தொகுதி சீரமைப்பு மசோதா: இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கையை நிராகரித்தது திமுக!

Nov 29, 2026,05:58 PM IST

சென்னை:  நாடாளுமன்றத்தில் நாளை கொண்டு வரப்படவுள்ள திருத்தப்பட்ட 'தொகுதி சீரமைப்பு மசோதாவுக்கு' (Delimitation Bill) முதலில் ஆதரவு தருவதாக கூறியிருந்த நிலைப்பாட்டில் தாங்கள் உறுதியாக இருப்பதாக திமுக கூறி விட்டது. இன்று மாலை தன்னை வீடு தேடி வந்து சந்தித்த இந்தியா கூட்டணி தலைவர்களிடம் இதை மு.க.ஸ்டாலின் தெரிவித்து விட்டார். இதனால் இந்தியா கூட்டணி பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளது.


திமுகவின் இந்த நிலைப்பாடு, பாஜகவுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.


இந்திய அரசியலில் இப்போது 'தொகுதி சீரமைப்பு' என்பது மிக முக்கிய பேசு பொருளாகியுள்ளளது. ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் மக்கள்தொகை மாற்றத்திற்கு ஏற்ப, எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. தொகுதிகளின் எல்லைகளையும், தொகுதிகளின் எண்ணிக்கையையும் மாற்றி அமைப்பதே 'தொகுதி சீரமைப்பு' எனப்படுகிறது. எல்லாத் தொகுதிகளிலும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான வாக்காளர்கள் இருக்க வேண்டும் என்பதற்காக இது செய்யப்படுகிறது.




மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் திட்டங்களை மாநிலங்கள் சரியாகச் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக, 1976-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் மூலம், 2000-ஆம் ஆண்டு வரை தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் 2001-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மற்றொரு சட்டத்தின் மூலம், இந்தத் தடை மேலும் 25 ஆண்டுகளுக்கு—அதாவது 2026-க்குப் பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரும் வரை நீட்டிக்கப்பட்டது. 2026-ஆம் ஆண்டுடன் இந்தக் காலக்கெடு முடிவுக்கு வருவதால், புதிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்ற மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதான் இப்போது பெரிய சர்ச்சையாகியுள்ளது.


இந்தத் தொகுதி சீரமைப்பு குறித்து அரசியல் கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துகள் உள்ளன. 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைப் படியே இன்றும் நாடாளுமன்றத்தில் 543 தொகுதிகள் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை பல மடங்கு உயர்ந்துவிட்டதால், ஒரு எம்.பி. மிக அதிகமான மக்களுக்குப் பிரதிநிதியாக இருக்க வேண்டியுள்ளது. இதைச் சரிசெய்ய, மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகளுக்கு ஏற்பத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று சில சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.


ஆனால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய தென் மாநில அரசுகளும் கட்சிகளும் இது குறித்துக் கவலை தெரிவித்துள்ளன. கடந்த பல ஆண்டுகளாக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியதால், தென் மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சி குறைந்துள்ளது. ஆனால், வட மாநிலங்களில் மக்கள்தொகை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. 



இப்போது புதிய மக்கள்தொகைப்படி தொகுதிகளைப் பிரித்தால், வட மாநிலங்களுக்கு எம்.பி. தொகுதிகள் அதிகமாகக் கிடைக்கும்; ஆனால் தென் மாநிலங்களுக்குத் தொகுதிகள் குறையவோ அல்லது அவற்றின் அரசியல் முக்கியத்துவம் குறையவோ வாய்ப்புள்ளது எனத் தலைவர்கள் வாதிடுகின்றனர். அப்படி நடந்தால், தென் மாநிலங்களின் ஆதரவு இல்லாமலேயே பாஜக எளிதாக ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பலம் பெற்றுவிடும், இதனால் நாட்டில் தென் மாநிலங்களின் முக்கியத்துவம் அடியோடு குறைந்துவிடும் என்பது இவர்களின் கவலையாக உள்ளது.


இதற்கும், 2023-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'பெண்கள் இடஒதுக்கீடுச் சட்டத்திற்கும்' நேரடித் தொடர்பு உள்ளது. அந்தச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவது, 2026-க்குப் பிந்தைய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி சீரமைப்புப் பணிகள் முடிந்த பிறகே அமலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.




இந்தச் சூழலில்தான், இந்த மசோதாவுக்கு திமுக திடீரென ஆதரவு தெரிவித்ததுடன், திமுக குழுவினர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் நேரில் சந்தித்துப் பேசினர். திமுக ஆதரவு கொடுத்தால் மசோதா எளிதில் நிறைவேறிவிடும், ஆதரவு தராவிட்டால் நிறைவேற்றுவது கடினம் என்பதால், இது 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.


இதைக் கருத்தில் கொண்டு இன்று டெல்லியிலிருந்து தனி விமானங்கள் மூலம் 'இந்தியா' கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் சென்னைக்கு விரைந்தனர். சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மமதா பானர்ஜி, ராகுல் காந்தி, எம்.ஏ. பேபி மற்றும் கர்நாடகா, தெலங்கானா, கேரள மாநில முதலமைச்சர்கள் எனப் பலரும் வந்திருந்தனர். 


தேசியத் தலைவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வீடு தேடி வந்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்தனை பேரின் கவனமும் சென்னைக்குத் திரும்பியது. ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். 


இந்தப் பேச்சுவார்த்தையின்போது தனது தரப்பு நியாயத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திக் கூறினார். ஆனால் நிலைப்பாட்டை மாற்றுமாறு இந்தியா கூட்டணித் தலைவர்கள் அழுத்தி வலியுறுத்தினர். குறிப்பாக மமதா பானர்ஜி உள்ளிட்டோர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினர். ஆனால் தனது தரப்பு வாதத்தை திமுக தெளிவாக எடுத்து வைத்து, இந்தியா கூட்டணியின் கோரிக்கையை நிராகரித்து விட்டார் மு.க.ஸ்டாலின்.




திமுகவின் இந்த முடிவால் பாஜக தரப்பு பெரும் உற்சாகமடைந்துள்ளது. மறுபக்கம் இந்தியா கூட்டணி அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. 


தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் தற்போது 320 எம்.பிக்கள் உள்ளனர். மசோதாவை நிறைவேற்ற 360 எம்.பிக்கள் தேவை. திமுக (22 எம்பிக்கள்), சரத்பவார் கட்சி (8) மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (4) கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. திமுக தற்போது தனது நிலையை உறுதிப்படுத்தி விட்டதால், பாஜக தரப்பு நிம்மதி அடைந்துள்ளது.


திமுகவின் இந்த முடிவு, தேசிய அளவில் பெரும் பரபரப்பையும், புதிய அரசியல் கணக்குகளுக்கான அஸ்திவாரத்தையும் போடுவதாக அமைந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தொகுதி சீரமைப்பு மசோதா: இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கையை நிராகரித்தது திமுக!

news

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா 2026: ஆதரவு தெரிவிப்பதாக திமுக அறிவிப்பு!

news

"தொகுதி மறுவரையறை மசோதா: திமுகவுக்கு கிடைத்த வெற்றி" - மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி!

news

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி.. திருப்பரங்குன்றம் உச்சி மலைத் தூணில் தீபம் ஏற்றப்பட்டது!

news

“மகளிர் மசோதாவை நிறைவேற்றியே தீருவோம்”: வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி உறுதி

news

முகம் சிவந்து முறுவல் உதிர்த்து முத்தமிட்டு!

news

ஆதவன் – என் வாழ்வில் உதித்த அழகிய சூரியன்.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (19)

news

மைசூர் அரண்மனையிலிருந்து.. வேலூர் கோட்டைக்கு ஷிப்ட் ஆகி வந்த பிசிபேளாபாத்!

news

தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு மக்களவைத் தொகுதிகள் 39 லிருந்து 59 ஆக உயரும்

அதிகம் பார்க்கும் செய்திகள்