திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்

Su.tha Arivalagan
May 22, 2026,01:56 PM IST

சென்னை: தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து, தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கமளித்தார். திமுக, அதிமுக, விசிக மற்றும் அமைச்சரவை நியமனங்கள் குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.


செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதன் முழு விவரங்கள் பின்வருமாறு:


ஆ.ராசா மன்னிப்பு கோர வேண்டும்




அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) குறித்து திமுகவினர் விமர்சனம் செய்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், "திமுகவிடம் கண்ணியம், கோட்பாடு மற்றும் கட்டுப்பாடு ஆகியவை இல்லை. விசிக தலைவர் தொல். திருமாவளவனை விமர்சிக்கும் வகையில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அவரிடம் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். மேலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய ஆ.ராசாவை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், கனிமொழியும் கடுமையாகக் கண்டிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.


அதிமுகவிடம் ஆதரவு கேட்காதது ஏன்?

ஆட்சி அமைப்பது மற்றும் அரசியல் கூட்டணிக் கொள்கைகள் குறித்துப் பேசிய அமைச்சர், தங்களின் மதச்சார்பற்ற நிலைப்பாட்டை திட்டவட்டமாக மறுஉறுதி செய்தார். "தேர்தலுக்கு பிறகு நாங்கள் அதிமுகவிடம் ஆதரவு கேட்டிருந்தால், எங்களால் மிக எளிதாக ஆட்சி அமைத்திருக்க முடியும். ஆனால், மதச்சார்பற்ற கொள்கையின் அடிப்படையில் மட்டுமே ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக நின்றோம். கொள்கைக்காகவே அந்த வாய்ப்பை நாங்கள் தவிர்த்தோம்" என்று அவர் குறிப்பிட்டார்.


சாதி பார்த்து அமைச்சர் பதவி அளித்தோமா?

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக ரமேஷ் நியமிக்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடுமையான பதிலடி தந்துள்ளார். சாதியை அடிப்படையாகக் கொண்டு இந்த நியமனம் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரத்தைச் செய்து வருவதாக அவர் சாடினார். இதுதொடர்பாக விளக்கிய அவர், "இந்து அறநிலையத்துறைக்கு இந்தச் சாதியிலிருந்து தான் அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கிறார்கள். ரமேசை அமைச்சராக்கும் வரை, அவர் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்றே எங்களுக்குத் தெரியாது. திறமையின் அடிப்படையிலும், தகுதியின் அடிப்படையிலுமே இந்த நியமனம் நடைபெற்றுள்ளது" என்று தெளிவுபடுத்தினார்.


தமிழக அரசியலில் கூட்டணி மற்றும் சாதிய விவகாரங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இன்று வெளியிட்டுள்ள இந்த அதிரடி கருத்துக்கள், தற்போதைய அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதோடு, கடந்த ஒரு வாரத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.