மார்கழி 05ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 05 வரிகள்
மார்கழி மாதத்தின் ஐந்தாம் நாள் வழிபாட்டில் பாட வேண்டிய திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்கள் மற்றும் அவற்றின் விளக்கங்கள் இதோ...
திருப்பாவை பாடல் 05 :
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
விளக்கம் :
வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.
திருவெம்பாவை பாடல் 05 :
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்.
விளக்கம் :
திருமால் அறிய முடியாத `பிரமன் காணமுடியாத அண்ணாமலையை, நாம் அறியக் கூடும் என்று, உனக்குத் தெரிந்துள்ள பொய்களையே பேசுகின்ற, பால் சுரக்கின்ற, தேன்போல இனிக்கும் வாயினையுடைய, வஞ்சகீ, வாயிற்கதவைத் திறப்பாயாக. இந்நிலவுல கினரும், வானுலகினரும், பிற உலகினரும் அறிவதற்கு அருமை யானவனது அழகையும், நம்மை அடிமை கொண்டருளிக் குற்றத்தை நீக்கிச் சீராட்டும் பெருங்குணத்தையும் வியந்து பாடிச் சிவனே! சிவனே!! என்று, முறையிடினும் அறியாய், துயில் நீங்காது இருக் கிறாய். இதுதானோ மயிர்ச்சாந்தணிந்த கூந்தலையுடைய உனது தன்மை?