யார் பாசம் பெரியது?
- எம் .எல்.பிரபா
சாமிக்கண்ணு தன்னுடைய மகள் சரோஜா மீது அதிக பாசம் கொண்டவர். கிராமத்தில் இருந்து அடிக்கடி மகளின் வீட்டிற்கு சென்று மகளையும், பேரக் குழந்தைகளையும் பார்க்கச் செல்வார். அவர் வேர்கடலை, காய்கறி, பழங்கள் மற்றும் ரேஷன் பொருள்களில் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு இரண்டு பெரிய பைகளில் வைத்து நிரப்பிக் கொண்டார்.
ஒன்றை தோளிலும், மற்றொன்றை கையிலும் பிடித்தவாறு பஸ்ஸிலிருந்து இறங்கி மகள் வீட்டிற்கு சென்றார். 'சரோ'...என்ற அப்பாவின் குரலைக் கேட்டு வாசலுக்கு ஓடி வந்தாள் சரோஜா. கையில் இருந்த பையை வாங்கினாள். "வேகாத வெயிலில் ஏம்பா நடந்து வரீங்க? ஒரு ஆட்டோவை புடிச்சுகிட்டு வரக்கூடாது "என்று கடிந்து கொண்டாள். "இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி சுமப்பீங்க"? என்றாள் சரோஜா.
அப்போ என் பசங்களுக்காக சுமந்தேன். இப்போ என் பேர பசங்களுக்காக சுமக்கிறேன். இது என் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதோட "என் உடம்பு வைரம் பாஞ்ச கட்டை எல்லாத்தையும் தாங்கும்" என்று சிரித்துக் கொண்டே வீட்டிற்குள் வந்தார் சாமிக்கண்ணு.
"வாங்க மாமா வாங்க" என்றார் ரமேஷ்.
மாப்ள... நல்லா இருக்கீங்களா?
நல்லா இருக்கேன் மாமா.நேத்து வீட்டில் சர்க்கரை காலி ஆயிடுச்சுன்னு சரோஜா சொன்னா. நான் வாங்கிட்டு வரேன்னு சொன்னேன். ஆனா, சரோ தான் "நிச்சயம் எங்க அப்பா ரேஷன் சாமான் எல்லாம் வாங்கிக்கொண்டு வந்துருவாரு நீங்க வேணா பாருங்க" அப்படின்னு சொன்னா .அதே போல் நீங்களும் வாங்கி வந்துட்டீங்க. "இதுதான் அப்பா பாசமா "? என்றான் ரமேஷ்.
சாமி கண்ணுக்கு கண்ணில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வந்தது.
ரமேஷின் போன் அடித்தது.சரி, மாமா.. நீங்க பேசிக்கிட்டு இருங்க. "நான் போன் பேசிட்டு வரேன்" என்று சொல்லிவிட்டு சென்றான் ரமேஷ்.
ஹலோ! அப்பா நல்லா இருக்கீங்களா?
நான் நல்லாவே இல்லடா.. எப்படி இருக்க முடியும்? "தேதி 8 ஆச்சு இன்னும் நீ பணமே அனுப்பல. எப்படி நானும், அம்மாவும் வாழ்க்கையை ஓட்டறது "என்று சத்தம் போட்டார்.
"ஒவ்வொரு மாசமும் நான் கரெக்டா பணம் அனுப்பி விடுவேன். இந்த மாசம் கொஞ்சம் லேட்டாயிடுச்சு. நேத்திக்கு தான் எனக்கு சம்பளம் கிடைத்தது. சரி நாளைக்கு அனுப்பலாம்னு நினைச்சேன்."
அதுவரைக்கும் வயிறு பசிக்காம இருக்குமா? _ இது அப்பா.
சரி.. சரி.. போன அம்மா கிட்ட குடுங்க.
ஹலோ !..ரமேஷ் எப்படி டா இருக்க? சரோ, குழந்தைங்க எல்லாரும் எப்படி இருக்காங்க? என்று விசாரித்தாள் அம்மா.
நீங்க ரெண்டு பேரும், பேசினதையும் நான் கேட்டுகிட்டு தான் இருந்தேன். வருத்தப்படாத; உன்ன பத்தி எனக்கு தெரியாதா? என்று சமாதானப்படுத்தினாள் அம்மா.
பாருமா, இந்த அப்பாவுக்கு என் மேல பாசமே இல்ல. எப்படி கத்துறார் பாரு?
மாசா மாசம் நீ அனுப்புற பணத்துல செலவு போக கொஞ்சம் சேர்த்து வைத்திருந்தேன். பக்கத்து வீட்டு பாமா அவசரமா, ஆஸ்பத்திரிக்கு போகணும்னு செலவுக்கு கேட்டா. நான் கொடுத்துட்டேன். என்கிட்ட காசு இல்ல. அப்பா கிட்டயும் காசு இல்ல.அதனால தான் அவர் அப்படி பேசிட்டார். வருத்தப்படாத ; என்றாள் அம்மா.
நீ மட்டும் எப்படிமா, பாசமா பேசுற?
"பொதுவா அம்மாக்களுக்கு பிள்ளைங்க மேல பாசம் அதிகமாக இருக்கும். அப்பாக்களுக்கு பொண்ணுங்க மேல பாசம் அதிகமா இருக்கும்." இது எல்லார் வீட்டிலும் நடக்குற ஒரு விஷயம் தான். "அப்பாவுக்கும் உன் மேல பாசம் உண்டு. கவலைப்படாதே"என்றாள் அம்மா. இப்போ து ரமேஷின் கண்ணில் இருந்து ஆனந்த கண்ணீர் வந்தது.
(எம் .எல்.பிரபா, சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. தமிழ்நாடு நியூஸ் பேப்பர், பேப்பர் பாய், பன்முகம், மலர்வனம், விருட்சம், நான் போன்ற மின் இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவைகளும், தமிழ்நாடு நியூஸ் பேப்பரில் 'மாயக்கண்ணன் லீலை' என்ற தொடரும் எழுதியுள்ளார்)