மாலன் போற்றும் மாட்டுப் பொங்கல் .. மனிதனும் மாடும் கலந்து களிக்கும்.. கூட்டுப்பொங்கல்!
- எம்.கே. திருப்பதி
மாலன் போற்றும்
மாட்டுப் பொங்கல்
மனிதனும் மாடும்
கலந்து களிக்கும்
கூட்டுப்பொங்கல்!
விளக்குக்கு
முந்தைய பொங்கல்
விலங்குக்கு
பிந்தைய பொங்கல்!
கால்நடையை கூட
கடவுளாய் பார்க்கும்
கருணைதான் எங்கள்
கலாச்சார கல்வி!
பால்சுரக்கும் பசுவை
பாரமாய் சுமக்கலாம்
சிசுவாய் அணைத்து
சிரத்தில் ஏற்றலாம்!
ஏர்பூட்டும் எருதுக்கு
ஏற்றம் விழைக்க
ஆவன செய்யலாம்
ஆஸ்கர் விருதுக்கு!
அளவில்லா செல்வம்
அருளும் ஆடு
வளைந்து முன்
வணக்கம் போடு!
நன்றி மறவா
நல்ல ஜீவன்
நாயும் நமக்கு
நலந்தரு தேவன்!
கால்நடை காதல்
கடவுளின் காதல்
விலங்கின் விருப்பம்
விளைக்கும் திருப்பம்!
அலங்காரம் மனிதனின்
மகத்துவம் அல்ல
மற்ற உயிருக்கும்
மடை மாற்றுவோம் அந்த
மாண்பு மெல்ல!
ஆண்டில் ஒருநாள்
அதற்கான பெருநாள்!
அஃறிணையை
உயர்தினையாய் உள்ளுவோம்
கன்றையும் கறவையையும்
கடவுளாய் கொள்ளுவோம்!
ஐந்தறிவு
அதிசயங்களுக்கு
இறைவழிபாடு போல்
நிறைவழிபாடு செய்வோம்!
இரையும்
இதர வகையும்
வழங்கும் வள்ளல்களுக்கு
நீராட்டுவோம்
நிறைய பாராட்டுவோம்!
ஆவையும் விடையையும்
ஆராட்டுவோம்!
சீமந்த புத்திரர்களாய்
சீராட்டுவோம்!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)