சப்த கன்னியர், சப்த மாதர்கள் இரண்டும் ஒன்றா?

Su.tha Arivalagan
Sep 29, 2026,11:05 AM IST

- எம் .எல் .பிரபா


தமிழகத்தில் பல கிராமங்களில் ஆற்றங்கரை ஓரங்களில் குளக்கரைகளில் எல்லை தெய்வ கோவில்களில் சப்த கன்னியர் வழிபாடு மிகுந்த பக்தியுடன் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் பழமையான சிவன் கோவில்களில் சப்த மாதர்கள் என்ற தெய்வ சக்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை நாம் பார்க்கிறோம்.


இந்த இரண்டையும் பலர் ஒன்றாகவே நினைத்து வழிபட்டு வருகின்றனர். ஆனால் இரண்டும் வேறு வேறு.


சப்த மாதர்கள்


புராணங்களில் கூறப்படும் அம்பாளின் ஏழு பேராற்றல் வடிவங்களே சப்த மாதர்கள். அசுர சக்தியை அழிக்க தேவர்கள் தங்கள் சக்தி அம்சங்களை வெளிப்படுத்திய போது தோன்றிய தெய்வீக பெண் சக்திகள் தான் இந்த 'சப்த மாதர்கள்' என்று 'தேவி மகாத்மியம்' விளக்குகிறது.




1. பிராம்மி- பிரம்மாவின் சக்தி அம்சம்.

2. மகேஸ்வரி- சிவபெருமானின் சத்திஅம்சம்.

3. கௌமாரி- முருகனின் வீர சக்தி.

4. வைஷ்ணவி- மகாவிஷ்ணுவின் சக்தி வடிவம்.

5. வராகி- வராக அவதாரத்தின் அதிசய சக்தி.

6. இந்திராணி- இந்திரனின் தெய்வீக சக்தி.

7. சாமுண்டி- அசுரர்களை அழிக்கும் உக்கிர சக்தி.


இவர்கள் எல்லோரும் அம்பாளின் பரிபூரண சக்தி வடிவங்களாக போற்றப்படுகின்றனர். புராணங்களில் வரும் ரத்த பீஜன் போன்ற அசுரர்களை அழிக்க தேவி உருவாக்கிய தெய்வீக படையாக சப்தமாதர்கள் செயல்பட்டதாக கூறப்படுகிறது.


கோவில்களில் சப்த மாதர்கள்


பழமையான சிவன் கோவில்களுக்கு சென்றால் திருச்சுற்றில் வரிசையாக அமர்ந்திருக்கும் ஏழு பெண் தெய்வங்களை காணலாம். அவர்கள் தான் சப்த மாதர்கள்.


அவர்களின் அருகில் பெரும்பாலும் வீரபத்திரர், விநாயகர், பைரவர் போன்ற தெய்வங்களும் காணப்படுவார்கள். இவர்கள் ஆகம முறையில் வழிபடப்படும் தெய்வ சக்திகள். தொன்மையான காலங்களில் இந்த மாதர்கள் தனித்தனி தெய்வங்களாகவே வழிபட்டனர் என்றும் பின்னர் சைவ மற்றும் சக்தி மரபுகள் ஒன்றிணைந்த போது சப்த மாதர்கள் என்ற வழிபாட்டு முறை உருவானது என்றும் கூறப்படுகிறது.


சப்த கன்னியர்:


சப்த கன்னியர்கள் என்பது  புராண தெய்வங்கள் அல்ல.


மனிதர்களாக வாழ்ந்து தங்கள் வாழ்க்கையை தியாகமாக மாற்றிய பெண்கள் தெய்வ நிலை பெற்ற வடிவங்களாக கருதப்படுகிறார்கள்.


1. பல கிராமங்களில், பழங்காலத்தில் வாழ்ந்த திருமணம் ஆகாமல் உயிர் தியாகம் செய்த பெண்கள். 2. கிராமத்தை காப்பாற்ற தன்னை அர்ப்பணித்தவர்கள். 3. தவ வாழ்க்கை வாழ்ந்த பெண்கள். 4. அநீதிக்கு எதிராக நின்ற பெண்கள்.

இவர்களே பின்னர் தெய்வமாக வழிபட்டனர் என்று நம்பப்படுகிறது.


அதனால் தான் சப்த கன்னியர் வழிபாட்டில் ஒரு ஆழமான மனித உணர்வும் கிராமிய நினைவுகளும் இணைந்து இருக்கின்றன.


சப்த கன்னியர்களின் பெயர்கள்


பகுதி தோறும் பெயர்கள் மாறினாலும் பொதுவாக 1. பார்வதி அம்மன், 2. பட்டத்தாள், 3. அருந்தவம், 4. பூவாள், 5. பச்சையம்மன், 6. மற லியம்மன்( காத்தாயி) 7. பூங்காவனத்தம்மாள் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள்.


சில இடங்களில் பெயர்கள் மாறினாலும் அவர்கள் கிராமத்தை காக்கும் பெண் சக்திகள் என்பதுதான் மக்களின் நம்பிக்கை.


சப்த கன்னியர் கோயில்கள் பெரும்பாலும் ஆற்றங்கரை, குளக்கரை, கிராம எல்லைகள், காடு ஓரம் ,மலை அடிவாரம், போன்ற இடங்களில் அமைந்திருக்கும்.


ஏனெனில் இவர்கள் கிராமத்தின் காவல் தெய்வங்களாக கருதப்படுகிறார்கள்.


ஏழு கற்களில் இருந்து உருவான வழிபாடு:


பழைய காலங்களில் சப்த கன்னியர்களுக்கு சிலைகள் கிடையாது. ஏழு கற்களை நட்டு வைத்து மஞ்சள், குங்குமம் பூசி மக்கள் வழிபட்டார்கள். அந்த கற்கள் தான் அந்த பெண்களின் நினைவு சின்னங்களாக கருதப்பட்டன. பின்னர் காலப்போக்கில் பெண் உருவ சிலைகள் உருவாக்கப்பட்டு கோயில்கள் கட்டப்பட்டன. இன்றும் சில கிராமங்களில் சப்த கன்னியர்கள் வெறும் கற்களாகவே வழிபடப்படுகின்றனர்.


சில இடங்களில் அய்யனார், வீரபத்திரர் ,விநாயகர் ஆகிய தெய்வங்களும் இணைந்து வழிபடப்படுகிறார்கள். இது தமிழக கிராமிய ஆன்மீக மரபின் மிகப் பழமையான அடையாளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.


சப்த கன்னியர் வழிபாடு என்பது வெறும் கிராம வழிபாடு மட்டுமல்ல அது பெண்களின் தியாகம் பாதுகாப்பு ஆன்மீக சக்தி சமூக நினைவுகள் ஆகியவற்றின் உயிர் உள்ள வரலாறு. அதேபோல் சப்த மாதர்கள் வழிபாடு பிரபஞ்ச பெண் சக்தியின் புராண வடிவமாக கருதப்படுகிறது.


இரண்டும் வேறுபட்ட மரபுகள் என்றாலும் பெண் சக்தியை உயர்த்தி போற்றும் தமிழர் ஆன்மீக சிந்தனையின் இரண்டு பெரிய தூண்களாகவே இவை பார்க்கப்படுகின்றன.


(எம் .எல்.பிரபா, சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. தமிழ்நாடு நியூஸ் பேப்பர், பேப்பர் பாய், பன்முகம், மலர்வனம், விருட்சம், நான் போன்ற மின் இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவைகளும், தமிழ்நாடு நியூஸ் பேப்பரில் 'மாயக்கண்ணன் லீலை' என்ற தொடரும் எழுதியுள்ளார்)