"தர்ப்ப சயனராமர்" என ராமர் அழைக்கப்படுவது ஏன்? - சென்னை to ராமேஸ்வரம் - ஆன்மீகப் பயணம் (3)
- எம்.எல்.பிரபா
ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வந்தோம்.மறுநாள் நாங்கள் எல்லோரும் வேன் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு பக்கத்தில் உள்ள கோயில்களுக்கு செல்ல முடிவு செய்தோம். காலை 6.00 மணிக்கு கடலில் சூரிய உதயத்தை பார்த்துக் கொண்டே சென்றோம். முதலில் திருப்புல்லாணி ஸ்ரீ ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலுக்கு சென்றோம். அந்தக் கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாக இருந்தது. 108 திவ்ய ஷேத்திரத்தில் இந்த கோவிலும் ஒன்று. திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் செய்யப்பட்ட கோவில்களில் இதுவும் ஒன்று.
ராமர் அவதாரம் புரிய தசரதர்க்கு அருள் புரிந்த பெருமாள் இவர் என்று இங்கு கூறப்படுகிறது. அதனால் இவரை "பெரிய பெருமாள்" என்றும் அழைக்கப்படுகிறார். நாங்கள் இக்கோயிலுக்கு செல்லுகையில் புனரமைப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. கோவிலில் பெரிய பிரகாரம், தூண்கள் போன்றவைகளுக்கு சுண்ணாம்பு பூச்சு மற்றும் வண்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கோயில் கோபுரங்களிலும் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
நாங்கள் கோவிலுக்கு உள்ளே சென்று அந்த கோவிலைப்பற்றி அங்கிருந்த அர்ச்சகர் இடம் கேட்டோம். அவர் சில விஷயங்களை பற்றி எங்களுக்கு கூறினார்.
புல்லவர், காலவர், கண்ணவர் எனும் மூன்று மகரிஷிகளின் தவத்திற்காக பெருமாள் அரச மரமாகவும், ஆதி ஜகன் நாத பெருமாளாகவும் காட்சி அளித்த திருத்தலம் என்று கூறப்படுகிறது. ராமர் இலங்கை செல்வதற்காக இங்கிருந்து பாலம் அமைக்க வேண்டும் என சமுத்திர ராஜனிடம் கேட்டதாகாவும் அவர் தாமதமாக வந்ததால் ராமர் அங்கேயே சமுத்திரக்கரையில் தர்பப்புற்களின் மீது படுத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அதனால் அங்குள்ள ராமர் "தர்ப்ப சயனராமர்" என்று அழைக்கப்படுகிறார். ராமர் சயன கோல த்தில் இருப்பது விசேஷம். தாமதமாக வந்ததற்காக சமுத்திர ராஜன், ராணியுடன் வந்து ராமரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது. சயனராமன் சன்னதிக்கு முன் அவர்களுக்கு சிலை அமைத்துள்ளதையும் காண்பித்து எங்களுக்கு விளக்கம் அளித்தார்கள்.
இக்கோவிலில் தாயார் பெயர் "பத்மாசினி தாயார்" இவருக்கு தனி சன்னதியும் உள்ளது. ஆண்டாள், தர்பசய னராமர், சந்தான கிருஷ்ணன், பட்டாபிஷேக ராமர் போன்ற தனி சன்னதிகளும் உள்ளன. ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட ஐந்து கோபுரங்கள் உள்ளன. இங்கு நரசிம்மர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் இது மிகவும் விசேஷமானது.
இங்கு தல விருட்சமாக அரசமரம் உள்ளது. சுவாமி சன்னதிக்கு பின்புறம் உள்ளது. இந்த மரத்தையும் மக்கள் பெருமாளாகவே வழிபடுகின்றனர். பிள்ளை வரம் வேண்டி பிரார்த்தனை செய்பவர்கள் இந்த அரச மரத்தை சுற்றி வணங்கி விட்டு அங்குள்ள நாகர் சிலைகளையும் வணங்குகிறார்கள். மஞ்சள் துணியில் தொட்டில் கட்டுகிறார்கள். அப்படி வேண்டிக் கொண்டால் குழந்தை பிறக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
இந்த ஊரில் பெருமாள் உற்சவமூர்த்தி வெள்ளிக்கிழமை தோறும் தாயார் பத்மாசினி தேவியுடன் சேர்த்து காட்சி தருகிறார். ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இங்குள்ள தாயாருக்கு 'கல்யாணவல்லி' என்றும் பெயர் உள்ளது. பெருமாளுக்கு ஸ்ரீ கல்யாண ஜெகநாதன் என்றும் கூறுகிறார்கள். விமானமோ கல்யாண விமானம். இங்கே பெருமாளை தரிசித்தால் சர்வ மங்களம் உண்டாகும். கல்யாணம் ஆகாதவர்களுக்கும் வேண்டிக் கொண்டால் கல்யாணம் ஆகும் என்றும் மக்களிடையே நம்பிக்கை உள்ளது.
திருப்புல்லாணியில் இருந்து நாலு கிலோ மீட்டர் தூரத்தில் தான் சேது கரை உள்ளது. ராமர் இங்கிருந்து தான் இலங்கை செல்ல பாலம் அமைத்ததாக கூறப்படுகிறது. இங்கு ஆஞ்சநேயருக்கு சன்னதி இருக்கிறது. இவர் இலங்கையை பார்த்தபடி காட்சி தருகிறார். இங்குள்ள கடலுக்கு 'ரத்னாகர தீர்த்தம் 'என்று அழைக்கப்படுகிறது. அமாவாசை நாட்களில் இங்கு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்கிறார்கள்.
இந்த ஊர் மிகவும் அமைதியாக இருக்கிறது. கோயிலுக்கு சென்று பெருமாளை தரிசித்து விட்டு வெளியே வரும்போது மனதில் இருந்த குழப்பங்கள் எல்லாம் தீர்ந்தது. மனமும் அமைதியாக இருந்தது .நாங்கள் எல்லோரும் திருப்தியுடன் மீண்டும் வேனுக்கு வந்தோம். அடுத்ததாக உத்திரகோசமங்கைக்கு செல்ல வேன் புறப்பட்டது.
பயணம் தொடரும்
(எம் .எல்.பிரபா, சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. தமிழ்நாடு நியூஸ் பேப்பர், பேப்பர் பாய், பன்முகம், மலர்வனம், விருட்சம், நான் போன்ற மின் இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவைகளும், தமிழ்நாடு நியூஸ் பேப்பரில் 'மாயக்கண்ணன் லீலை' என்ற தொடரும் எழுதியுள்ளார்)