எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
- எம்.கே. திருப்பதி
தூரிகை கொண்டு
ஓவியம் தீட்டும்
ஒவ்வொருவருக்கும்
என் கை கூப்பு!
உலகில்
உள்ள கலைகளில்
உங்கள்
ஓவியக்கலையே
மூப்பு!
வர்ணங்கள் உங்களிடம்
வாய்பொத்தி நிற்கும்!
கலைமகள் உங்களிடம்
கலைகளை
கைகட்டி கற்கும்!
கடவுளர் திருவுரு
கண்டேன் உன்னால்
காடுகளின் காட்சியை
கண்களில் உண்டேன் உன்னால்!
மட்டச் சுவர்களில்
கிட்ட காட்டினாய்
கீர்த்தி மிகு வடிவங்கள்
தட்டை பரப்பில் நீ
மேடு பள்ளம் காட்டினாய்
குட்டை குளங்களை நீ
கண்கள் குளிர குளிர
கலையில் கொட்டினாய்!
உன்னால்
அயோத்தி ராமனின்
அம்புவில் பார்த்தேன்
துவரை மன்னனின்
தோள் தொட்டு வேர்த்தேன்!
பாஞ்சாலிப் பெண்ணின்
பரந்த கூந்தல் பார்த்தேன்
பீஷ்மப் பிதாமகனின்
பெருந்தோள் பார்த்தேன்!
தர்மராஜனின்
தர்ம முகம் கண்டேன்
கர்ம வீரன் கர்ணனின்
கனிவையும் கண்டேன்!
'எடுக்கவோ கோர்க்கவோ '
ஏட்டில் படித்ததை
ஏட்டில் பார்த்தேன்
பார்த்து பார்த்து
பரவசத்தில்
புதுப் பூவாய் பூத்தேன்!
தூயவன் துரோணன்
தோற்றம் கண்டேன்
மாயவன் மைந்தன்
ஏற்றம் கண்டேன்!
கைலாயம் கண்ணுற்றேன்!
கைலாயநாதன்
காரிகை கண்டு - இரு
கைகள் தொட்டேன்!
காம நாதனின்
கரும்பு வில் பார்த்தேன்
அஞ்சு பூக்களின்
அருங்கணை பார்த்தேன்!
செந்தாமரத் தேவி
திருவுரு கண்டேன்
கல்வியின் அதிபதி
கண்ணாறக் கண்டேன்!
வரலாற்றுத் தலைகளின்
கலைகளும் கண்டேன்
கரம் குவித்து நின்றேன்!
கற்பனை ஊற்றுகளின்
கனவுகள் நீ!
கனவுகளை இங்கு
காட்சிப்படுத்தும்
நனவுகள் நீ !
நான்முக நாயகன் போல்
நாளும் வணங்கத் தக்கவன்!
நா( ன் ) மகிழ
நன்றிகள் உரைக்க
நலமிக்கவன்!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்.)