மனிதநேயம்
- எம்.எல்.பிரபா
சுசீலா மாமி கையில் மஞ்சப்பைடன் விறு விறு என்று வேகமாக தெருவில் நடந்து வந்தாள். எதிரில் வந்த கௌரி "மாமி எங்கு கிளம்பிட்டீங்க"? என்றாள். "எங்க வீட்டு மாட்டுக்கு தீவனம் காலி ஆயிடுச்சு. அதான் வாங்க போயிட்டு இருக்கேன்" .
"நீ என்ன மத்தியானமே வந்துட்ட ? அகத்திக்கீரை , தண்டுக்கீரை எல்லாம் வேற மீதி இருக்கு! விக்கலையா"? என்று கேட்டாள் மாமி.
"இன்னைக்கு கீரையை யாரும் வாங்கவில்லை மாமி. ஞாயிற்றுக்கிழமை ஸ்கூல் வேற லீவு பசங்க எல்லாம் வீட்ல இருப்பாங்க அதான் சீக்கிரமா வந்துட்டேன்" என்று சொல்லி முடிப்பதற்குள் தலைசுற்றி கீழே விழுந்தாள் கௌரி.
கௌரி.. கௌரி என்ன ஆச்சு?
சட்டென்று சுசிலா மாமி எதிரில் இருந்த கடையில் ஒரு தண்ணீர் பாட்டிலும், ஜூசும் வாங்கிக் கொண்டு வந்தாள். கௌரியின் முகத்தில் தண்ணீர் தெளித்தாள். அப்படியே அவளை எழுப்பி உட்கார வைத்து ஜூசை குடிக்க சொன்னாள்.
மயக்கம் தெளிந்த கௌரியிடம் "ஏன் காலையிலேந்து சாப்பிடவே இல்லையா"? என்று கேட்டாள் சுசீலா மாமி.
"இல்ல மாமி,வீட்டுக்கு சீக்கிரம் போய் சாப்பிடலாம் என்று நினைத்தேன். அதற்குள் கண்ணு இருட்டிக்கிட்டு வந்துருச்சு".
மாமி.. ஜூசுக்கு காசு என்று இழுத்தாள்.
"ஒன்னும் வேணாம் வீட்டுக்கு பத்திரமா போய் சேரு".
மீதி இருந்த விக்காத அகத்திக் கீரையும், தண்டுக்கீரையும் எடுத்து "மாட்டுக்கு தீவனமாக வச்சுக்கோங்க" என்று கொடுத்தாள்.
சுசீலா மாமி புன்னகையுடன் கௌரியின் முகத்தைப் பார்த்தாள். அந்த சோர்விலும் அவள் கண்களில் நன்றி கலந்த அன்பு தெரிந்தது.
(எம் .எல்.பிரபா, சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. தமிழ்நாடு நியூஸ் பேப்பர், பேப்பர் பாய், பன்முகம், மலர்வனம், விருட்சம், நான் போன்ற மின் இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவைகளும், தமிழ்நாடு நியூஸ் பேப்பரில் 'மாயக்கண்ணன் லீலை' என்ற தொடரும் எழுதியுள்ளார்)