ஆணும் பெண்ணும் சமம்!
- வே.ஜெயந்தி
குடும்பம் என்பது மனித வாழ்க்கையின் முதல் பள்ளி. அங்கு குழந்தைகள் பேச கற்றுக்கொள்கிறார்கள், பார்த்து கற்றுக்கொள்கிறார்கள், உணர்ந்து வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்கிறார்கள். அத்தகைய குடும்பத்திலேயே சமத்துவம் இல்லையென்றால், சமூகத்தில் அது எப்படி மலரும்?
இன்றைய காலத்தில் ஆண்களும் பெண்களும் இணைந்து உழைக்கும் குடும்பங்கள் அதிகரித்துள்ளன. ஒருவர் வெளியில் வேலை செய்து வருமானம் ஈட்டுகிறார், மற்றொருவர் வீட்டை நிர்வகிக்கிறார், அல்லது இருவருமே வேலைக்குச் செல்கிறார்கள். எந்த நிலையில் இருந்தாலும், குடும்பத்திற்காக செலுத்தப்படும் உழைப்பு ஒருபோதும் அளவிட முடியாதது.
சமீபத்தில் ஒரு உணவகத்தில் நடந்த ஒரு சம்பவம் இந்த உண்மையை ஆழமாக நினைவூட்டியது. கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையிலும், வீட்டுப் பொறுப்புகள் குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஒரு பெரிய சண்டையாக மாறியது. “நான் தான் சம்பாதிக்கிறேன்” “நானும் வேலைக்குச் செல்கிறேன்” என்ற வார்த்தைகள், அன்பை மறைத்து, அகந்தையை முன்வைத்தன.
அந்தச் சண்டையின் நடுவில் அழுதுகொண்டிருந்தது குழந்தைகளின் மனம். பெற்றோரின் கோப வார்த்தைகள்
அவர்களின் நினைவுகளில் ஆழமாக பதியக் கூடியவை. இன்றைய ஒரு சிறிய சண்டை, நாளைய ஒரு மனக்காயமாக மாறும் அபாயம் உண்டு. அப்போது ஒரு மனிதநேயமான வார்த்தை அந்த சூழ்நிலையை மாற்றியது.
“ஆண் பெண் என்ற வேறுபாடு குடும்பத்திற்குள் வரவே கூடாது. ‘நாம்’ என்ற எண்ணத்தில் வாழ்ந்தால் சண்டைக்கு இடமில்லை” என்ற அந்தச் சொற்கள் இருவரையும் சிந்திக்க வைத்தன. உண்மையில், குடும்பத்திற்காக உழைப்பதில்
ஆண்களின் பங்கும் பெண்களின் பங்கும் சமமே. ஒருவர் பணமாகக் கொடுப்பார், மற்றொருவர் நேரமாகக் கொடுப்பார். ஒருவர் வெளியுலகில் சோர்வடைவார், மற்றொருவர் வீட்டுக்குள் சோர்வடைவார். ஆனால் இருவருமே குடும்பம் என்ற ஒரே இலக்கிற்காக உழைக்கிறார்கள்.
சமத்துவம் என்பது யார் அதிகம் செய்கிறார் என்பதை கணக்கிடுவது அல்ல. யார் செய்தாலும் அதை மதிப்பது தான்.
புரிதலும் மரியாதையும் இருந்தால், பொறுப்புகள் சுமையாக மாறாது; அவை பகிர்வாக மாறும். இன்றைய குழந்தைகளே நாளைய சமூகத்தின் அடித்தளம். அவர்கள் கண்முன்னே அன்பும் மரியாதையும் நடைமுறையில் இருந்தால், அவர்களும் அதையே வாழ்க்கையில் கடைப்பிடிப்பார்கள். சமத்துவம் வீட்டிலிருந்து தொடங்கினால், சமூகம் தானாகவே மாறும். புரிந்து வாழும் குடும்பம் சொர்க்கம் தான்.
(வே.ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு மாவட்டம்)