Short Story: நம்பிக்கையே நிம்மதி!

Oct 15, 2026,02:31 PM IST

- சு.மலர்விழி


அன்று ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. பெண்கள் முளைப்பாரியைச் சுற்றிக் கும்மியடிக்க, மறுபுறம் வில்லுப்பாட்டும் ஒலித்தது. திருவிழாவின் இறுதி நாள் என்பதால் ஊரே மகிழ்ச்சியில் திளைத்தது.


ஆனால், மகிழினி மட்டும் சோகத்துடன் தன் தந்தையின் வீட்டில் அமர்ந்திருந்தாள். அவளுடைய கணவன் வேலைக்காக வெளிநாட்டில் இருந்தான். கணவன் விரைவில் ஊர் திரும்ப வேண்டும் என்று பலமுறை இறைவனிடம் வேண்டியும் அது நிறைவேறாததால் அவள் வருத்தமடைந்திருந்தாள்.


மகளின் சோகத்தைக் கண்ட தந்தை, “என்னம்மா, இன்று சுவாமிகளின் தேர்கள் உன் வீட்டு வாசலுக்கு வருமே! வழக்கம்போல வழிபடச் செல்லவில்லையா?” என்று கேட்டார்.


“நான் எவ்வளவோ வேண்டியும் என் ஆசை நிறைவேறவில்லை அப்பா. அதனால், இந்த முறை வழிபடப் போவதில்லை!” என்றாள் மகிழினி.




தந்தை அவளிடம், “அம்மா, நாம் விரும்புவது எல்லாம் உடனே நடந்துவிடாது. இறைவழிபாடு என்பது நாம் கேட்டதைப் பெறுவதற்கான வியாபாரம் அல்ல. வேண்டுதல் நிறைவேறத் தாமதமானாலும் நம்பிக்கையையும் மன உறுதியையும் இழக்கக் கூடாது” என்று அறிவுரை கூறினார்.


தந்தையின் வார்த்தைகளால் மனமாற்றம் அடைந்த மகிழினி, தன் வீட்டிற்குச் சென்று சுவாமிகளின் தேர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று வழிபட்டாள்.


அன்று அவள் ஒரு முக்கியமான உண்மையை உணர்ந்தாள் .நாம் விரும்பியது உடனே கிடைக்காவிட்டாலும், நம்பிக்கையுடன் வாழ்வதே உண்மையான மனநிம்மதி! என்று உணர்ந்தாள்.


(சு.மலர்விழி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, தி.புதுப்பட்டி.திருமங்கலம் ஒன்றியம், மதுரை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்