தகோபன் மகன், யசோதையின் சிங்கம், கரிய மேனி, சிவந்த கண்கள், ஒளி வீசும் முகம் கொண்ட நாராயணனே என்று விவரித்து, அவரே தங்களுக்கு அருள் தருவார் என்று உறுதி அளிக்கிறாள்.


இந்த நோன்பின் மூலம் உலகத்தார் புகழும்படி, இறைவனின் அருளைப் பெறலாம் என்பதே இதன் சாரம்.