Tuesday Special Recipe: நெல்லிக்காய் பச்சடி!
- எம்.எல்.பிரபா
நெல்லிக்காய் பச்சடி என்பது தமிழர்களின் பாரம்பரிய உணவுமுறையில் மிக முக்கிய இடத்தைப் பிடித்த ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவு வகை ஆகும்.
நெல்லிக்காயின் புளிப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடன், தயிர் மற்றும் காரசாரமான மசாலாக்கள் சேர்ந்து இந்த பச்சடி தயார் செய்யப்படுகிறது.
நெல்லிக்காய் பச்சடி செய்வது சுலபம்ங்க.. வாங்க எப்படிப் பண்ணலாம்னு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ஐந்து பெரிய நெல்லிக்காய், சிறிது தேங்காய் துருவல், பச்சை மிளகாய் இரண்டு, தயிர் ஒரு கப், ஜீரகம் ஒரு ஸ்பூன், தேவையான அளவு உப்பு, தாளிப்பதற்கு கடுகு ,கொஞ்சம் எண்ணெய்.
செய்முறை:
முதலில் பெரிய நெல்லிக்காயை குக்கரில் வேக வைக்க வேண்டும் .பிறகு அதனை எடுத்து கொட்டையை நீக்கி விடவும்.
அதனுடன் சிறிது தேங்காய் துருவல் பச்சை மிளகாய் எடுத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும். அரைத்த விழுதை ஒரு கிண்ணத்தில் மாற்றவும்.
கெட்டியான தயிர் ஒரு கப் எடுத்து உப்பையும் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு கடுகு தாளிக்கவும். பச்சடி தயார்.
சாதத்திலும் கலந்து சாப்பிடலாம். தனியாகவும் சாப்பிடலாம் கலவை சாதத்துடனும் சாப்பிடலாம்.
குறிப்பு:
1. நெல்லிக்காயில் விட்டமின் C உள்ளதால் உடலுக்கு நல்லது.
2. ஏகாதசி விரதம் இருந்து முடிந்த பிறகு மறுநாள் துவாதசி அன்று நெல்லிக்காய் பச்சடி உணவில் சேர்த்துக் கொள்வது விசேஷம்.
3.நெல்லிக்காயை இரவில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
(எம் .எல்.பிரபா, சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. தமிழ்நாடு நியூஸ் பேப்பர், பேப்பர் பாய், பன்முகம், மலர்வனம், விருட்சம், நான் போன்ற மின் இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவைகளும், தமிழ்நாடு நியூஸ் பேப்பரில் 'மாயக்கண்ணன் லீலை' என்ற தொடரும் எழுதியுள்ளார்)